குற்றச்செயல்களில் ஈடுபடும் இளையோர் தொடர்பில் கடுமையான நடைமுறைகள்! நோர்வே அரசு தீவிரம்!!

குற்றச்செயல்களில் ஈடுபடும் இளையோர் தொடர்பில் கடுமையான நடைமுறைகள்! நோர்வே அரசு தீவிரம்!!

நோர்வேயில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் இளையோர்கள் தொடர்பில், மிக இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முனைப்பு காட்டவுள்ளது.

18 வயதுக்கு குறைந்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அவர்களுக்கு பெரும்பாலும் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை என்றாலும், அப்படியே தண்டனைகள் ஏதும் வழங்கப்பட்டாலும், சமூக சேவை தொடர்பான இலகுநிலை தண்டனைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

இளையோர்கள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதற்கு, வழங்கப்படும் தண்டனைகளின் கனதிக்குறைவும் காரணமென பல்லாண்டுகளாக சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. தவிரவும், உள்நாட்டுப்போர் போன்ற புறச்சூழல் காரணமாக இறுக்கமான மனோநிலையையும், வழிப்பறி, கொள்ளை போன்ற விடயங்களை சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனோநிலையையும் கொண்டுள்ள பலர் கடந்த ஆண்டுகளில் நோர்வேக்குள் ஏதிலிகளாக தஞ்சம் புகுந்துள்ள நிலையிலும் இளையோர் குற்றச்செயல்கள் நோர்வேயில், குறிப்பாக பெருநகரங்களில் அதிகரித்து காணப்படுகின்றன.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அரசு, 9 புதிய கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்தவுள்ளது. குறிப்பாக, சமூகத்துக்கு ஆபத்தானவர்களாக இனங்காணப்படும் இளையோர்களை, வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைப்பது மற்றும், அவர்களின் கால்களில் அவர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கும் இலத்திரனியல் சாதனங்களை பொருத்தி விடுவதன்மூலம், அவர்கள் சுயமாக எல்லா இடங்களிலும் நடமாட முடியாதபடி கட்டுப்படுத்தி வைப்பது போன்ற திட்டங்கள் பிரதானமானவை.

மேற்படி இறுக்கமான நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட இளையோர்களோ, அல்லது அவர்களின் பெற்றோர்களோ, இந்த இறுக்கமான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள