தமிழர் தாயகத்தில் முப்படையினருக்கு கொரோனா முகாம் அமைப்பதை நிறுத்து!

தமிழர் தாயகத்தில்  முப்படையினருக்கு கொரோனா முகாம் அமைப்பதை நிறுத்து!

தமிழர் தாயகத்தில் முப்படையினருக்கான கொறோனோ பராமரிப்பு நிலையங்களை அமைப்பதனை நிறுத்த வேண்டும்.

சிறீலங்கா அரசானது கொறோனோ தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் முப்படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை, யாழ் தேசிய கல்வியில் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், சாவகச்சேரி றிபேக் கல்லூரி உள்ளிட்ட வடக்கு கிழக்கு தமிழ்ர் தாயகத்தில் சனச் செறிவு மிக்க பல இடங்களில் அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

சிறீலங்காவில் முப்படைகள் ஏற்கனவே தமிழ்த் தேசத்தின் மீதான இனவழிப்புக் குற்றவாளிகளாகவுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியும், திட்டமிட்ட ரீதியில் சித்திரவதைக்குள்ளாக்கியும் தமிழர்களுக்கு எதிரான பல சட்டவிரோத செயற்பாடுகளுக்காகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களாவர்.

அவர்கள் தமிழர் தாயகத்திலிருந்து முற்றாக வெளியேற்றப்படுவதே தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு உகந்தது என்ற அடிப்படையில் அவர்களது வெளியேற்றத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே படைத் தரப்பினர் கொறோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தமிழர் தாயகத்தில் வைத்துப் பராமரிப்பதென்பது இங்குள்ள மக்களை மீண்டும் மீண்டும் ஆபத்தினுள் தள்ளி மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழக்கக்கூடிய சூழலையே தோற்றுவிக்கும்.

கொறோனோ வைரசினால் பாதிக்கப்பட்ட எவராக இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

ஆனால் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் என்ற பெயரில் குறித்த ஓர் இனத்தை திட்டமிட்டு ஆபத்திற்குள் தள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கொறோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் அந்ததந்த மாவட்டங்களில் வைத்து மேற்கொள்ளப்படல் வேண்டும்.

மாறாக வெளிமாவட்டங்கள் அனைத்திலிருந்தும் கோறோனோ தொற்றாளர்களை கொண்டுவந்து தமிழர் தாயகத்தில் தங்கவைப்பதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே மேற்படி முப்படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்கும் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த வேண்டும் .

அரசாங்கத்தின் இச் செயற்பாட்டினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், இதனைத் தடுப்பதற்கு மக்களுடன் இணைந்து அரசியல் ரீதியாகச் செயற்படவும் தயங்கமாட்டோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

பகிர்ந்துகொள்ள