சிறீலங்கா ஜனாதிபதி அநுர! நம்பிக்கையா? பழைய ஏமாற்றங்களின் மறுபதிப்பா?

You are currently viewing சிறீலங்கா ஜனாதிபதி அநுர! நம்பிக்கையா? பழைய ஏமாற்றங்களின் மறுபதிப்பா?

யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா ஜனாதிபதி அநுர!
நம்பிக்கையா? பழைய ஏமாற்றங்களின் மறுபதிப்பா?

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் 15 ஜனவரி 2026 யாழ்ப்பாணம் சென்றார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். வழமை போன்று மக்கள் திரளாகக் கூடினர். புகைப்படங்கள் எடுத்தனர். ஜனாதிபதி மக்களை வாரி அணைத்துக் கொண்டார். அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.

ஆனால் இந்தக் காட்சிகளுக்குப் பின்னால் எழும் அடிப்படை அரசியல் கேள்வி ஒன்று தவிர்க்க முடியாததாக உள்ளது. தமிழ் மக்கள் இன்னமும் சிங்களத் தலைவர்களை நம்புகின்றார்களா? அல்லது சிங்கள அரசியல் இன்னுமொரு முறை அவர்களை ஏமாற்றத் தயாராக உள்ளதா?

இலங்கை அரசியலில் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் அணைப்பு அரசியல் புதிதல்ல. இதற்கு முன்பும் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் யாழ்ப்பாணம் வந்துள்ளனர். குழந்தைகளை முத்தமிட்டுள்ளனர். பெண்களுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். மக்களுடன் கை குலுக்கியுள்ளனர். ஆனால் அந்த அணைப்புகள் காணி விடுவிப்பாக மாறியதா? இராணுவ முகாம்கள் அகற்றலாக மாறியதா? நீதி கிடைத்ததா?தமிழ் மக்களின் அனுபவம் பெரும்பாலும் இல்லை என்றே பதிலளிக்கிறது.

முந்தைய சிங்களத் தலைவர்களுடன் ஒப்பிட்டால் அநுர குமார திசாநாயக்க ஒரு முற்போக்கான அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் இனவாதப் பேச்சுகளைக் குறைவாகவே பேசுகிறார். அல்லது இல்லை என்றும் சொல்லலாம். ஊழலுக்கு எதிரான மொழி அவரிடம் உள்ளது. சாதாரண மக்கள் பேசும் மொழியில் அவர் மக்களுடன் அரசியல் மொழியில் உரையாடுகிறார்.
ஆனால் தமிழ் அரசியல் நினைவுகள் மொழியை விட நடவடிக்கைகளையே அளவுகோலாகக் கொள்கின் றன.

யாழ்ப்பாணப் பயணத்தின் போது தமிழ் மக்களுக்கு நேரடியாகப் பிணைந்துள்ள முக்கியமான கேள்விகள் எதுவும் வெளிப்படையாக பேசப்படவில்லை. தையிட்டி பௌத்த விகாரை. சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட ஒரு மத அரசியல் சின்னம். காணி விடுவிப்பு இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பிடியில் உள்ள தனியார் நிலங்கள். செம்மணி புதைகுழி இன்னும் நீதியின்றி உறங்கும் மனித உரிமை. சிறையில் வாழும் தமிழ்இளைஞர்களது விடுதலை காணாமல் போனோருக்கான நீதி தேடல்

இந்த விடயங்கள் தமிழ் சமூகத்தின் ஆறாத ஆழ்ந்த காயங்கள். அவற்றைப் பற்றி ஜனாதிபதி மௌனம் காத்தது நேரம் இல்லை என்பதற்காகவா? அல்லது இப்போது பேச அரசியல் வசதி இல்லை என்பதற்காகவா?

சிலர் கூறலாம் தைப்பொங்கல் நாள். அரசியல் பேசாமல் தவிர்த்திருக்கலாம் என்று. ஆனால் தமிழ் மக்களுக்கு தைப்பொங்கல் என்பது நம்பிக்கையின் நாள். தை பிற்நதால் வழி பிறக்கும் என்பது அந்த நாளிலேயே நம்பிக்கைக்கான ஒன்று. அன்றைய நாளில் ஒரு அரசியல் சொல்லாவது வெளிவர வேண்டாமா?

யாழ்ப்பாணத்தில் மக்கள் கூடுவது தலைவர்களை நம்புவதற்காக மட்டுமல்ல. அது சில நேரங்களில் இயலாமையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

அரசு அதிகாரம் யாரிடமிருக்கிறதோ அவரைப் பார்க்க வேண்டும் என்ற மனநிலை. ஒரு மாற்றம் வருமா? என்ற மெலிந்த எதிர்பார்ப்பு. இது முழுமையான அரசியல் நம்பிக்கை அல்ல. அது நீண்ட கால தோல்விகளுக்குப் பிறகும் உயிர் வாழும் ஒரு சமூகத்தின் மனநிலை.

அநுராவின் யாழ்ப்பாணப் பயணம் இன்னொரு உண்மையையும் வெளிச்சம் போடுகிறது. தமிழர் பகுதிகளில் அநுராவின் அரசியல் வளர்ச்சியை தமிழ் தலைவர்கள் போதுமான அளவு கவனிக்கவில்லை. கண்டு கொள்ளவுமில்லை.

அநுரவை மற்றொரு சிங்களத் தலைவர் என ஒதுக்கி விடுவது அரசியல் ரீதியாக தவறு. அவரது ஆளுமை. மக்களோடு மக்கள் மொழியில் கவர்ச்சிகரமாகப் பேசுவது. தென்னிலங்கையில் கூட அவருக்குப் போட்டியான தலைவர்கள் இன்று இல்லை. முழு நாட்டையுமே வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளிய மகிந்தா குடும்பத்து வாரிசு நாமல். துணிந்து ஒரு முடிவு எடுக்க மதுகெலும்பு இல்லாத சஜித் பிரேமதாசா போன்றவர்களால் அநுராவை இன்றளவும் வெற்றி கொள்ள முடியாது என்பதே யதார்த்தமாகும்.

அதேவேளை தமிழ்மக்கள் அவரிடம் நிபந்தனை இல்லா ஆதரவு காட்டுவதும் ஆபத்தானது. தமிழ் அரசியல் தலைமைகள் அணைப்புகளை அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளாமல் சாதாரணமாக கடந்து விடாமல் தெளிவான கேள்விகளை நேரடியாக முன்வைக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அணைத்த காட்சிகள் உணர்ச்சிப் ர்வமானவை. ஆனால் தமிழ் அரசியல் வரலாறு எச்சரிக்கிறது: உணர்ச்சிகள் தீர்வல்ல.

அநுர உண்மையிலேயே மாற்றத்தின் தலைவராக இருக்க விரும்பினால் அவர் அணைப்புகளை மட்டுமல்ல காணிகளை நீதியை உண்மையை தமிழ் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் தான் முன்னைய சிங்களத் தலைவர்கள் போன்று தான் அநுராவும் ஒருவர் என்ற வரலாற்றில் இருந்து விடுபடுவார்.

அதுவரை யாழ்ப்பாணத்தின் கூட்டங்கள் நம்பிக்கையின் அடையாளமாக அல்ல, காத்திருப்பின் சாட்சியாகவே அவர் படிக்க வேண்டும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply