கொரோனா வைரஸ் தாக்குதல்: அமெரிக்காவின் உதவியை ஏற்கும் சீனா!

கொரோனா வைரஸ் தாக்குதல்: அமெரிக்காவின் உதவியை ஏற்கும் சீனா!

சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கும் கொரோனா வைரசைப் பற்றி அனைவரும் அறிந்ததே. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரஸ் உலகம் முழுவதிலும் 23 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், தாய்லாந்து, தைவான், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகள் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே தாய்லாந்து நாட்டில் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி சீனாவில் 361 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தனர் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்தது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சீனா தேசிய சுகாதார ஆணையம் கூறுகையில், ‘சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 64 பேர் பலியாகினர். அவர்கள் அனைவரும் ஹுபேய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. ஹாங்காங் மற்றும் ரஷ்யா நாடுகள் சீனாவுடனான எல்லையை மூடின. அதேபோல், சீனாவில் இருக்கும் 21 வயதுக்கு உட்பட்ட அனைத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டது.

அப்படி சீனாவில் இருந்து வரும் அமெரிக்கர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அமெரிக்க சுகாதாரத்துறை அறிவித்தது. இதற்கிடையே, உலக நாடுகளில் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் பரவுவதற்கு அமெரிக்காவே காரணம் என சீனா குற்றம் சாட்டியது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா உதவிகளை வழங்குவதற்கு பதிலாக உலக நாடுகளிடம் வைரஸ் குறித்து அச்சத்தை உருவாக்கி அதனை பரப்பி வருகிறது என சீன வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராட அமெரிக்காவின் உதவியை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.

‘கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு உதவி வழங்க அமெரிக்கா பலமுறை தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது. தேவையான உதவி விரைவில் வழங்கப்படும் என்று நம்புகிறோம்’ என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் அமைச்சகத்தின் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொரோனா வைரஸைப் பற்றி ஆய்வு செய்வதற்கும், கட்டுப்படுத்த உதவுவதற்கும் அமெரிக்கா நிபுணர்களும் உடனிருந்து உதவுவார்கள் என்ற சலுகையை சீனா ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அரசு அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments