சத்தியத்தின் பிள்ளை சத்தியமூர்த்தி!!!

சத்தியத்தின் பிள்ளை சத்தியமூர்த்தி!!!

தமிழினத்தின்
அரசியல்வாதிகள்
சிந்தனையாளர்
செய்தியாளர்
ஊடகவியலாளர்
அடக்குமுறையின்
அகன்ற வாயின்
கோரப்பசிக்கு 

உணவாகியது
நீண்ட பட்டியல்!

அந்தப் பட்டியலில்
ஊடகவியலாளர்
நிர்மலாராஐன் தொடக்கம்
தராக்கி சிவராம்
வரிசையில்
சத்தியம் தவறாத
சத்தியமூர்த்தியும்
விடுதலைக்காக
வித்தாகி வீழ்ந்தார்!

கொத்துக்கொத்தாக
வித்துடல்கள் வீழும்போதும்
நித்தம் தமிழர் தலைகளை
கொத்தி தின்னும்
கொத்தணி குண்டினது
நடுவிலும்
கூவி வரும் எறிகணை
நெருப்பிலும்
எம் உறவுகள் கருகிச்
சாகும் கணங்களில்
பிணங்களின் நடுவே நின்று
இனத்தின் இரணங்களை உலகின் எல்லைகளுக்கு
எடுத்துவந்த
உன்னத ஊடகவியலாளன்!

தலைவரின் மீது
கொண்ட பற்றும்
தாயகத்தின் மீதான
காதலும்
மனிதனாக இருக்கக்
கற்றுக்கொள்ளெனும்
தத்துவமும்
உயரிய சிந்தனையாக
இவருக்குள் உயிராக
வளர்ந்தது!

ஈழமுரசின்
கட்டுரையாளனாகவும்
தேசியத்தொலைக்காட்சியில்
நாள்தோறும் செய்தியாளனாகவும்
தேசியத்தின் பணியை
செவ்வனே செய்தவர்!

கொட்டும் கந்தக
மழைக்குள் நின்று
மக்களின் இழப்பை
உடனுக்குடன்
உலகமக்களுக்கு
பதிவுசெய்தபோது
சுதந்திரபுரத்தில்
எதிரியின் செல்வீச்சில்
எங்களை விட்டுப்பிரிந்து போனார்!

உடலால் பிரிந்து போனாலும் ஊடகப்பணியால் ஒருபோதும் பிரியமாட்டோம்!

எந்த மக்களுக்காக உங்கள் எழுதுகோல் எழுந்ததோ அந்த மக்களின் உரிமைக்காக எங்கள் எழுதுகோலும் உயரும்!

ஒரு ஊடகவியலாளன்
எப்படி இருக்கவேண்டும்
என்பதற்கு
சான்றாகிப்போன
சான்றோனுக்கு
ஒருகணம்
தலைசாய்த்து
ஊடகப்பணியை
தொடர்கின்றோம்!

✍தூயவன்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments