சிந்தனைச் சிறகு சிவகுமாரன்!!

You are currently viewing சிந்தனைச் சிறகு சிவகுமாரன்!!

தனித்தனி சிந்தனைகள்
சகாவரமாய் துளிர்விடும்
ஒவ்வொரு தருணங்களிலும்
பொதுச்சிந்தனை அடிக்கடி
அகாலமரணத்தை தழுவுகிறது.

சில சிந்தனைகள்
புகழ்ச்சியோடு பொசுங்கிவிடுகிறது!
சில சிந்தனைகள் சுயத்தோடு சுருங்கிவிடுகிறது!
சில சிந்தனைகள்
வறட்சியோடு இறந்துவிடுகின்றது!
சில சிந்தனைகள்
வெறும் இகழ்ச்சியோடு முடிகிறது!
சில சிந்தனைகள்
இச்சைகளோடு மட்டும் உறங்குகிறது!
சில சிந்தனைகள்
விரக்தியோடு கரைகிறது!
சில சிந்தனைகள் புரட்சியோடு
புலர்கிறது!

எந்த சிந்தனையில் பயணிக்கிறோம் என்பதே
ஒரு சமுதாயத்தின்
ஆரோக்கியத்தை மேம்பாடு
செய்கின்றது!

இங்கே
சிவகுமாரனின் சிந்தனை
சமநிலை நழுவிய அதிகார
வர்கத்தின் மீது சினம்கொண்ட
சிந்தனை!
மாணவப்பருவத்தில் மண்மீதான
காதல் கொண்ட சிந்தனை!
கண்ணுக்கு முன்னால் கட்டவிழ்த்து
விடப்படும் திட்டமிட்ட அதர்மத்தின்
மீதான தார்மீக சிந்தனை!
தனிமனிதப்புரட்சியின் சிந்தனை!
எதிரியை கூட மன்னிக்கும்
மனிதநேயச் சிந்தனை!
மனம் விலகாத இலக்கின்
நெறிபுரளாச் சிந்தனை!

இதுதான்
எல்லாப்புரட்சியாளனுக்கும்
இருக்கவேண்டிய சிந்தனையும் கூட..
தனிமனிதப்புரட்சியே
ஒரு சமூகத்தின் திரட்சி!

இதுதான் தன்தாய்மண்ணை பாதுகாக்க துடிக்கும்
ஒவ்வொரு இதயத்தின்
அடிச்சுவற்றில் ஆணியால்
அறைந்தாற்போல் இருக்க
வேண்டிய சிந்தனை!

செய்வோமா?
அல்லது
இன்னும்
செய்வதறியாது
திகைப்போமா?

எல்லாமே
உங்கள் ஆழமான சிந்தனை
சிறகுகளின் பறப்பிலேதான்
எல்லையின் முடிவிடம்
தென்படும்
இல்லாவிடில்
எப்போதுமே
ஒளியை விழுங்கிய
இரவுகளாகவே
இருக்கும்.

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள