செம்மணி விவகாரத்தை கையாண்ட நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் பதவி உயர்வு என்ற போர்வையில் இடமாற்றம்!!

You are currently viewing செம்மணி விவகாரத்தை கையாண்ட நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் பதவி உயர்வு என்ற போர்வையில் இடமாற்றம்!!
77வருடங்களாக சிங்கள ஆட்சி அதிகாரத்தால் அழிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையில் எமது மக்களுக்கு நம்பிக்கையைத்தரக்கூடிய எந்தவொரு விடயத்தையும் அநுர அரசுகூட செய்யவில்லை மாறாக முன்னைய அரசுகள் செய்த அதே கைங்கரியங்களைத்தான் அநுர அரசும் நாசூக்காக செய்கிறது. கண்துடைப்புக்காக ஒரு சில அபிவிருத்திகளை தமிழர் தாயகத்தில் செய்வதாக சர்வதேசத்திற்கு பூச்சாண்டி விடுகிறது. எமது மக்களுக்கு இவர்கள் மீதும் மிகப்பெரும் சந்தேகமிருக்கிறது.
எமது பிரதேசத்தில் நாம் பேசக்கூடிய பயன்படுத்தக்கூடிய மொழிப்பயன்பாடு எமது தாய் மொழிதானே அது எமது உரிமைதானே என்பதைப்பலர் மறந்து யாழ்ப்பாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலக விளம்பரப்பலகையில் முதலாவதாக தமிழ் இடம்பெற்றுள்ளதை பலர் தமிழீழம் கிடைத்ததைப்போல கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் கொண்டாடட்டும் சபிக்கப்பட்ட இனத்தின் வெளிப்பாடுகளில் வேறெதனை எதிர்பார்க்கமுடியும்.
ஜனாதிபதி அநுரா அவர்கள் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்ட இரண்டுநாட்களில் யாழ்ப்பாணம் வருகை தந்து சென்ற மறுநாளே செம்மணி விவகாரத்தை/சிந்துபாத்தி புதைகுழி விவகாரத்தை கையாண்ட மதிப்புக்குரிய நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் பதவி உயர்வு என்ற போர்வையில் இடமாற்றப்பட்டிருக்கிறார்.
செம்மணி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் நியாயமான தீர்ப்புகள் மூலம் சிந்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு பக்கபலமாக இருந்தவர் நீதிபதி ஆனந்தராஜா அவர்கள். இந்த நேரத்தில் அவரை இடமாற்றுவது என்பது பிரச்சினையை உண்டுபண்ணும் என்பது இந்த அரசுக்கு தெளிவாக தெரியும் ஏலவே முல்லைத்தீவு நீதிபதி குருந்தூர் மலை விவகாரத்தால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறியநிலையில் சிறிலங்கா நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அவர் கைப்பட எழுதிய கடிதத்திலே தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் நாட்டைவிட்டு வெளியேறினேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஒரு நீதிபதி தனக்கிருக்கும் அச்சுறுத்தலைக்கூட சம்மந்தப்பட்டவர்களுக்கு நாட்டிலிருந்து கொண்டு சொல்லமுடியாதளவுக்கு இங்கு நிலமைகளிருக்கிறது. அரசாங்கத்தைக்கூட நம்ப முடியாது என்பதனூடாக ஆட்சியாளர்களின் நீதிபதிகளின் சுதந்திரமான செயற்பாடுகள் மீதான அழுத்தத்தினை கட்டியம் கூறுகிறது.
மறுபுறத்தே மற்றொரு நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் பதவி உயர்வின்றி திட்டமிட்ட ரீதியில் ஓரம் கட்டப்பட்டு ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் வவுனியாவில் இடம்பெற்ற தனது பிரியாவிடை நிகழ்வில் “புரியாத புதிராக தனது நீதித்துறை வாழ்வு முடிகிறது” என்றார். ஆக நீதியின்பால் நின்று தமிழர்களின் பிரச்சினைகளை சரியாக கையாளும் நீதிபதிகளுக்கு எல்லா அரசுகளும் ஏதோ ஒரு வகையில் செக் வைக்கிறது என்பதே உண்மை.
அந்த அடிப்படையில் செம்மணிவிடயத்தை கால இழுத்தடிப்பு செய்வதற்கோ அல்லது அதன் கொதிநிலையைக்குறைப்பதற்கோ தான் நீதிபதி ஆனந்தராஜா அவர்களின் பதவி உயர்வு என்ற அடிப்படையிலான இடமாற்றம் அமைகிறது. பதவி உயர்வு இடமாற்றத்தில் சந்தேகம் ஏற்படாதிருக்க பதினெட்டு நீதிபதிகளுக்கு பதவி உயர்வு என்ற தோரணையில் நீதிபதி ஆனந்த ராஜா அவர்களும் பதவி உயர்த்தப்பட்டு இடமாற்றப்படுகிறார் என்பதே உண்மை.
முன்னைய அரசுகள் தமிழர்களுக்கு எதிராக நேரடியாக செய்ததை அநுர அரசு விசம் கலந்த வெண்மைப்பாலாக செய்கிறது. அரசின் இந்த கபட நாடகம் கூட நம்மவர்களுக்கு புரியாதிருப்பது கவலைதரும் விடயமாகும். இந்த அரசின் நுண்ணிய ஏமாற்று அரசியலை
விளங்கிக்கொள்ளாதவரை மண்டைதீவு சர்வதேச விளையாட்டரங்கும் வட்டுவாகல் பாலப்புனரமைப்பும் தங்கத்தமிழீழழத்திற்கான ஏற்பாடுகள் போல கொண்டாடுவது தவிர்க்கமுடியாதது.
-எஸ்.தவபாலன்-
பகிர்ந்துகொள்ள

Leave a Reply