தமிழீழத்தைக் கைவிட்டதாய்ச் சம்பந்தர் தடுமாறலாமா? காசி ஆனந்தன் கண்டனம்!!

You are currently viewing தமிழீழத்தைக் கைவிட்டதாய்ச் சம்பந்தர் தடுமாறலாமா? காசி ஆனந்தன் கண்டனம்!!


இந்திய உயர் அதிகாரிகள் அண்மையில் இலங்கை சென்றிருந்தபோது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களோடு உரையாடிய நேரத்தில் அவரிடம் ‘தமிழீழத்தைக் கைவிடுங்கள் – அபிவிருத்தி வேலைகளில் கவனம் செலுத்துங்கள்’ என்று கூறியதாகத் தமிழீழத் தாயகக் கொள்கைக்கு இடர்விளைக்கும் ஒரு பச்சைப் பொய்யான செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

இப்புரட்டை உடைத்தெறிவதற்காகவே நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

புவிசார் அரசியல் நிலையில் தமிழீழத்தின் ‘தாயகத் தன்மை’ இந்தியாவைப் பொறுத்தவரை புறம்தள்ளமுடியாத ஒன்று. பழைய இலங்கைத் தீவின் வரலாற்றை ஒருபுறம் விடுங்கள் – 1833இல் கோல்புரூக் ஆணைக்குழு குறிப்பிட்ட ‘இலங்கையின் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்’ என்னும் வரலாற்றுக் குறிப்பு மாண்புமிகு மோடி அவர்களின் நெஞ்சில் ஆழப்பதிந்திருக்கிறது

இதனாலேயே முன்பிருந்த இந்தியாவின் எந்தத் தலைமை அமைச்சரும் சென்றிராத தமிழீழத்தின் ஒருபகுதியான யாழ்ப்பாணத்திற்கு நேரில் சென்று பாரதத்தின் மாண்புமிகு தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் தமிழீழ மக்கள் படும் இன்னல்களைக் கேட்டறிந்தார்.

இந்திய அதிகாரிகள் இரா.சம்பந்தர் அவர்களிடம் ‘தமிழீழத்தைக் கைவிடுங்கள்’ என்று சொன்னார்களா அல்லது ‘தமிழ் மக்கள் தமிழீழக் கொள்கையைக் கைவிட்டுவிட்டார்கள். அபிவிருத்திதான் இப்போது அவர்கள் கொள்கை’ என்று இந்திய அதிகாரிகளிடம் இரா.சம்பந்தர் சொன்னாரா என்பது இறைவனுக்குத்தான் தெரியும். தமிழர்களின் நிலைப்பாட்டை இரா.சம்பந்தர் முன்மொழிந்தாரா? அல்லது சிங்கள அரசின் கூற்றை வழிமொழிந்துவிட்டு வந்தாரா? நிரலிடப்படாத இந்தச் சந்திப்பு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன. அதை அறிந்து கொள்ளும் உரிமையும் எமக்குள்ளதால்தான் தாங்கள் விரிவான அறிக்கை வெளியிடவேண்டும்.

தமிழீழத் தாயகம் நொடிக்கு நொடி சிங்களக் குடியேற்றத்தால் திட்டமிட்டு விழுங்கப்பட்டுத் தன் ‘தாயக அடையாளத்தை’ இழந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் தமிழீழத் தாயக ‘மீட்பு’க்கு இந்தியாவின் துணை தேவை என்று தமிழீழ மக்கள் ஏங்கிநிற்கும் ஒருகாலச்சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழர்களின் 70 வருட போராட்டத்தையும் அரசியல் உரிமைகளையும் காவு கொடுக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?

ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் தமிழீழ அரசியல் போராட்டக்களம் தங்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த உயர்ந்த பணியைத் தாங்கள் நேர்மையாகச் செய்கிறீர்களா?

தந்தை செல்வா அவர்களின் தலைமையில் தமிழரசுக் கட்சியினர்தான் 1976இல் – வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழத் தாயகக் கோட்பாட்டை உறுதிசெய்து – அதன் விடுதலைக்கான கோரிக்கையையும் தீர்மானமாக நிறைவேற்றித் தந்தார்கள்.

அதே தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இரா.சம்பந்தர் அவர்கள் தமிழீழ மக்கள் தலையில் இப்படி அள்ளி வைக்கலாமா?

தமிழீழ அபிவிருத்திக்காக அல்ல – தமிழீழ விடுதலைக்காகவே 40,000 மாவீரர்கள் தங்கள் இன்னுயிரைக் கொடையாகத் தந்தார்கள்.

இரா.சம்பந்தர் போன்ற தலைவர்கள் தடுமாறும் இக்கொடிய காலகட்டத்தில் நான் தமிழீழ மக்களிடம் வைக்க விரும்பும் பணிவான வேண்டுகோள் இதுதான்.

இரு தேசக் கொள்கையை வலியுறுத்திவரும் தலைவர் கஜேந்திரகுமார் இருக்கிறார் – தமிழினம் இலங்கையில் சிங்கள இனம் தோன்றுவதற்கு முன்பு தோன்றி வாழ்ந்த பழம்பெரும் இனம் என்னும் வரலாற்றுண்மையை நாடாளுமன்றத்தில் இடித்துரைத்த தலைவர் விக்னேசுவரன் இருக்கிறார். இரா.சம்பந்தர் போன்றவர்கள் இத்தலைவர்களுடன் இணைந்து வட்டுக்கோட்டை மாநாட்டைப் போல் ஒரு மாநாட்டைக் காலம் தாழ்த்தாமல் நடத்தித் ‘தமிழீழ மீட்பு’ என்று தீர்மானம் இயற்றுவதில் உங்களுக்குச் சட்டச் சிக்கல்கள் இருககுமானால் ‘தமிழீழக் காப்பு’ என்றாவது தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

‘தமிழீழக் காப்பை’ உறுதி செய்வதில் இந்திய அரசு முழு அளவில் உதவவேண்டும் என்னும் தமிழீழ மக்களின் எதிர்ப்பார்ப்பையும் தமிழர் தலைவர்கள் இம்மாநாட்டில் தீர்மானமாய் இயற்றல் வேண்டும்.

உலககெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழர் நெஞ்சில் மட்டும் அல்ல – அனைத்து உலகத் தமிழர் நெஞ்சிலும் – ‘தமிழீழம் தமிழர் தாயகம்’ என்னும் உரிமைப் போர்க் கனல் பற்றி எரிய உணர்வூட்டுவோம்.

அன்பின்,
கவிஞர் காசிஆனந்தன்
தலைவர், ஈழத் தமிழர் நட்புறவு மையம்
நாள்: 21-12-2020

பகிர்ந்துகொள்ள