உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அவற்றோடு சம்பந்தப்பட்ட கொடூரமான செயல்கள் தொடர்பில், ஸ்ரீலங்காவின் உளவுப்பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனெரல் சுரேஷ் சாலே அனைத்து விடயங்களையும் முன்கூட்டியே அறிந்திருந்தார் என, ஸ்ரீலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நாசகார செயல்கள் குறித்த உண்மை தகவல்கள் வெளிவருவதை சுரேஷ் சாலே தடுத்ததாகவும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலரை பயன்படுத்தி, இச்சதித்திட்டங்களை அரங்கேற்றுவதில் இவர் பங்களித்திருந்தாரெனவும், தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், நீர்கொழும்பிலுள்ள மூன்று கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சென்று, அங்கு ஆராதனைகளுக்கு வருவோரின் தொகை குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தாரெனவும், விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மூலம் தாக்குதல்கள் நடைபெறப்போவதாக, முன்கூட்டிய உளவுத்தகவல்கள் வழங்கப்பட்ட போதும், அவற்றை தடுப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளிலும் சுரேஷ் சாலே ஈடுபடவில்லையெனவும் அமைச்சர் விஜேபால கூறினாரென கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
10.06.2026






