சவேந்திர சில்வாவிற்கு பயணத் தடை விதித்துள்ளமை சரியானதே ; சி.வி விக்னேஸ்வரன்!

சவேந்திர சில்வாவிற்கு பயணத் தடை விதித்துள்ளமை சரியானதே ; சி.வி விக்னேஸ்வரன்!

சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில்வாக்கெதிரான அமெரிக்காவின் பயணத்தடை மற்றைய நாடுகளும் பின்பற்றக் கூடிய ஒரு காரியமாக அமைகின்றது. இலங்கையில் படையணியினரால் ஆற்றப்பட்ட போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக சர்வதேச நாடுகள் வழக்குத் தொடர வேண்டிய அத்தியாவசிய கடப்பாட்டினை இந்தக் காரியம் கோடிட்டுக் காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் சார்பாக நான் என் கருத்தைத் தெரிவிக்கின்றேன். சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்கின்றார்கள். அமெரிக்க அரசின் செயலாளர் மைக் பொம்பியோவின் தீர்மானமாக போதிய நம்பத்தகு சாட்சியங்களின் அடிப்படையில் கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஆணையிடும் பொறுப்பின் அடிப்படையில் சில்வா ஈடுபட்டிருந்தார் என்று கண்டு சில்வாவை மதிப்புக்குரியவரற்ற ஒருவராக அடையாளம் கண்டுள்ளதை நாம் மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம்.

2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சில்வா சட்டத்திற்குப் புறம்பான சாகடித்தல்களை நடத்துமாறு ஆணையிட்டார் என்பதற்கு ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை சனல் 4 ஆவணப்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி மூலம் தரப்பட்ட அதன் அறிக்கையில், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோதாபய இராஜபக்ச அனுப்பிய ஆணையை சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது படையணி அலுவலர்களுக்கு மறு ஒலிபரப்பு செய்த போது பின்வரும் சில்வாவின் கட்டளையும் உள்ளடக்கப்பட்டுள்ளது- “செய்யக் கூடியதைச் செய்க! எவ்வாறாறெனினும் செய்க!….. (ஆனால்) முடிக்க வேண்டிய முறையில் அதை முடிவுக்குக் கொண்டு வரவும்!” சில்வாவின் இந்தக் கட்டளையானது தமிழ் மக்களின் பாரிய எண்ணிக்கையிலான படுகொலைகளுக்கு இடமளித்தது. அது அப்பாவி பொது மக்களையும் சரணடைந்த போராளிகளையும் (கெட்ட பெயரெடுத்த வெள்ளைக்கொடி நிகழ்வு) உள்ளடக்கியது.

சில்வாக்கெதிரான அமெரிக்காவின் பயணத்தடை மற்றைய நாடுகளும் பின்பற்றக் கூடிய ஒரு காரியமாக அமைகின்றது. இலங்கையில் படையணியினரால் ஆற்றப்பட்ட போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக சர்வதேச நாடுகள் வழக்குத் தொடர வேண்டிய அத்தியாவசிய கடப்பாட்டினை இந்தக் காரியம் கோடிட்டுக் காட்டுகிறது.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் தொடர் தீர்மானங்கள் பலவற்றை ஸ்ரீ லங்கா தொடர்ந்து நடைமுறைப்படுத்த மறுத்துவந்துள்ளது. அந்தத் தீர்மானங்கள் கலப்பு முறையான நீதிமன்றங்களை உருவாக்கி போர்க்குற்றவாளிகளை விசாரித்து தீர்ப்பு வழங்க வலியுறுத்தி வந்துள்ளன. சில்வாவை ஒரு துணிச்சலான வீரன் என்று பூச்சடிக்கப் பார்ப்போர், அப்பாவிப் பொது மக்களுக்கு வேண்டுமென்றே பொய்யாகப் பயங்கரவாதிகள் பட்டம் சூட்டிக் கொன்று தீர்த்தமை துணிச்சல் என்ற வார்த்தைக்குள்ளும் வீரத்தினுள்ளும் எவ்விதத்திலேனும் அடங்காதென்பதை உணர வேண்டும்.

துல்லியமான குற்றரீதியான பொறுப்புகளை சுமப்பவர்கள் என்று தெளிவாகக் காணப்படும் படையணியினர் யாவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கட்டாயமாக விசாரிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது அவ்வாறு விசாரிக்க வல்ல நியாயாதிக்கத்தினைக் கொண்ட மன்றமொன்றினால் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்.

ஐ.நா. பட்டயத்தின் VIIவது அத்தியாயத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் உலகளாவிய நியாயாதிக்கக் கோட்பாட்டின் கீழ் மற்றும் றோம் நியதிச்சட்ட வரைவில் கையெழுத்திடாத நாடுகளின் குடிமக்கள் சம்பந்தமாக குறித்த நியதிச்சட்ட ஏற்பாடுகளை அவர்கள் மீது நடைமுறைப்படுத்த கையாள வேண்டிய நடைபடிமுறை போன்றவற்றின் கீழ் சர்வதேச சமூகம் வழக்குத் தொடர இருக்கும் அதிகாரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து வந்த மூன்று இலங்கை அரசாங்கங்கள் பத்து வருடங்களுக்கு மேலாக குறித்த குற்றங்களை விசாரிப்பதைத் தட்டிக் கழித்து வந்ததில் இப்பொழுதாவது சட்டத்தின் அதிகாரம் கட்டாயமாக நிலைநிறுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் ஒரு முக்கிய கூட்டம் தற்பொது பரிணமித்துள்ளது. “கள களதே பள பளவே” என்பது ஒரு சிங்களப் பழமொழி. முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும்” என்பது அதன் அர்த்தம்  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments