தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்துக்கு அழைப்பு!

தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்துக்கு அழைப்பு!

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

இது குறித்து வடக்கு கிழக்கு சிவில் சமூகம் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

வடகிழக்கு பூர்வீக குடிகளான நாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக போராடி வருகின்றோம்.

ஆனால் தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை யாவரும் அறிவோம்.

யுத்தம் நிறைவடைந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல் திட்டங்களை இலங்கை அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் மூலம் வடக்கில் குருந்தூர் மலை ஐயனார் கோயில், வெடுக்குநாறி மலை சிவன் கோயில், நிலாவரை, கிழக்கில் கிண்ணியா பிள்ளையார் கோயில், குசனார் முருகன் ஆலயம், வேற்றுச்சேனை சித்திவிநாயகர் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் தமது பாரம்பரிய கலாசார சமய வழிபாடுகளை செய்ய முடியாதவாறு ஆலயங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு அங்கு பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கும் முயற்சிகள் நடைபெறுகிறன.

மேலும் வடக்கு கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப் படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன.

அத்துடன் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர்.

இது அவர்களின் பேச்சுரிமை அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். அத்தோடு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

மட்டக்களப்பில் உள்ள பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாசாக்களை புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாசாகளை எரியூட்டி வருகின்றனர். இதற்கு எதிராக போராடும் முஸ்லிம் சமூகத்தையும் அடக்கி ஆள முனைகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் பலதரப்பட்ட இஸ்லாமிய மக்களை பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி தடுத்து வைத்துள்ளனர்.

இதே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைது செய்து பல வருடங்களாக தடுத்து வைத்துள்ளனர்.

இதே போன்று சிறைகளில் விசாரணைகள் இன்றி தமிழ் அரசியல் கைதிகளாக பலர் உள்ளனர். ஆனால் பல குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறது.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட் உறவுகளை தேடி வருடக்கணக்கில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான நீதியை வழங்காது அரசாங்க ஏமாற்றி வருகிறது.

அத்துடன் மலையக தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக 1000 ரூபாய் சம்பள உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

இவ்வாறு தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும் வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 3 ம் திகதி முதல் 6ம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ் பேசும் மக்களாகிய எமது அவலக் குரல்கள் சர்வதேசத்தின் மனசாட்சிகளை தட்டும் அளவுக்கு எமது போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுக்க வேண்டி உள்ளதால் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் அமைப்புகள் ஓரணியில் இணைந்து கையொப்பம் இட்டு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்ற கோரியும் அந்த கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் எதிர்வரும் 03.02.2021 தொடக்கம் 06.02.2021 வரை மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமையால் மேற்படி போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள் பல்சமய ஒன்றியங்கள் அரசியல் கட்சிகள் என அனைவரது ஆதரவையும் கோரி நிற்கின்றோம்.

மேற்படி போராட்டத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

எனவே அரசியல் கட்சிகள் உட்பட வடக்கு கிழக்கில் உள்ள அனைவரும் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பகிர்ந்துகொள்ள