ஒஸ்லோ:
கொலம்பியாவின் மேற்கு பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளதுடன், 570-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி, தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள “Chocó பிராந்தியத்தின் San José del Palmar” பகுதியில் அமைந்திருந்தது. சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இந்த நூற்றாண்டில் கொலம்பியாவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Cali”, “Pereira”, “Quibdó” மற்றும் “Manizales” உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன், குறைந்தது 61 கட்டிடங்கள் முற்றாக இடிந்து விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் விமான நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அவசரகாலப் பணியாளர்களும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் அதிபர் “Abelardo de la Espriella”, தேசிய அவசரநிலையை அறிவித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். கொலம்பியாவுக்கு சர்வதேச நாடுகளும் அவசர உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் இன்னும் கணக்கிடப்பட்டு வருவதால், உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கைகள் மேலும் மாறக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11.08.2026






