சுமந்திரன் தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!!

சுமந்திரன் தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!!

றிலங்கா அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களை துரோகியென அழைப்பது எதுவித அர்த்தமுமற்ற செயல் எனவும் மாறாக அவர் தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கே துரோகமிழைத்துள்ளார் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 பாராளுமன்றத்தில் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுமந்திரன் அவர்கள் வரவேற்பதாக கூறியவேளை சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சுமந்திரனை துரோகி என கூறி தமது கண்டனங்களை தெரிவித்த போது அதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக இங்கு ஆற்றப்படும் உரைகளை அவதானித்து வருகிறேன். அநேகமாக எல்லா அரசாங்கத் தரப்பு உறுப்பினர்களும் தமதுரைகளில், இன்று இச்சபையில் திரு. எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த சில கருத்துகள் தொடர்பில் தமது கண்டனத்தைத் தெரிவித்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளாரான சுமந்திரன் தனதுரையில், ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தமையை பாராட்டியிருக்கிறார் அல்லது வரவேற்றிருக்கிறார். இங்கு உரையாற்றிய அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சுமந்திரனது கருத்தை பலமாக விமர்சித்ததுடன் அவரை ஒரு சிறிலங்காவின் துரோகியெனக் கூறுமளவிற்குச் சென்றுள்ளனர். நான் சுமந்திரனின் அபிமானியல்லாதபோதிலும், உண்மையில் நான் அவரை பலமாக விமர்சித்து வருபவனாக இருந்தாலும், அவரை சிறிலங்காவின் துரோகியென அழைப்பது எதுவித அர்த்தமுமற்ற செயல் என நமபுகிறேன். அரசதரப்பு உறுப்பினர்கள் அவர்களின் இருப்பினை நியாயப்படுத்துவற்காக இத் தீர்மானத்தை எந்தளவிற்கு விமர்சிக்கலாமோ அந்தளவிற்கு கீழிறங்கி விமர்சிப்பதானது அத்தீர்மானத்தின் உள்ளடக்கத்தையிட்டு அவர்களது வாதங்கள் மிகவும் பலவீனமானதாகவே அமைந்திருக்கின்றன. நான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துப்படுத்துகிற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். நாங்கள் இத்தீர்மானம் தொடர்பில் நாம் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் பலவீனமான தீர்மானம் என்றே நாம் கூறுகிறோம். இங்கு நடைபெற்றதாக நாங்கள் கூறும் மோசமான குற்றச்செயல்களையிட்டோ, இனப்படுகொலை தொடர்பிலோ எந்தவிதமான பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்தாத இத்தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டடபை்பு வரவேற்றிருக்கிறது. எனது கருத்தை நியாயப்படுத்துவதற்காக அத்தீர்மானத்தின் செயற்படுத்தல் பந்தி (operative paragraph) 9 இல் குறிப்பிடப்டுள்ளவற்றைப் வாசிக்கிறேன். சுயாதீனமாகவும் பக்சார்பற்ற முறையில் முழுமையான விசாரணைகளை நடத்தி, அவசியமேற்படின் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதனை உறுதிப்படுத்துமாறு கோரியிருக்கிறது. மனிதவுரிமை மீறல் சம்பவங்கள், சர்வதேச மனிதாபினச் சட்டங்களை மீறும் செயல்களையும், நீண்டகாலமாக அடையாளப் படுத்தப்பட்டுவரும் குற்றச்செயல்களையும் (emblematic cases) சட்டத்தின்முன் கொண்டுவந்து விசாரித்து அவற்றுக்கு நீதி வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது. அவ்வாறிருக்கும்போது இத்தீர்மானமானது இவ்வராசாங்கத்திற்கு எதிரானது என்று எவ்வாறு கூறமுடியும்? எங்கள் குற்றச்சாட்டானது, அரசாங்கமானது நடைபெற்ற மோதல்களில் ஒரு சாராராக குற்றஞ்சாட்டப்படும்போது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதனையே கோருவது இயற்கை நீதிக்கு ஒவ்வாததாக அமைகிறது. 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம்கூட உள்ளக விசாரணையையே கோரியிருந்தது. ஆனால் பெயரளவிலாவது சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள். வழக்குத் தொடுனர்கள் போன்றரையும் இவ்விசாரணைப் பொறிமுறையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரியிருந்தது. ஆனால் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள 

46-1 என்ற தீர்மானமானத்தில் வெளித் தரப்புகளை இணைத்துக் கொள்ளுமாறு கோரவில்லை. விசாரணையை நடத்துமாறு தனித்து அரசாங்கத்தையே கோரியிருக்கிறது. இந்த அரசாங்கம் பதவியேற்றவுடன், வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. மனிதவுரிமைச் சபைக்குச் சென்று, 30-1 தீர்மானத்திற்கு வழங்கிய கூட்டு அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாகவும், அதற்கு பதிலாக தாங்கள் உள்ளக விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறியிருந்தார். அதனையே இத்தீர்மானத்திலும் கோரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான எங்களுடைய குற்றச்சாட்டு இதுதான். மோதலில் ஒரு தரப்பான அரசாங்கத்தை விசாரிக்குமாறு கோரும் இயற்கை நீதிக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் மோசமான இக்குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதாவது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்குத் துரோகமிழைத்திருக்கிறது. அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டுக்குத் துரோகமிழைத்திருப்பதாக அரசாங்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு கூறமுடியும் இங்குள்ள உண்மை என்னவென்றால், அரசாங்கமானது சீன ஆதரவிலானது. அது சீனாவின் பக்கம் சாய்வதனைப் பயன்படுத்தி இந்தியாவும் மேற்குலகும் அதற்கு நெருக்குதலைக் கொடுக்க முனைகின்றன. அதன் பிரதிபலிப்புத்தான் இத்தீர்மானமே தவிர இத்தீர்மானத்தற்கும் நடைபெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதுவே நாங்கள் இத்தீர்மானம் பற்றி முன்வைக்கிற விமர்சனம். நீங்கள் உங்களது வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றத்தினைக் கொண்டுவரும்வரை இவ்வாறான அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். துன்பகரமான உண்மை என்னவெனில் பாதிக்கப்பட்ட தரப்பினர், பெரும்பாலும் தமிழர்கள், இந்த புவிசார் அரசியல் மோதலில் சிக்குண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் இங்குள்ள சோகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள