சிறுவனை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையிட்ட ஐவர் கைது!

சிறுவனை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையிட்ட ஐவர் கைது!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறைப் பகுதியில், கடந்த 4 மாதங்களாக சிறுவனை மிரட்டி, அவரது வீட்டில் இருந்து நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டு வந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை, காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 10 பவுண் தங்க நகைகள், பணம், நகை அடகு பற்றுச் சீட்டுக்கள், மற்றும் அலைபேசிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வல்வெட்டித்துறை காவல்த்துறை பிரிவில், கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற 4 கொள்ளைகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

சிறுவன் ஒருவனுடன் நட்புக் கொண்ட சந்தேக நபர்கள், அவனிடம் சிகரெட்டை புகைக்க வைத்து படம் எடுத்துள்ளனர். அந்தப் படத்தை வைத்து மிரட்டி சிறுவனின் தாயாரின் நகைகளை எடுத்து வருமாறு மிரட்டி அவற்றைப் பறித்துள்ளனர்.

இவ்வாறு சிறுவனை குறிப்பிட்ட காலத்துக்கு மிரட்டி வந்ததுடன், அவனின் தாயாரின் 14 பவுண் நகைகள், ஐ பாட் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கனேடிய டொலர்களையும் சந்தேக நபர்கள் பறித்துள்ளனர் இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையிலேயே சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உருக்கப்பட்ட தங்கம் உட்பட 10 தங்கப் பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், 2 அலைபேசிகள், ஒரு ஐபாட் மற்றும் கொள்ளையிட்ட நகைகளை அரச மற்றும் தனியார் வங்கிகளில் அடகு வைத்த பற்றுசீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டன.

சந்தேக நபர்கள், கொள்ளையிட்ட நகைகளில் பலவற்றை உடுப்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அந்தப் பெண் அவற்றை கூடிய தொகைக்கு அடகு வைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில், 15 வயதுடைய சிறுவர்கள் இருவரும், 18, 21 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் மூவரும் அடங்கியுள்ளனர். அவர்களில் இருவர் சகோதரர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments