கொரோனா விவகாரம் ; சீனா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்க மசோதா!

கொரோனா விவகாரம் ; சீனா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்க மசோதா!

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதிக அளவாக, அமெரிக்காவில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்து உரிய நேரத்தில் தகவல் அளிக்காமல், பெரும் நாசத்துக்கு காரணமாகி விட்டதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகின்றார்.

இந்நிலையில், அமெரிக்க செனட் சபையில், செல்வாக்குள்ள 9 உறுப்பினர்கள், சீனா மீது பொருளாதார தடை விதிக்கக்கோரும் மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.

அமெரிக்க செனட் உறுப்பினர் Lindsey Graham வடிவமைத்த “கொரோனா பொறுப்புடைமை சட்டம்” என்ற சட்டத்தை 8 செனட் உறுப்பினர்கள் வழிமொழிந்து கையெழுத்திட்டுள்ளனர்.

மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் எப்படி உருவானது? என்பது பற்றி அமெரிக்காவோ, அதன் கூட்டாளிகளோ அல்லது உலக சுகாதார நிறுவனம் போன்ற ஐ.நா. அமைப்புகளோ நடத்தும் விசாரணைக்கு ஒத்துழைத்து சீனா அனைத்து தகவல்களையும் அளிக்க வேண்டும்.

மேலும், மனிதர்களுக்கு வைரசை பரப்பும் விலங்குகள் சந்தைகளை சீனா மூட வேண்டும். இவற்றையெல்லாம் சீனா செய்து விட்டதாக 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

அப்படி அளிக்காவிட்டால், சீனா மீது பொருளாதாரத்தடை விதிக்க டிரம்புக்கு அதிகாரம் அளிக்கப்படும். சொத்துகள் முடக்கம், பயண தடை, நுழைவுச்சான்று ரத்து, சீன வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை தடை செய்தல், சீன நிறுவனங்கள், அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியிலிடப்படுவதை தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளை அவர் எடுக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, Lindsey Graham உள்ளிட்ட செனட் உறுப்பினர்கள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் எப்படி உருவானது? என்பதை நாம் கண்டுபிடிப்பதுடன், சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையை மூட வேண்டும். இந்த விசாரணைக்கு சீனா தானாக ஒத்துழைக்காது. கட்டாயப்படுத்தினால்தான் சம்மதிக்கும்.

சீன கம்யூனிஸ்டு கட்சியின் வஞ்சகம் இல்லாமல் அமெரிக்காவில் வைரஸ் நுழைந்திருக்காது. எனவே, இதற்கு கம்யூனிஸ்டு கட்சியை பொறுப்பாக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் எந்த வைரசும் பரவாமல் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments