குழந்தைகள் பாதுகாப்பு விடயத்தில், பெற்றோரின் உரிமைகள் மீறப்பட்டதை அனுமதித்த நோர்வே உயர்நீதிமன்றம்! அம்பலப்படுத்தும் நோர்வே சட்டவாளர் “Fridtjof Piene Gundersen”!

குழந்தைகள் பாதுகாப்பு விடயத்தில், பெற்றோரின் உரிமைகள் மீறப்பட்டதை அனுமதித்த நோர்வே உயர்நீதிமன்றம்! அம்பலப்படுத்தும் நோர்வே சட்டவாளர் “Fridtjof Piene Gundersen”!

நோர்வேயில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நலன்களை பேணும் “Barnevern” என்ற சுயாதீன அமைப்பின் முறையற்ற செயற்பாடுகளை நோர்வேயின் உயர்நீதிமன்றம் நன்கு அறிந்திருந்தது என, குழந்தைகள்  மற்றும் குடும்பநல வழக்குகளை முன்னின்று நடத்திவரும் பிரபல வழக்கறிஞரான “Fridtjof Piene Gundersen” தெரிவித்துள்ளார்.

பல்வேறுகாரணங்களுக்காகவும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரித்தெடுக்கும் மேற்படி அமைப்பு, அக்குழந்தைகளை விசேட இடங்களில் வைத்து பராமரிப்பதோடு, குறிப்பிட்ட குழந்தைகளை, பெற்றோரின் சம்மதமில்லாமலே தன்னிச்சையாக வேறு நபர்களுக்கு தத்து கொடுப்பதையும் செய்து வருகிறது.

மேற்படி அமைப்பின் செயற்படுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் பெற்றோர், நீதிமன்றங்களில் தமக்கான நீதி கிடைக்காத பட்சத்தில் உயர்நீதி மன்றத்தை நாடியபோதும் அங்கும் அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட ஏராளமான சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நோர்வேயை பொறுத்தவரை நீதிமன்றங்களில் வழக்குகளை நடாத்துவது பெரும் பொருளாதார செலவை ஏற்படுத்தும் என்பது, பல விடயங்கள் நீதிமன்றங்களின் பார்வைக்கு வராமலேயே போய்விடுகின்ற அவலத்துக்கான  முதன்மை காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்படும் பிள்ளைகளை பெற்றோர் சந்திப்பதற்கு ஒரு வருடத்தில் சுமார் இரண்டிலிருந்து ஆறு தடவைகள் மட்டும் அனுமதிக்கப்படுவதும், அதிலும் ஒவ்வொரு தடவையும் சில மணித்தியாலங்களை மட்டுமே பெற்றோர் தமது பிள்ளைகளுடன் செலவிட அனுமதிக்கப்படுகிறது என்பதும், பெற்றோரின் உரிமை மீறப்படுவதை வெளிப்படுத்தும் பிரதான விடயங்களாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறான குழந்தைகள் தத்து பெற்றோரிடம் வளர்வதையும் பலசந்தர்ப்பங்களில் அனுமதித்திருக்கும் நோர்வேயின் உயர்நீதிமன்றம், மிகமிக குறைந்த தொடர்புகளையே குழந்தைகள் தமது பெற்றோருடன் கொண்டிருக்கும் அவலநிலையை கருத்திலெடுக்காமல், குழந்தைகளுக்கு தமது பெற்றோர் யாரென்று தெரிந்தால் போதுமானது என்ற கொள்கையின் அடிப்படையிலேயே தனது தீர்ப்புக்களை வழங்கியிருப்பதாகவும் குறித்த வழக்கறிஞர் சாடுகிறார்.

பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பிரித்தெடுக்கப்பட்டாலும், தகுந்த காலம் வாய்க்கும்போது, குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் சேர்க்கப்பட வேண்டும் என்பது கொள்கையளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட விடயமாக இருந்தாலும், பெற்றோரும், குழந்தைகளும் மிக குறைந்தளவு தொடர்புகளே வைத்திருக்க அனுமதிக்கப்படுவதால், பெற்றோருடனான குழந்தைகளின் மீளிணைவு நடக்காமலேயே போய்விடுவதாகவும் விசனம் தெரிவிக்கிறார் வழக்கறிஞர்.

குழந்தைகளின் பராமரிப்பு விடயங்களில் பெற்றோர் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களில், ஆரம்பநிலை விடயங்களை மாத்திரம் வைத்து முடிவுகளை எடுக்கும் “Barenevern” அமைப்பானது, விரைவிலேயே குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்தெடுத்து சென்றுவிடுவதாலும், முதல் நாளிலிருந்தே பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமிடையிலான தொடர்புகள் அறுக்கப்படுவதாலும் தவறுகளை திருத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்களை பெற்றோர் இழப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தைகளின் நலன்களுக்காகவே குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதாக சொல்லும் “Barenevern” அமைப்பானது, பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான தொடர்புகளை கணிசமானளவு மட்டுப்படுத்துவதால், கூடிய விரைவில் பெற்றோருடன் குழந்தைகள் மீளிணைக்கப்படவேண்டும் என்கிற கொள்கை முக்கியத்துவம் பெறாமலே போய்விடுவது மட்டுமல்லாது, பெரும்பாலும் நீதிமன்றங்களும்  “Barenevern” அமைப்பின் முடிவுகளையே தமது தீர்ப்புக்களில் பிரதிபலிப்பதாலும் பெற்றோருக்கான நீதியை வழங்குவதில் நீதிமன்றங்களும் தவறிழைக்கின்றன என கவலை தெரிவிக்கும் வழக்கறிஞர் “Fridtjof Piene Gundersen”, பல்லாண்டு காலங்களாக நோர்வேயின் நீதித்துறை இவ்வாறான விடயங்களில் சரிவர நடந்துகொள்ளவில்லையெனவும் கவலை தெரிவிக்கிறார்.

நோர்வே நீதித்துறையில் நியாயம் கிடைக்காத இவ்வாறான பல வழக்குகள் இப்போது ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட வழக்குகளில் இதுவரை 4 வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் நோர்வே நீதித்துறைக்கும், “Barnevern” அமைப்பிற்கும் எதிரானதாகவே இருக்கின்றன.

குறிப்பாக, பிறந்து மூன்றே மூன்று வாரங்கள் மட்டுமே நிரம்பிய குழந்தையொன்று அதனது தாயிடமிருந்து “Barnevern” அமைப்பினால் பிரித்தெடுக்கப்பட்ட விவகாரத்தில், குழந்தையும், தாயும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புக்கள் பெரும்பாலும் மறுக்கப்பட்டதால், தனது தாயை அறியாத நிலையிலேயே வளர்ந்த அக்குழந்தை மீண்டும் தாயுடன் மீளிணைவது சிரமமாக இருந்தமை தொடர்பிலான வழக்கு பிரதானமாக இருக்கிறது.

பிரித்தெடுக்கப்படும் குழந்தைகள், பெற்றோரின் சம்மதமில்லாமலேயே வேறு நபர்களுக்கு தத்து கொடுக்கப்படுவதை மனிதவுரிமை மீறலாகவே கருதும் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம், காரணம் எதுவாக இருந்தாலும், பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்படும்போது குறிப்பிட்ட குறுகிய காலத்தின் பின்னர் குழந்தைகளை மீண்டும் பெற்றோரிடம் மீளிணைக்க வேண்டிய முயற்சிகளை நோர்வே மேற்கொண்டிருக்க வேண்டுமெனவும் இடித்துரைத்துள்ளது.

நோர்வேயின் உயர்நீதிமன்றமானது நோர்வேயின் அடிப்படை சட்டவிதிகளை பின்பற்றுவதோடு, ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தின் விதந்துரைகளையும் கவனத்தில் எடுக்கவேண்டிய கடப்பாட்டில் இருந்து தவறலாகாது என்றும் தெரிவிக்கும் வழக்கறிஞர் “Fridtjof Piene Gundersen”, நோர்வேயின் உயர்நீதிமன்றதிற்கு இது நன்றாக தெரிந்திருந்தும், ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தின் விதந்துரைகளை நோர்வே உயர்நீதிமன்றம் புறந்தள்ளியுள்ளதாக கருத இடமுண்டு என்றும் தெரிவித்திருக்கிறார்.

நோர்வேயின் உயர்நீதிமன்றம், தனது கடந்தகால குடும்பநல வழக்குகளில் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விதத்தில் நடந்துகொள்ளவில்லையென சாடும் வழக்கறிஞர், ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தின் விதந்துரைகளை பின்பற்றவேண்டிய கடப்பாட்டிலிருந்து நோர்வே உயர்நீதிமன்றம் தவறிவிட்டது என்றும், நோர்வேயின் குடும்பநல சட்டவிதிகளை தெரிந்தே மீறியிருக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்களால், பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் முறையற்ற விதத்தில் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டதில், ஏராளமான குழந்தைகள் திரும்பவும் பெற்றோரோடு மீளிணைய முடியாமலேயே போய்விட்டதாகவும், குடும்பநல வழக்குகளை பொறுத்தவரை, நோர்வேயின் சட்ட வரைமுறைகளை மீறும் விதத்தில் நடந்துகொண்டதாலும், ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தின் விதந்துரைகளை பின்பற்றாமல் உதாசீனம் செய்ததாலும், நோர்வேயின் உயர்நீதிமன்றமானது, “Barnevern” அமைப்பு தொடர்ந்தும் மனிதாபிமானமில்லாத நடைமுறைகளை பின்பற்றுவதற்கு உந்துதலாக இருந்திருக்கிறதெனவும் வழக்கறிஞர் “Fridtjof Piene Gundersen” கவலை தெரிவிக்கிறார்.

எனினும், நோர்வேயின் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்களையும், “Barnevern” அமைப்பின் முடிவுகளையும் நீர்த்துப்போகச்செய்யும் விதத்தில் அமைந்துவரும் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்களால் விசனத்துக்குள்ளாகியிருக்கும் நோர்வேயின் உயர்நீதிமன்றம், ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் நலன்களை கருத்தில் கொள்ளவில்லை என்று கருத்துரைத்திருப்பதோடு, “Barnevern” அமைப்பு தொடர்பான வழக்குகளில், ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம் கொண்டிருக்கும் அணுகுமுறையானது சரியானதல்ல என்ற தனது கருத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் இப்போது இறங்கியிருப்பதாகவும், இதற்காக நோர்வேயின் சட்டவல்லுநர்களையும், மனநல வல்லுனர்களையும் துணைக்கு அழைத்திருக்கும் நோர்வேயின் உயர்நீதிமன்றம், “Barnevern” அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம் கொண்டிருக்கும் பார்வையை மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் வழக்கறிஞர் “Fridtjof Piene Gundersen” தெரிவிக்கிறார்.

இதேவேளை, ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரக்காத்திருக்கும் 35 குடும்பநல வழக்குகளும், நோர்வே உயர்நீதிமன்றத்தால் முன்னதாக நிராகரிக்கப்பட்டவை என்பதும், ஐரோப்பாவில் மனிதவுரிமைகள் மீறப்படுவதாக கருதப்படும் நாடுகள் வரிசையில் நோர்வே மூன்றாவது இடத்திலும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த