கொக்குத்தொடுவாயில் சிங்களவர்கள் நிலஆக்கிரமிப்பு முயற்சி!

You are currently viewing கொக்குத்தொடுவாயில் சிங்களவர்கள் நிலஆக்கிரமிப்பு முயற்சி!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை, நேற்று வெலி ஓயா பகுதியிலுள்ள சிங்களவர்கள், அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கொக்குத்தொடுவாய், பூமடுகண்டல் பகுதி என்பது தமிழர்களுடைய பூர்வீக மானாவாரி வயல் நிலங்களாகும். கொக்குத் தொடுவாய் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு தமது பகுதிகளிலிருந்து இடம்பெயரும் வரையில் பூமடு கண்டல் பகுதியில் 420ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொண்டுவந்திருந்தனர். இந் நிலையில் நீண்டகால இடப்பெயர்வின் பிற்பாடு கடந்த 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்குத் தொடுவாய் பகுதியைச்சேர்ந்த அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

இவ்வாறு மீள் குடியமர்த்தப்பட்ட பிற்பாடு பூமடுகண்டல் பகுதியில் 138ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்திருந்தனர். இந் நிலையில் தற்போது அப் பகுதியில் பெரும்போக மானாவாரி நெற்பயிர்ச்செய்கைக்கான ஆயத்தப்பணிகளில், வயல்நிலங்களுக்குரிய தமிழ் மக்கள் ஈடுபடும்போது, வெலி ஓயா பகுதியைச்சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் அதற்கு இடையூறு விளைவிப்பதுடன், குறித்த விவசாய நிலங்களில் தாம் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் இது தொடர்பில் அப்பகுதித் தமிழ் மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரிடம் முறையிட்டிருந்தனர். அதற்கமைய 12.09.2021நேற்று குறித்த பகுதிக்குச்சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நிலைமைகளை ஆராய்ந்தனர்.

அப்போது அங்கு பெரும்பான்மை இனத்தவர்கள் பலர் தமிழ் மக்களின் குறித்த பூர்வீக வயல்நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும், அங்கு சென்ற தமிழ்மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்களுக்குமிடையில் வாய்த்தர்க்கங்கள் இடம்பெற்றதுடன், அபகரிப்பு முயற்சி தடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அப் பகுதிக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் வருகைதந்திருந்தார். குறித்த உத்தியோகத்தருக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, பிறிதொருநாளில் மாவட்டசெயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலர் தலைமையில் குறித்த காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வது என்ற முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாயில் சிங்களவர்கள் நிலஆக்கிரமிப்பு முயற்சி! 1
கொக்குத்தொடுவாயில் சிங்களவர்கள் நிலஆக்கிரமிப்பு முயற்சி! 2
கொக்குத்தொடுவாயில் சிங்களவர்கள் நிலஆக்கிரமிப்பு முயற்சி! 3
கொக்குத்தொடுவாயில் சிங்களவர்கள் நிலஆக்கிரமிப்பு முயற்சி! 4
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments