தமிழருக்கு சமஸ்டி தீர்வு வேண்டும்!

தமிழருக்கு சமஸ்டி தீர்வு வேண்டும்!

13 ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களுக்குப் போதுமானது இல்லை.சமஷ்டி முறையிலான ஆட்சி அதிகாரங்கள் தான் எமக்குத் தேவை. அது தான் எமது நாட்டைப் பொறுத்தவரையில் சரியான ஓர் ஆட்சி முறையாக இருக்கும் இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர்.    

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் இந்தியத்தூதுவர் கோபால் பாக்லேவை கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் சிற்பரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் அரசு எவ்வாறான விடயங்களைக் கையாளுகின்றது என்பது தொடர்பிலும், மாகாண சபைக்குக் கீழ் இருந்த அதிகாரங்கள் எவ்வாறு மத்திய அரசுக்குக் கீழ் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எதுவுமே இல்லாது இருக்கின்ற சூழ்நிலையைத் தவிர்த்து, இருக்கின்ற ஒன்றாக மாகாண சபையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அதில் அதிகாரங்களை அதிகரித்துக்கொள்வது மற்றும் பெற்றுக்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து இந்தியத் தூதுவரால் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியான காணி பறிப்பு, தமிழ் மக்களின் இருப்பு எவ்வாறு இல்லாமல் செய்யப்படுகின்றது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இந்தியத் தூதுவரிடம் விக்கி தரப்பினர் எடுத்துக்கூறினர்.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு காணிகளை சீன நிறுவனங்களுக்கும், சிங்கள முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் நிலையே காணப்படுகின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டனர்.

சீன நிறுவனங்களுக்கு மாற்று மின்சார உருவாக்கம் என்ற கோணத்தில் காணிகளைக் கொடுப்பது, அதனால் எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் என்பது தொடர்பலும் இரு சாராரும் கலந்துரையாடினர்.

பலாலி விமான நிலையம் செயலிழந்து வருகின்றமை தொடர்பில் தூதுவரிடம் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, எந்த நிலையிலும் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகச் செயற்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து இலங்கை அரசுடன் பேசப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், தலை மன்னார் – இராமேஸ்வரத்துக்கு இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதன் ஊடாக வியாபார, வர்த்தக நடவடிக்கைகள் மட்டுமல்லாது வேலைவாய்ப்புக்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் தூதுவரிடம் விக்கி அணியினர் எடுத்துக்கூறினர்.

அதேபோல் இந்தியாவில் உள்ள இலங்கைத் மிழர்களை மீண்டும் தாயகத்துக்கு அழைத்து வருவதன் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வெவ்வேறு துறைகளில் உள்ள வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வது தொடர்பில் இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தி, ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தூதுவர் உறுதியளித்தார்.

இலங்கை விடயம் தொடர்பில் ஜெனிவாவில் வரப்போகும் தீர்மானம் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதில் இந்தியா கவனம் செலுத்துகின்றது எனவும் தூதுவர் உறுதியளித்தார்.

பகிர்ந்துகொள்ள