சிறீலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக அறிவித்து அம்பாறையில் கவனயீர்புப் போராட்டம்!

சிறீலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக அறிவித்து அம்பாறையில் கவனயீர்புப் போராட்டம்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் சிறீலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக அறிவித்து வடக்கிலும் கிழக்கிலும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பிவிட்டிருந்தனர். அதன்படி கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அம்பாறை மாவட்டத்தில் இன்று கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டமானது அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு பிள்ளையார் கோயில் முன்னரில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பேரணியாக ஆலயடிவேம்பு பிரதேசசெயலகத்தை சென்றடைந்து பிரதேச செயலக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன் போராட்டத்தின் இறுதியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் சிறீலங்கா சனாதிபதி ஆகியோரிற்கான கோரிக்கை மனுவினை கல்முனை மனித உரிமை ஆணையகத்தின் தலைவரிடமும் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கான மனு ஒன்றும் கல்முறை பிரதேசசபை செயலாளரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

சிறீலங்கா புலனாய்வார்களின் பலத்த கெடுபிடிக்களுக்கு மத்தியிலும் இடம்பெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர்.

சிறீலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக பிரகனப்படுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கை,

உறவுகளை தொலைத்த தேசத்தில் சுதந்திரமா? பொறுப்புக்கூறாதவரை எமக்கு அது கரிநாளே!

இந்த தேசத்தின் மக்களான எமது உறவுகள் இதே மண்ணில் போரின்போதும் அசாதாரண சூழலிலும் சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காக நாம் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றோம். இதுவரையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையே நீடிக்கின்றது.
எமக்கான பொறுப்புக்கூறல் செய்யப்படவே இல்லை. இவ்வாறான நிலையில் இந்த தேசத்தின் சுதந்திர தினம் என்பது எமக்கு கரிநாளே.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஆகக்குறைந்தது தமிழ் மொழியில் தேசிய கீதம் கூட இசைக்கக்கூடாது என்ற மனப்போக்கில் தீவிர சிங்கள பௌத்த தேசியவாதம் கூர்மைப்பட்டுச் செல்கின்றது.
இந்நிலையில் சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினம் நாளை பெருமெடுப்பில் கொண்டாடுவதற்கு கோத்தாபய ராயபக்ச தலைமையிலான அரசாங்கம் அனைத்து தயார்ப்படுத்தல்களையும் நிறைவுசெய்துள்ளது.
இந்நிலையிலேயே வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயக உறவுகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளன.

வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளை நாம் தெருத்தெருவாக சென்று தேடிக்கொண்டிருக்கின்றோம். சிறைகளிலும், இரகசிய முகாம்களிலும் இருப்பதாக கூறியபோதெல்லாம் அங்கும் தேடுவதற்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்திருந்தோம். போர் நிறைவடைந்து இற்றைக்கு பத்து ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை எம்மால் அறிய முடிவில்லை.
போரின் பின்னர் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த ராயபக்ச அரசும் சரி, மைத்திரி-ரணில் அரசும் சரி எமது விடயத்தில் எவ்விதமான கரிசனையும் கொண்டிருக்கவில்லை. எம்மையும், சர்வதேசத்தினையும் ஏமாற்றுவதற்காக ஆணைக்குழுக்களையும், அலுவலகங்களையும் அமைத்து நாடகங்களையே அரங்கேற்றி வந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போதைய ஆட்சியாளரான கோத்தாபய ராயபக்ச காணாமலாக்கப்பட்டவர்கள் “காணாமலாக்கப்பட்டவர்களே” என்று கூறி முன்னோக்கிச் செல்வதற்கு சிந்திக்குமாறு குறிப்பிடுகின்றார்.

எமது உறவுகள் திட்டமிட்டே காணாமலாக்கப்பட்டனர். குறிப்பாக போரின் இறுதியில் விடுதலைக்காக ஆயுதமேந்திய எமது உறவுகளை சரணடையுமாறு சிறீலங்கா அரசு கோரியது. தற்போதைய சனாதிபதியான கோத்தபாய அப்போது பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரது பணிப்பிலேயே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பின்னரே வட்டுவாகலிலும், ஓமந்தையிலும் எமது உறவுகள் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்தார்கள், சிலர் கையளிக்கப்பட்டார்கள். அதற்கு சாட்சியாக நாமே உள்ளோம். அவ்வாறு கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மறுதலிக்க முடியாது.
விசேடமாக தற்போதைய சனாதிபதி இந்த விடயத்தில் நழுவிச் செல்லவே முடியாது. உத்தரவுகளை பிறப்பத்த அவரே பொறுப்புக்கூற வேண்டியவர் ஆவார். இதனை அனைத்து தரப்பினரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக சர்வதேச தரப்பினரும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினரும் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக உரிய அழுத்தங்களை வழங்க வேண்டும்.

மிக முக்கியமாக, சிறீலங்கா அரசாங்கத்தினை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாலோ அல்லது விசேட தீர்ப்பாயமொன்றையோ அமைத்து நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய சந்தர்ப்பத்தில் சர்வதே சமுகம் பாதிக்கப்பட்ட எம்மை முன்னிலைப்படுத்திய தீர்மானமொன்றினை அவசரமாக எடுக்காது விட்டால் பொறுப்புக்கூறல் என்பது காணல் நீராகிவிடும் ஆபத்தே உள்ளது.
சிறீலங்கா அரசு பெரும் எடுப்பில் எத்தனை சுதந்திர தினங்களைக் கொண்டாடினாலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் மீளக் கிடைக்காதவரையில் எமக்கு அது கரிநாளாகவே இருக்கும் என்பதை நாம் அழுத்தமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments