சிறீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஐநா தேர்தலில் தோல்வி!

You are currently viewing சிறீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஐநா தேர்தலில் தோல்வி!

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு இலங்கையின் சார்பில் பரிந்துரைசெய்யப்பட்டிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியான மொஹான் பீரிஸ், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2008 – 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சட்டமா அதிபராகவும் 2013 ஆம் ஆண்டில் பிரதம நீதியரசராகவும் பதவிவகித்தவர் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறலையும் நீதியையும் நிலைநாட்டத்தவறிய மொஹான் பீரிஸ், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அதுமாத்திரமன்றி ஐ.நாவின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு பிலிப்பைன்ஸ் சார்பில் ஹரி ரொக் மற்றும் இலங்கையின் சார்பில் மொஹான் பீரிஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டமையை நிராகரிக்குமாறு வலியுறுத்தி சமூகநீதி மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸைத் தளமாகக் கொண்டியங்கும் அமைப்பினால் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் ஆசியபிராந்தியத்திற்குரிய 8 ஆசனங்களுக்கு 11 பேர் போட்டியிட்டனர். அதற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் போதியளவு வாக்குகள் கிடைக்கப்பெறாமல் மொஹான் பீரிஸ் தோல்வியடைந்திருக்கின்றார்.

அவரது தோல்வி குறித்து உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டம் உள்ளடங்கலாக சர்வதேச சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு ஆசியப்பிராந்தியத்தின் சார்பில் இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், வியட்நாம், சீனா, கொரியா, சைபிரஸ் மற்றும் மொங்கோலியா ஆகிய நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments