சிறீலங்கா பாராளுமன்றத்தில் இனவழிப்பிற்காக ஒலித்த முதல்க் குரல்!!

சிறீலங்கா பாராளுமன்றத்தில் இனவழிப்பிற்காக ஒலித்த முதல்க் குரல்!!

இன்றைய பாராளுமன்ற அமர்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவை பாராளுமன்றத்தில் கொடுத்திருக்கிறார்.

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Fredag den 21. august 2020

கஜேந்திரகுமார் அவர்களின் உரையிலிருந்து..

🌑இலங்கையில் இரண்டு தேசங்கள் உள்ளன
🌑சிங்களவர் தேசம் ஒன்றுபட்டு நிற்பது போல் தமிழர் தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது
🌑தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்
🌑தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டே அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும்
🌑இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது
🌑இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தங்களது கட்சிக்கு நாட்டு மக்களின் ஆணை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். அவரது கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது என்பது சரியாக இருந்தாலும், இந்த ஆணை வடக்கு – கிழக்கிலிருந்தும் கிடைத்திருக்கிறது என்று சேர்த்துக் கூறுவது சரியானதல்ல. இவ்வாறு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தாபாய இராஜபக்ச ஆற்றிய உரைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பதிலுரையில் குறிப்பிட்டார்.

அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் உரிமை அங்கீகரிக்கக்கோரியே வடக்கு கிழக்கில் மக்கள் ஏகோபித்த ஆணை வழங்கியிருக்கிறார்கள். நான் ஏகோபித்த ஆணை என்று குறிப்பிடும்போது, அரச தரப்பிலுள்ள உங்களையும் சேர்த்துக் கூறுகிறேன் என சபையை வழிநடத்திக் கொண்டிருந்த குழுக்களின் துணைத்தலைவர் அங்கஜன் இராமநாதனைப் பார்த்துக் கூறினார்..தமிழர்கள் உரிமை என்பது எதனைக் குறிக்கிறதென்றால், எங்களின் அடையாளம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இலங்கை பல்லினங்கள் வாழும் நாடு. இங்கு இரண்டு தேசங்கள் உள்ளன. இவ்விரண்டு தேசங்களினதும் உரிமைகள் சமனானதாக இருக்க வேண்டும். அவற்றின் தராதரமும் சமனானதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே அரசியல் அமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த தேர்தலில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வடக்கு – கிழக்கில் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்தலில் வெற்றிபெற்றபின்னர், மக்களுக்கு வழங்கிய நன்றியுரைகளில் தமிழ்மக்களின் உரிமைகள் வழங்கப்படுவதனை எதிர்க்க மாட்டோம் என்று கூறியுள்ளீர்கள். தமிழ் பகுதிகளில் அபிவிருத்தியினை ஏற்படுவதனைப் பற்றி கூறுகிறீரகள். அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்வரை தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் நாங்கள் காத்திருக்க முடியாது.
 
டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி தனது தேர்தல் பிரசுரங்களில் ‘தமிழர் தேசம் தலைநிமிர’ எனக் குறிப்பிட்டிருந்தது. அதுதான் அவரது தேர்தல் கோசமாகவிருந்தது. நாங்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாடு ஏகோபித்த விதத்தில் அமைந்திருக்கிறது. ஆகவே இந்த ஆணையினை நாம் மீறமுடியாது. கடந்த 72வருடகால சரித்திரத்தில் தமிழ் மக்களால் இந்த ஆணை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

இன்னுமொரு விடயத்தை நான் எடுத்துக் கூறவிரும்புகிறேன். ஜனாதிபதி அவர்கள் தனதுரையில் இறையாண்மை பற்றி பேசினார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறையாண்மை விடயத்தில் விட்டுக்கொடுப்புகளைச் செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஒரு ஜனாதிபதியாக அவர் அவ்வாறு கூறுவது சரியானதாக இருக்கலாம். ஆனால் அவர் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும், சர்வதேச உறவுகள் என்று வரும்போது, இறைமையுடன் தொடர்புபட்ட சில கடப்பாடுகள் உள்ளன. ஒரு நாட்டில் வாழும் ஒரு தொகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படும். அரசே அதன் சொந்தக் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்துவது அதனிலும் மோசமானது. இவ்வாறான சூழலில் இறையாண்மையை காட்டித் தப்பிக் கொள்ள முடியாது.
 
இந்த நாடு ஒரு போரை எதிர்கொண்டிருந்தது. இங்கு மிக மோசமான குற்றச்செயல்கள் நடந்ததாக முழு உலகமும் கூறுகிறது. குற்றஞ்சாட்டப்படும் தரப்புகளில் அரசே முதலிடத்திலிருக்கிறது. எந்தவொரு ஜனாதிபதியோ, நாடுகளோ நாட்டின் இறையாண்மையை காரணங்காட்டி இக்குற்றச் செயலுக்கும் பொறுப்புகூறுவதிலிருந்து தப்பிவிட முடியாது. இக்குற்ற்செயல்களால் பாதிக்கப்பட்ட முதன்மையான தரப்பாக தமிழர்களே உள்ளனர். அவர்கள் தாம் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருவதாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். இவற்றுக்கு பொறுப்புக்கூறலை ஏற்படுத்த ஒரு சர்வதேசப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
 
இறுதியாக, ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தில் பொருண்மிய மேம்பாடு விடயத்திலும், வேறுசிலவிடயங்களிலும் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளதனையும் குறிப்பிட விரும்புகிறேன். இரண்டு விடயங்களை குறிப்பிட்டுக் கூறவிரும்புகிறேன். ஒன்று இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பானது. இரண்டாவது, காணியற்ற மக்களுக்கு காணி உறுதி வழங்குவது தொடர்பாகவும் பேசியிருக்கிறார். இவற்றை நான் வரவேற்கிறேன். ஆனால் ஜனாதிபதி ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு – கிழக்கு ஒரு யுத்த வலயமாக இருந்திருக்கிறது. வடக்கு கிழக்கு மக்களின் பொருண்மியம் ஏனைய பகுதி மக்களுடன் ஒப்பிடும்போது முப்பது வருடங்கள் பின்நோக்கியதாக இருக்கிறது. இவ்வியடத்தில் வடக்கு கிழக்கு மக்களை மற்றை மக்களுடன் ஒன்றாக கணிப்பிட முடியாது. நீங்கள் அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களது பொருண்மியம் மேம்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். அதற்குப் பின்னரே மற்றைய மக்களுக்கு இணையாக அவர்களைக் கணிக்க முடியும்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments