செய்திக்குறிப்பு
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குழந்தைகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்ட தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு தனது புதிய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகள் இனப்படுகொலை நோக்கம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களாக அமையக்கூடும் என்று அந்த அறிக்கை கூறுகிறதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் (Reuters) தெரிவிக்கிறது.
அறிக்கையின்படி, 2023 அக்டோபர் முதல் 2025 அக்டோபர் வரை காசா போரில் உயிரிழந்தவர்களில் சுமார் 30 சதவீதம் குழந்தைகள் ஆவர். குறைந்தது 20,179 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 44,000-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள், துல்லியத் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் அதிக வெடிப்பு சக்தி கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் அகதி முகாம்கள் போன்ற குழந்தைகள் அதிகமாக இருந்த இடங்கள் தாக்கப்பட்டதாகவும் விசாரணைக் குழு கூறியுள்ளது. குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கும் அபாயம் தெரிந்திருந்தும் இத்தகைய தாக்குதல்கள் தொடரப்பட்டதால் அவை திட்டமிட்டவையாக இருக்கலாம் என்று அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த அறிக்கையை இஸ்ரேல் அரசு கடுமையாக நிராகரித்துள்ளது. ஐ.நா. விசாரணைக் குழுவின் கண்டறிதல்களை “அவதூறான மற்றும் பொய்யானவை” என்று கூறியுள்ள இஸ்ரேல், தாம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முயற்சிப்பதாகவும், அறிக்கை ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கைகளை பற்றி குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இவ்வறிக்கை ஒரு சுயாதீன ஐ.நா. விசாரணைக் குழுவின் முடிவாகும். இது சர்வதேச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு அல்ல என்றாலும், எதிர்கால சட்ட நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படலாம்.
இதேவேளை, பாலஸ்தீனத்தை பொறுத்தவரையில், காலத்துக்குக்கலாம், குழந்தைகள், இளையவர்களை குறிவைத்து தாக்கியழிக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் இஸ்ரேல், இந்நடவடிக்கை மூலம் பாலஸ்தீனத்தின் பல தலைமுறைகளை அளிப்பதன் மூலம், அங்கு இனப்பரம்பல் உருவாகாதவாறு தடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
25.06.2026






