சவுதி அரேபியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா? : அரச குடும்பத்தினர் மூவர் கைது!

சவுதி அரேபியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா? : அரச குடும்பத்தினர் மூவர் கைது!

சவுதி அரேபியாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சித்ததாக மன்னர் தம்பி உள்பட அரச குடும்பத்தினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடைபெறுகிறது. மன்னராக 84 வயது சல்மான் உள்ளார். அவரது மகன், முகமது பின் சல்மான் (34) பட்டத்து இளவரசராக உள்ளார்.

சவுதி அரேபியாவை பொறுத்தவரை, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தியாக அங்கு உள்ளார்.

இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அதிரடியாக மன்னர் சல்மானின் தம்பி இளவரசர் அகமது பின் அப்துல் அஜிஸ் அல் சாவுத், நெருங்கிய உறவினரான இளவரசர் முகமது பின் நயீப், இவரது தம்பி இளவரசர் நவாப் பின் நயீப் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கருப்பு உடை அணிந்த அரச காவலர்கள் அவர்களை, அவர்களது வீடுகளில் இருந்து பிடித்துச் சென்றதாக அமெரிக்காவின் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகை கூறுகிறது.

அவர்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு சதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையொட்டி அந்த பத்திரிகை, “சிம்மாசனத்துக்கான போட்டியாளர்களாக கருதப்பட்டு வந்த இளவரசர் அகமது பின் அப்துல் அஜிஸ் அல் சாவுத், இளவரசர் முகமது பின் நயீப் ஆகியோர் மன்னரையும், பட்டத்து இளவரசரையும் கவிழ்க்க முயற்சித்தனர் என அரச நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு, சாகும் வரை சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கிறது.

ஒரே நேரத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 3 இளவரசர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி கேள்வி எழுப்பியபோது, சவுதி அரேபிய அதிகாரிகள் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

இந்த தடுப்பு காவல்கள் மற்றும் மத குருமார்கள், சமூக ஆர்வலர்கள், இளவரசர்கள், தொழில் அதிபர்கள் சிறைவாசத்தின் மூலம் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது அதிகார பிடியை வலுவாக்கி கொள்கிறார் என கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் கசோக்கியின் படுகொலையில் பட்டத்து இளவரசர் முகமது பின்சல்மான் மீது விமர்சனங்கள் எழுந்தது நினைவுகூரத்தக்கது.

சவுதி அரேபியாவை பொறுத்வரை, ராணுவம் முதல் பொருளாதாரம் வரையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் தன்வசம் வைத்துக்கொண்டு, மன்னர் சல்மானிடம் இருந்து அதிகாரத்தை முறைப்படி கைப்பற்றுவதற்கு முன்பாக உள்நாட்டு கருத்து வேறுபாடுகளை களைகிற வகையில் எடுத்துள்ள நடவடிக்கையாக இப்போதைய 3 இளவரசர்களின் கைது நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments