காவல்துறையின் சந்தேக நபராக நோர்வே பிரதமர்!

காவல்துறையின் சந்தேக நபராக நோர்வே பிரதமர்!

நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையாரை சந்தேகநபராக கருதுவதாக நோர்வே காவல்துறை அறிவித்துள்ளது.

கொரோனா விதிமுறைகளை மீறினாரென சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பிரதமர் மீதான விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் நோர்வே காவல்துறை, இன்று இவ்வாறு அறிவித்துள்ளது. கடுமையான கொரோனா விதிமுறைகளை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென அரச சார்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், விதிமுறைகளை மீறிய பொதுமக்களுக்கு காவல்துறை தண்டனைகளும் வழங்கிவரும் அதேநேரத்தில், மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நாட்டின் பிரதமரே அவ்விதிமுறைகளை மீறியதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா விதிமுறைகளின்படி 10 இற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூட முடியாதென்ற விதிமுறை இருந்த நிலையில், பிரதமர் “Erna Solberg” அம்மையார், தனது 60 ஆவது அகவை நாளை அடையாளப்படுத்துமுகமாக நடத்திய விருந்துபசாரத்தில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் ஊடகங்களில் கசிய விடப்பட்டபோது, அதுபற்றி பெரிதும் பேசப்படாத நிலையை அரச மட்டம் கையாண்டிருந்தபோதும், கொரோனா விதிமுறைகளை மீறியதாக தண்டிக்கப்பட்ட பொதுமக்கள், சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டுமென போர்க்கொடி தூக்கியதையடுத்து இவ்விடயம் ஊடகங்களில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது.

எனினும், பிரதமரின் அகவை நாளையொட்டி நடைபெற்ற விருந்துபசாரத்தை ஒன்றுகூடலாக கருத்தமுடியாதென வாதங்களை முன்வைத்து, இவ்விடயத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஊடகங்கள் மென்மேலும் இது பற்றி செய்திகளை வெளியிட்டு வந்ததால் பிரதமரே ஆனாலும், சட்டத்துக்கு கட்டுப்படவேண்டிய நிலை தோன்றியுள்ளது.

இதுவிடயமாக தனது கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ள நிலையில், காவல்துறை அவர்மீதான பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பிரதமர் அம்மையாரை “சந்தேகநபர்” எனவும் அடையாளப்படுத்தியுள்ளதோடு, பிரதமரையும், அவரது கணவரையும் இன்று அழைத்து விசாரணை செய்துள்ளது.

சட்ட விதிமுறைகளை மீறியதற்காக, சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய நோர்வே பிரதமராகவிருந்த “Jan P Syse” அவர்கள் பதவி விலகியதும், பின்னதாக இன்னொரு சந்தர்ப்பத்தில் அமைச்சராக இருந்த “Fathma Banji” அம்மையார் பதவி விலகியதும் நோர்வே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வரலாறுகளின் அங்கமாக தற்போதைய பிரதமர் “Erna Solberg” அம்மையாரும் சேர்ந்துகொள்வாரா என்பது காவல்துறை விசாரணை முடிவில் தெளிவாகும்.

பகிர்ந்துகொள்ள