சீனாவின் பரிந்துரையை பரிசீலிக்க தயாராகும் உக்ரைன்! தடுக்கும் நேட்டோ!!

You are currently viewing சீனாவின் பரிந்துரையை பரிசீலிக்க தயாராகும் உக்ரைன்! தடுக்கும் நேட்டோ!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான நிரந்தர சமாதானமொன்றை ஏற்படுத்தவென சீனா பரிந்துரையொன்றை முன்வைத்திருந்தமை நினைவிருக்கலாம். 12 அடிப்படை அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட சீனாவின் இப்பரிந்துரையில், மேற்குலகத்தினால் ரஷ்யாமீது விதிக்கப்பட்டிருக்கும் அனைத்து தடைகளும் நீக்கப்படவேண்டும்; சர்ச்சைக்குரிய நிலப்பரப்பாக ரஷ்யாவால் அடையாளப்படுத்தப்படும் நிலப்பரப்புக்களை கொண்டுள்ள நாடுகள், இராணுவ கூட்டமைப்புக்களில் அங்கம் வகிப்பது தவிர்க்கப்பட வேண்டும், அதாவது “நேட்டோ” கூட்டமைப்பில் இணைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக இப்போது தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளை தமது கூட்டமைப்பில் அங்கத்தவர்களாக்குவதன் மூலம், ரஷ்யாவை சுற்றி பலமான இராணுவக்கட்டமைப்பொன்றை உருவாக்கி, ரஷ்யாவை இராணுவரீதியில் பலவீனப்படுத்தும் மேற்குலக / நேட்டோவின் திட்டங்களை தகர்க்கும் விதத்தில் சீனாவின் பரிந்துரை அமைந்திருப்பதானது, மேற்குலக / நேட்டோ நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதேவேளை, சீனாவின் பரிந்துரையை பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும், இதன் பிரகாரம் சீன அதிபரை சந்திக்க விரும்புவதாகவும் உக்ரைனிய அதிபர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு, மேற்குலக / நேட்டோ நாடுகளை மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. எனினும், சீனாவின் இந்த பரிந்துரைகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என, மேற்குலக / நேட்டோ நாடுகள் அவசர அவசரமாக கருத்துரைத்துள்ளன.

உக்ரைன் பரிசீலிக்க விரும்பும் சமாதானத்துக்கான பரிந்துரையொன்றுக்கு மேற்குலக / நேட்டோ நாடுகள் முட்டுக்கட்டை போடுவது இது இரண்டாவது முறையாகும் என்பதோடு, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை ஆரம்பித்த இரண்டாவது வாரத்திலேயே ரஷ்யாவுடன் சமாதானமாக போவதற்கு தான் இணக்கமாக இருப்பதாக உக்ரைனிய அதிபர் அறிவித்த போது, நேட்டோவின் பொதுச்செயலாளர், அதனை நேட்டோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்த பின்னணியிலேயே மேற்குக்குலமும், நேட்டோவும் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்க ஆரம்பித்தன என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கவை.

சீனாவின் பரிந்துரையை பரிசீலிக்க தயாராகும் உக்ரைன்! தடுக்கும் நேட்டோ!! 1

இதேவேளை, சீனாவுக்கு சென்றிருக்கும் “பெலாரஸ்” அதிபர், சீனாவின் சமாதான பரிந்துரைகளை முற்றுமுழுதாக வரவேற்பதாகவும், இப்பரிந்துரைகளின் அடிப்படையில் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கான ஆதரவை “பெலாரஸ்” வழங்குமெனவும் தெரிவித்துள்ளமை, மேற்குலக / நேட்டோ நாடுகளால் கடும் விசனத்தோடு பார்க்கப்படுகின்றது. ஏனெனில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு “பெலாரஸ்” பெரும் உதவியாக இருக்கும் அதேவேளை, ரஷ்யாவுக்கெதிரான தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கான ஏவுகணைத்தளங்கள், இராணுவத்தளங்கள் போன்றவற்றை தனது நிலப்பரப்பில் ரஷ்யா அமைத்துக்கொள்ள “பெலாரஸ்” அனுமதியளித்திருப்பதும் மேற்குலக / நேட்டோ நாடுகளால் கடும் கோபத்தோடு பார்க்கப்படுகிறது.

தனது நகர்வுகள் மூலம் ரஷ்யாவோடு மிகநெருக்கமான இராணுவ உறவொன்றை சீனா முன்னெடுத்துவருவதாக கடந்த வாரங்களில் அமெரிக்க “சி.ஐ.ஏ” விடுத்திருந்த அறிக்கைகளையும், ரஷ்யாவுக்கு ஆயுத உதவிகளை வழங்க சீனா தயாராகிறது என நேட்டோ பொதுச்செயலாளர் கடந்தவாரம் குறிப்பிட்டிருந்ததையும் மேற்கோள் காட்டும் அவதானிப்பாளர்கள், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை மிக ஆபத்தானதாக நோக்குகின்றன என குறிப்பிடுகிறார்கள்.

இதேவேளை, ரஷ்யாவை முற்றுகைக்குள் கொண்டுவரும் மேற்குலக / நேட்டோ திட்டத்தின் பலிக்கடாவாக உக்ரைன் சிக்கி சின்னாபின்னப்படும் நிலையில், மேற்குலகம் / நேட்டோ ஓரணியாகவும், ரஷ்யா, சீனா, பெலாரஸ் என இன்னொரு அணியாகவும் இரு பெரும் இராணுவ அணிகள் உருவாவது உலக சமாதானத்துக்கு மிகமிக ஆபத்தானதாக அமையுமெனவும் கவலைகள் முன்வைக்கப்படுகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments