செய்மதிகள் மோதிக்கொள்ள வாய்ப்பு! தலைக்குமேல் காத்திருக்கும் அபாயம்!!

You are currently viewing செய்மதிகள் மோதிக்கொள்ள வாய்ப்பு! தலைக்குமேல் காத்திருக்கும் அபாயம்!!

அண்டவெளிக்கு ஏவப்படும் செய்மதிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், செய்மதிகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் அபாயமும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளும், நிறுவனங்களும் பல்வேறு தேவைகளுக்காக பல்வேறுவிதமான செய்மதிகளை அண்டவெளிக்கு நாளுக்குநாள் அனுப்பி வரும் நிலையில், இவ்வாறு நாளாந்தம் ஏவப்பட்டுவரும் செய்மதிகளின் தொகையும் அதிகரித்தே வருகிறதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க நிறுவனமான “Tesla” வின் நிறுவனரான “Elon Musk”, வியாபாரரீதியிலான தொடர்புகளை கொண்டிருக்கும் “Starlink” நிறுவனம் மாத்திரம் கடந்த ஒருசில வருடங்களில் சுமார் 1750 செய்மதிகளை அண்டவெளிக்கு ஏவியுள்ளதாகவும், இத்தொகையானது, 2017 ஆம் ஆண்டுவரை அண்டவெளியில் இயங்குநிலையில் உலாவித்திருந்த ஒட்டுமொத்த செய்மதிகளுக்கு இணையான தொகை எனவும் கூறப்படுகிறது.

சாதாரணமாக வீதிப்போக்குவரத்துக்கான விதிமுறைகள் போல், அண்டவெளியில் உலாவித்திரியும் செய்மதிகளுக்கான தனியான போக்குவரத்து விதிமுறைகள் ஏதும் இல்லாததால், இயங்குநிலையில் உலாவித்திரியும் செய்மதிகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் அபாயம் அதிகரித்து வருவம் அதேவேளையில், அண்டவெளிக்கு ஏவப்பட்டு பல்லாண்டுகள் சேவையாற்றிய பின்னர், செயலிழந்த நிலையில் கட்டுப்பாடற்று மிதக்கும் பழைய செய்மதிகளும் ஏனைய செய்மதிகளின் பாதையில் குறுக்கிட்டு மோதல்கள் நிகழ்வதற்கான அபாயமும் நாளாந்தம் அதிகரித்து வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஆபத்துக்கள் காரணமாக, இவ்வாண்டின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் மாத்திரம் “Starlink” நிறுவனம், செய்மதிகளின் மோதல்களை தவிர்ப்பதற்காக தனது செய்மதிகளின் பாதைகளை பல்லாயிரம் தடவைகள் மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. உலகாலவியளவில் முதலாவது செய்மதி மோதலுக்கான அபாயம் 10.02.2009 ஆம் ஆண்டில், ரஷ்ய ஆளுமைக்குட்பட்ட “Arctic” பகுதியில், பூமியிலிருந்து 800 கி.மி. உயரத்தில் பறந்துகொண்டிருந்த அமெரிக்க மற்றும் ரஷ்ய தொலைத்தொடர்பு செய்மதிகளுக்கிடையில் அவதானிக்கப்பட்டதாகவும், இவ்விரு செய்மதிகளும் ஒரே பாதையில் பயணித்ததால் இவ்வபாயம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான செய்மதி மோதல்களால் ஏற்படக்கூடிய சிதைவுகள் அண்டவெளியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படும்போது, இச்சிதைவுகள் ஏனைய செய்மதிகளோடு மோதுகையில், நிலைமை இன்னும் மோசமாக்கலாம் என்பதால், அண்டவெளியில் செய்மதிகளின் பயணப்பாதைகளுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட சர்வதேச போக்குவரத்து திட்டமொன்றுக்கான யோசனையில் நோர்வே உள்ளிட்ட நாடுகள் பல அவசரமாக ஈடுபட்டுள்ளன.

செய்மதிகள் மோதிக்கொள்ள வாய்ப்பு! தலைக்குமேல் காத்திருக்கும் அபாயம்!! 1
நோர்வேயின் “Vardø” என்ற இடத்தில் அமைந்திருக்கும் “Globus – System” எனும் அண்டவெளி அவதானிப்பு நிலையம்!

நோர்வேயின் “Vardø” என்ற இடத்தில் அமைந்திருக்கும் “Globus – System” எனும் அண்டவெளி அவதானிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான அவதானிப்புக்களில், அண்டவெளியில் செயலிழந்த நிலையில் மிதந்து திரியும் பழைய செய்மதிகள், மற்றும் இயங்கு நிலையில் சுற்றும் செய்மதிகள் அவதானிக்கப்பட்டு, அவை ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் அபாயம் அவதானிக்கப்படும்போது, குறித்த செய்மதிகளை இயக்கும் நிறுவனங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கும் பணியும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும், மேற்படி அவதானிப்பு நிலையத்தின் கண்காணிப்பில் சுமார் 26.000 செய்மதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments