சுவிஸ் நேரடிக்குடியுரிமையும் கொறோனாப் பேரிடரும்!

சுவிஸ் நேரடிக்குடியுரிமையும் கொறோனாப் பேரிடரும்!

நேரடிக் குடியுரிமை (நேரடி ஜனநாயகம்) அரசியலமைப்பு முறை சுவிற்சர்லாந்து நாட்டின் அரசியற்பண்பாடாக விளங்குகின்றது. இதில் வாக்களிக்கும் மக்கள் அரசியல் பிரச்சினைகளில் நேரடியாக வாக்களிக்கின்றனர். இந்த வகையில் நேரடிக் குடியாட்சி முறைமை இரு பொருட்படுகின்றது. ஒன்று ஆட்சியைக் குறிக்கிறது, மற்றையது மக்களால் நேரடியாக வாக்காக பயன்படுதப்படும் ஓட்டுரிமை அதிகாரம் ஆகும்.  

தனிப்பட்ட அரசியல் முடிவெடுக்கும் செயல்முறைகளை நேரடிக் குடியாட்சி அளிக்கின்றது. மக்களை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தும் குடியாட்சியில் நேரடியாக வாக்களித்து மக்கள் சட்டங்களை இயற்றுகின்றார்கள், மாற்றுகின்றார்கள், நீக்குகின்றார்கள். நேரடி மற்றும் மறைமுக குடியாட்சிக் கூறுகளின் கலவையாக பொது வாக்கெடுப்பினை மேற்கொள்ளவும் இது வழிசெய்கின்றது. இவ்வடிப்படையில் அதிகாரப்பகிர்வு சுவிசின் முதன்மை நோக்காகவும் விளங்கி வருகின்றது.

குடிமக்களின் அரசியல் பங்கேற்பு, தகவல் மற்றும் அணுகல் உரிமைகள், ஒத்திசைவு, ஒருமித்த கருத்து, முன்மொழிவு, வாக்கெடுப்பு, பேச்சுவார்த்தை இத்தனையும் குடியாட்சியின் பண்புகள ஆகும். ஆனால் கொறோனாப் பெருந்தொற்று நோய் சுவிற்சர்லாந்தில் இத்தனை உரிமைகளையும் ஒரேயடியாகப் பறித்துவிட்டது. கடந்த 16. 03. 2020 முதல் குடியாட்சி முறையில் பேரிடர்காலத்து «அவசரகாலச் சட்டம்»  நான்கு கட்சிகளைச் சார்ந்த 7 நடுவன் அரசின் அமைச்சர்களின் கைகளில் மேலான குடியாட்சிகள் பண்பு நீக்கி முழுவலுவான அதிகாரத்தினை கொறோனா அளித்துவிட்டுச் சென்றுள்ளது.

மாறுபட்ட பரந்த, விரிவான அணுகுமுறை வெளிப்படுத்தும் நேரடி குடியாட்சியின் வழியில் அல்லாது வாக்கெடுப்புகள் தவிர்க்கப்பட்டு, அரசியல் உரிமைகள் நீக்கப்பட்டு, பல நேரடி ஜனநாயகத்தின் நெருக்கமாக பின்னிப்பிணைந்த கூறுகள் தளர்த்தப்பட்டு சுவிற்சர்லாந்து நடுவன் அரசால் கடந்த மார்ச் நடுப்பகுதி முதல் மறு அறிவித்தல்வரை ஆட்சி நடத்தப்படுகின்றது.

இருந்தபோதும் குடியாட்சியின் வேர்களான மக்கள் பிரதிநிதிகள் இப்பேரிடர் காலத்திலும் சட்டத்திற்கு உட்பட்டு பாராளுமன்றத்தில் அல்லாது புறம்பாக பெரும் பொருட்காட்ச்சி வளாகத்தில் கடந்த 04. 05. 2020 முதல் 07. 05. 2020 வரை பேர்ன் நகரில் ஒன்றுகூடியிருந்தனர்.

மாநிலங்கள்சபை, தேசியசபை ஆகிய இருசபைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் தமது குடியாட்சிக் கடமையினை ஆற்றினர். பேரிடர் காரணமாக பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படாது ஓப்பதல் அளிக்கப்பட்ட வரவுசெலவிற்கும் மேலும் பாராளுமன்றக் குழுக்கள், கூட்டணிக் கட்சிகள் தாக்கல் செய்த திட்டங்களுக்கும் வாதங்களை முன்வைத்தனர், ஒப்புதல் அளித்தனர் சில திருத்தப்பட்டது, இன்னும் சில வேண்டுகோள்கள் நீக்கப்பட்டன.

கட்சி அரசியல் கடந்து ஒருபக்கத்தில் சுவிற்சர்லாந்து அரசின் அமைச்சர்கள் திட்டங்களை பாராளுமன்றத்திற்கு விளக்கினர். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வழமைபோல் கட்சி அரசியல் செய்தனர். சிலர் கொள்கை அரசியலும் இந்த நான்கு நாட்களும் செய்து முடித்தனர்.

பாராளுமன்றக்கூட்டத்தொடரின் சுருக்கம்

கடந்த நாட்களில் பாராளுமன்றம் கூடாது அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட முடிவுகளும், கொள்கைப் பாதையும் பாராளுமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நடுவனரசு முன்மொழிந்த 57 பில்லியன் பெறுமதியான திட்டங்களுக்கு இருசபைகளும் ஒப்புதல் அளித்தன.

நடு-இடதுசாரிகள் கூட்டணி உறுப்பினர்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது, குழந்தைகள் காப்பகங்களுக்கும் பேரிடர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடு – வலதுசாரிகள் விமானப்போக்குவரத்தின் வழங்களைப் பேணவு வேண்டினர், இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கொறோனாப் பேரிடர் காரணமாக பணியாளர்களுக்கு முழுநேரப்பணி வழங்கி ஊதியமும் வழங்க முடியாத நிலையில் இருக்கும் சுவிற்சர்லாந்தின் சிறிய-, நடுநிலை- மற்றும் பெருநிறுவனங்கள் சுவிஸ் அரசு அறிவித்திருந்த குறுகியநேரப் பணி எனும் திட்டத்தில் தமது தொழிலாளர்களைப் பதிவுசெய்துள்ளனர். அண்ணளவாக 30 வீதமான சுவிற்சர்லாந்தின் தொழிலாளர்கள் இவ்வாறு குறுகிய நேரப்பணித் திட்டத்தின் பெயரால் நாளுக்கு 8. மணிநேரத்திற்கு குறைவாக பணிசெய்து அல்லது பணிக்கு நேரில் தோன்றாது வீட்டில் இருந்தபடி சுவிஸ் அரசின் மானியத்தில் 80 வீத ஊதியம் பெறுகின்றனர். இப்படிப் பணிவிலக்குப் பெற்ற தொழிலாளர்கள் பலர் பங்குதாரர்களால் நடாத்தப்படும் நிறுவனங்களிலும் பணிசெய்கின்றனர்.

சுவிற்சர்லாந்து வலதுசாரிக் கட்சிகள் நடுவனரசு அறிவித்திருக்கும் திட்டத்தில் நிதி உதவிபெற்று ஊதியம் வழங்கும் நிறுவனங்கள் தமது பங்குதாரர்களுக்கு இவ்வாண்டு இலாபத்தில் பங்களித்தல் பொருத்தமற்றது என்ற வாதத்துடன் அதற்கு தடை கேட்டு தீர்மானம் முன்மொழிந்தனர். ஆனால் இருசபைகளிலும் இது எடுபடவில்லை. இவ்வாண்டும் பங்கு நிறுவனங்கள் தமது முதலீட்டாளர்களுக்கு இலாபத்தில் பங்களிக்கலாம் என சுவிஸ் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இடதுசாரிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுவிற்சர்லாந்தின் சுவிஸ் மற்றும் ஏடெல்வைஸ் விமானநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடனுடன் சுவிஸ் அரசு புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையினை நிபந்தனையாக்க வேண்டினர்.  இதுவும் மறுக்கப்பட்டு சுவிசின் பொதுவான நலன்களுடன் சுற்றுச்சூழல் விதிகள் நீக்கலாகக் கடனளிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்ததுள்ளது.

சுவிசின் நடுவனரசு பேரிடர்கால நடவடிக்கையாக அவசரகாலச் சட்டத்தினைப் பயன்படுத்தி தீர்மானங்களை எடுத்திருந்தாலும் 57 பில்லியனுக்கான திட்டவரைவினை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து ஆயப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது குடியாட்சியின் சிறப்பு என்று எடுத்துக்கொண்டாலும், வழமையான இடத்தில் பாராளுமன்றம்கூடாது புதிய இடத்தில் கூடியதும், போதிய அளவு கால இடைவெளிகளும், தீர்மானங்களின்போது முடிவெடுக்க போதிய காலம் அளிக்கப்படாததும், ஒன்றின்பின் ஒன்றாக முன்மொழிவுகள் பாராளுமன்றக்குழுக்களால் தாக்கல் செய்யப்பட்டதும், சுவிற்சர்லாந்தின் பாராளுமன்ற இயல்பினை குழப்பியதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சுவிஸ் தொலைக்காட்சிக்கு தமது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர்.

சில இடதுசாரிச் சிந்தனைகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீரென, வாடகைக்கு குடியிருப்போருக்கு உதவ சுவிசரசு 50 மில்லியன் அளவில் வைப்பிட்டு அறக்கட்டளை அமைக்க தீர்மானம் இயற்றினர். சுவிற்சர்லாந்தின் நிதி அமைச்சர் கட்டை விரலை உயர்த்திக் கணக்குப் பார்ப்பது நாட்டுக்கு நல்லதல்ல, உணர்ச்சி வசப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீரமானங்களைத் தாக்கல் செய்வதும் தவறென்று சுட்டிக்காட்டினார். இந்த முன்மொழிவு பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எடுபடவில்லை. இருந்தபோதும் இதுபோன்ற சில திடீர் முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதால் காலம் வீணானதாகவும் விமர்சிக்கப்பட்டது.

அதுபோல் பணச்சுமை காரணமாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு தீர்மானம் தொடர்பில் தமது கூட்டணிகளுடன் கூடிப்பேச உரிய இடத்திற்கு சென்று மீண்டும் வந்து வாக்களிக்கும்போது தவறுகள் ஏற்பட்டதாகவும், புரியாமால் தவறாக வாக்களித்த நிகழ்வும் நடந்ததாகவும் பிரெஞ்மொழி பேசும் மாநிலத்தில் இருந்து வருகை அளித்த ஓர் பாராளுமன்ற உறுப்பினர் தனது அனுபவத்தை சுவிஸ் வானொலிச் செவ்வியில் தெரிவித்திருந்தார்.

சுவிசின் நடுவனரசு அவசரகாலச் சட்டத்தினை அறிவித்து, மாநிலங்களது மற்றும் ஊராட்சி மன்றங்களது உரிமைகளை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தினை ஒத்திவைத்து, தன்னிச்சையாக பேரிடர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இச் செயற்பாடு சட்டரீதியாக சரியாக நடைபெற்றதா என்பது தொடர்பில் பாராளுமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பல்லூடகங்களில் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால் அவ்வாறு முன்மொழிவு (பிரேரணை) ஏதும் எடுக்கப்படவில்லை. ஏன் இத் தீர்மானம் கைவிடப்பட்டது என்ற சுவிஸ் வானொலியின் கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வேறுபட்ட கருத்துக்களை அளித்திருந்தனர்.

சுவிஸ் அரசுமீது பாராளுமன்ற விசாரணை இல்லை

சுவிற்சர்லாந்தின் அரசியல் வரலாற்றில் இப்படியொரு காலம் அமைந்ததில்லை. ஆகவே அரசினை பாராளுமன்றம் விசாரிக்கும் அனுபவமும் பாராளுமன்றத்திற் இல்லை. சுவிஸ் நடுவன் அரசினைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் வழிகாட்டியாக மட்டுமே இதுவரை சுவிசின் பாராளுமன்றம் இருந்து வந்துள்ளது. சுவிஸ் பாராளுமன்றம் சுவிசரசுமீது குற்றம் சாட்டி உசாவல் (விசாரணை) மேற்கொள்ளும் மரபும் சுவிஸ் அரசியல் அறியாததாகும். மேலும் கடந்த நாட்களில் இருக்கும் பேரிடர்காலச் சூழல், பாராளுமன்ற உறுப்பினர்களது துணிவினையும் குறைத்திருக்கின்றது. சுவிற்சர்லாந்தின் நடுவனரச அமைச்சர்கள் எழுவரையும் ஒருகோட்டில் நிறுத்தி கடந்த நாட்களில் நடைபெற்ற நடவடிக்கைகளை விசாரணை செய்யவதற்கு சுவிசின்; அரசியல் யாப்பில் உசாவல் செயல்முறைகள் வரையறுக்கப்பட்டதாக உள்ளது. சட்டரீதியாக பாராளுமன்ற விசாரணைக்கு உரிய அறிவினைக் குவியமாக குறுகிய நாட்களுக்குள் திரட்டும் திறனும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்க்கவில்லை. அத்துடன் சுவிஸ் அரசு மீது விசாரணையினை ஆரம்பித்து, அது தவறிப்போனால் கட்சி அரசியல் பாதிக்கப்படும் என்ற அச்சமும் இத்திட்டதினை கைவிடச் செய்திருக்கலாம் என்றார் கிறித்தவ மக்கள் கட்சியினைச் சேர்ந்த சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பேயாற் றீட்டர்.

BEA வளாகத்தில் பாராளுமன்றக்கூட்டம்

பொருட்காட்சி வளாகத்தில் பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்திருக்கின்றது. இதுவும் அரசியல் முடிவுகளில் சில தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது. பசுமைக் கட்சித் தலைவர் திருமதி. றெகுலா றிற்ஸ் கருத்துத் தெரிவிக்கையில் மொத்தப் பாராளுமன்றமும் பெரிய திடலில் இருந்தது எமது மொத்தச் செயலை ஊடறுத்துப்பார்க்க முடியாதளவு இடைவெளிகளும், மாநிலங்கள் அவையில் எக்கட்சி என்ன முடிவெடுக்கின்றது என்று உடன் அறியமுடியாத தொழிநுட்ப இடைவெளியும் நிலவியது. வழமைக்கு மாறான இடம், எமது இயல்பினைப் பாதித்தது. பாராளுமன்ற உறுப்பினர்களிடையில் சரியான தகவல் தொடர்பினை பேண முடியவில்லை, ஆகவே இச்சூழலில் அரசியலிற்கு அப்பால் உளவியல் காரணமாக சில வாக்குகள் மாறியும் இடப்பட்டிருக்கலாம் என்றார்.  

முதலாளிகள் நலன் பேணும் கட்சியான சுந்திர ஜனநாயகக் கட்சியின் கூட்டணித்தலைவர் திரு. பேயாற் வல்ரி புதிய இடத்தில் பாராளுமன்றம் ஒன்று கூடுவதற்கு சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் சிற்றுண்டி – குழம்பி (கோப்பி) இடைவெளி இல்லாதுபோனது, உறுப்பினர்களிடையில் இடைவெளி பேணவேண்டிய சுகாதார நடவடிக்கை, வழமையான நெருக்கத்தை இல்லாது செய்துவிட்டது. இந் நெருக்கம் இழந்தமையால் கட்சிகள் கடந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தவர்களுடன் பேசும் வாய்ப்பும், பலரும் கருத்துக்களைப் பரிமாறும் சூழலும், விட்டுக்கொடுப்புக்களைச் செய்து இணக்கமாக வாக்களிக்கும் தன்மையும் இம்முறைக் கூட்டத்தொடரில் இருக்கவில்லை என்றார்.

கோடைகால கூட்டத்தொடர்

கோடைகால பாராளுமன்றக்கூட்டத்தொடரும், இதே முறையில் பெரும்பாலும் பேர்ன் பேயா வளாகத்தில் நடைபெறவுள்ளது. அப்போது சில மாற்றங்கள் செய்யப்படலாம். அல்லது இவ் இடமும் முறையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பழக்கத்திற்கு வந்திருக்கும்.

சுவிற்சர்லாந்து மக்களைக் கவர்ந்த நிதியமைச்சர்

நிதி அமைச்சர் திரு. ஊவெலி மௌறெர் கருத்து பலராலும் பாராட்டப்பட்டதாக அமைந்தது. அதன் சுருக்கம்:

நீங்கள் இம்முறை கோடை விடுமுறையினை சுவிசில் கழியுங்கள், இயற்கை அழைகினைக் கண்டு இரசியுங்கள், உங்கள் பணத்தினை சுவிசிற்குள் செலவு செய்யுங்கள், சுவிசின் இயற்கையினைச் சுற்றிப்பாருங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், சிறந்த உணவினைச் சுவையுங்கள், முந்திரிச்சாறு அருந்துங்கள், நொதிக்கள்ளு (பியர்), நல்ல தண்ணீர் இவை அனைத்தும் எம்மிடம் உள்ளது.

இந்த வழமைக்கு மாறான பாராளுமன்றகூட்டத்தொடரின் செய்தியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். மக்களுடன் தோழமை வெளிப்படுத்துங்கள், நாம் முடக்கப்பட்டிருந்தோம், இப்போதும் சிறிதளவு முடக்கப்பட்டுள்ளோம். ஆகவே கோடை விடுமுறை காலத்தில் இச்செய்தியை – தோழமையை நாம் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இப்போது நாம் எவ்வளவு தொகையினை ஒதுக்கீடு செய்யவுள்ளோம் என்பதை விட இவ்விடயம் பெரியது, என்னைப் பொறுத்தவரை முடிந்தளவு குறைவாக செலவிடுங்கள், ஏனெனில் இவை எமது நாளைய கடன்கள் ஆகும். ஆனால் இக்கூட்டத்தொடர் முடிந்து நாம் எழுச்சியுடன் செயற்பட வேண்டும். மக்கள் இப்போதும் அச்சத்துடனும் உறுதி குறைவாகவும் உள்ளார்கள், அவற்றைப் போக்கு ங்கள்.

இன்றைய தலைவர்களாகிய நீங்கள், இக்கூட்டத்தொடர் முடிவடைந்து வெளியேறிச் செல்கையில் இத்தகைய வலுவான எண்ணத்துடன் செல்லுங்கள் என்றார்.

தொகுப்பு: சிவமகிழி

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments