தமிழீழ தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதை இலங்கை அதிகார வர்க்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழீழ தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதை இலங்கை அதிகார வர்க்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

https://www.facebook.com/335638133125791/posts/3369319673090940/

சென்னை இலங்கை தூதரகத்திற்கு முன்பு எம் தமிழீழ மக்களின் உரிமை கேட்டு கண்டனம் தெரிவிக்க சென்ற தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் , அவைத்தலைவர் வில்லியப்பன், மார்ல துணைப் பொதுச்செயலாளர் பசீர், பச்சை தமிழகம் கட்சி அருள் உள்ளிட்ட தமிழ்ப் பேரரசு கட்சி நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டு விடுதலையாகியுள்ளனர்.

அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்

பெறுநர்:

முதன்மை அதிகாரி
இலங்கை துணை தூதரகம்,
நுங்கம்பாக்கம்,
சென்னை 34.

ஐயா,

அகிம்சை போராளி “தியாக தீபம்” திலீபன் அவர்கள் பனிரெண்டு நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உயிர்துறந்த வரலாற்று பெருநிகழ்வினை எங்களின் தமிழீழ மக்கள் கடந்த 32 ஆண்டுகளாக நிகழ்வாக நடத்தி போற்றி வந்தனர். திடீரென்று இந்த ஆண்டு இலங்கை அதிகார வர்க்கம் திலீபன் அவர்களின் நினைவு தின நிகழ்வினை நிறுத்த சொல்லி தடை விதித்திருகிறது. அறமற்ற இச்செயலுக்கு தமிழீழ மக்களின் தொப்புள்கொடி உறவுகளான நாங்கள், எங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள், இந்திய ஒன்றியத்திற்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் முருகன் கோவில் வாசலில் இந்திய ஒன்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் வழியில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தியவர் திலீபன் அவர்கள். அதிகாரத்தின் ஆணவத்தோடு திலீபன் அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக “தீவிரவாதி” என பட்டம் சுமத்தி அவமானப்படுத்துவதையும், எங்கள் தமிழீழ மக்களின் உரிமைகளை தொடர்ந்து பறித்துக் கொண்டிருப்பதையும் இனியும் நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது.
இதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் என்கிற எங்களின் உயிர்ச்சொல்லை தமிழீழத்தில் இனி எவராவது பயன்படுத்தினால் அது “தேச துரோகம்” என இலங்கை அதிகாரத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டதாக அறிகிறோம். எங்கள் பெருமைமிக்க தமிழீழ மண்ணின் வரலாற்றை தெரிந்துகொண்டு திரு. ராஜபக்சே அவர்களோ, திரு. கோத்தபயா ராஜபக்சே அவர்களோ இனி பேசட்டும்.

இலங்கை என்னும் தமிழ்ச் சொல்லே “லங்கா” என இன்றுள்ள இலங்கையைக் குறிக்கும் சொல்லாகியது. சிங்களவர்கள் தங்கள் நாடு என்று சொல்லும் லங்காவுக்கு அவர்களுடைய சிங்கள மொழியில் ஒரு சொல் கூட இல்லை. அவர்கள் நடத்தும் ஆட்சியை “ரஜ” என்கிறார்கள். அரையன் எனும் தமிழ்ச் சொல் அரசை குறித்த சொல்லாகும். இதையே “ரஜ” என சிங்களவர்கள் தங்கள் மொழியில் இணைத்துக் கொண்டார்கள். சிங்கள மொழியில் அவர்கள் நாட்டை குறிக்கவும் சொல் இல்லை. அவர்கள் அரசை குறிக்கவும் சொல் இல்லை. இவர்கள்தான் இப்போது “தமிழீழம்” எனும் ஒரு தமிழர் நாடு இலங்கைத் தீவில் இல்லை என்கிறார்கள்.
அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் “தமிழ்”, “ஈழம்” ஆகிய சொற்கள் காணப்படுவதாக புதைபொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் இலங்கையை ஆண்ட மன்னன் தேவநம்பிய தீசன் ஒரு தமிழனாவான். அவன் தந்தையின் பெயர் மூத்த சிவா. இனத்தால் தமிழனாகவும், மதத்தால் சிவ சமயத்தனாகவும் அவன் இருந்தான். இவன் காலத்தில் இலங்கைத் தீவு தமிழர் தேசமாகவே இருந்தது. இதே கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் புத்த சமயம் இலங்கையில் நுழைந்து தேவநம்பியதீசன் ஒரு புத்த மதத்தினனாக மாறுகிறான்.
இலங்கை தமிழர்கள் சைவத் தமிழர்கள்- புத்தமத தமிழர்கள் என இரு பிரிவாகிறார்கள்.
சிங்கள மொழியும், இனமும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே தோற்றம் பெறுவதை பார்க்கிறோம். இதன் பின்பே இலங்கைத் தீவு இரு தனித்தனி மதங்களாக கொண்ட இரு தேசிய இனங்களாய் சிதைகிறது. புத்த சிங்களவர்கள் ஒரு தேசிய இனமாகவும்- சைவத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாகவும் ஆன காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டேயாகும். 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழ்நாட்டோடு இணைந்திருந்த காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்மொழி தோன்றியதாக மொழியியல் வரலாற்றறிஞர் பாவாணர் கூறுகிறார். இக்கோட்பாட்டை மேனாட்டு மொழி இயல் மேதையான லெவிட் போன்றோர் ஒப்புக் கொண்டுள்ளனர். தமிழ் மொழி தோன்றி 50,000 ஆண்டுகள் ஆகின்றன. சிங்கள மொழி தோன்றி 1400 ஆண்டுகள் கழிந்து உள்ளன. 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு நாடில்லை என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தோன்றிய சிங்களர்கள் கூறுவது திமிர்த்தனமாக இருக்கிறது.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இலங்கைத்தீவு இரண்டு தேசிய இனங்களின் இரண்டு தாயகங்களில் நாடானது. ஒன்று சிங்கள சிறீலங்கா இன்னொன்று தமிழீழம் சிறீலங்கா தமிழீழம் என்னும் நாட்டு பெயர்கள் பின்பு தோன்றியிருந்தாலும், இரண்டு தாயகங்கள், இரண்டு தேசிய இனங்கள், இரண்டு அரசுகள், எனும் நிலை சிங்கள மொழியும் இனமும் தோன்றிய கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்பு தோன்றிற்று.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலம் நீண்ட நெடுங்காலமாகத் தமிழர்களின் தாயகமாகவே விளங்கி வருகிறது.

1833 இல் வெளியான கோல்புருக் ஆணைக்குழு அறிக்கையில் “The North and East of Srilanka is the ancestral Home Land of Tamils ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மைதான் இந்நிலப்பரப்பைத் தமிழ் மன்னர்கள் பலர் பிற்காலத்தில் கூட நீண்ட நெடுங்காலம் அரசு கொண்டு ஆண்டிருக்கிறார்கள்.
யாழ்ப்பாண அரசு சங்கிலியன் ஆட்சிக்கு உட்பட்டதாய் இருந்தது. வன்னி அரசு பண்டார வன்னியனின் ஆளுமையின் கீழ் இருந்தது. திருக்கோணமலை அரசு குளக்கோட்டனின் பேரரசாக இருந்தது. மட்டக்களப்பு அரசு அரசி உலக நாச்சியாரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
தமிழீழம் தமிழர் தாயகம் என்பதை சிங்களவர்கள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழீழம் தமிழர் தாயகமே. இப்படிப்பட்ட உண்மையான உன்னதமான வரலாறுகளை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு மூடி மறைக்க முடியும்?

தாய்த் தமிழகத்து உறவுகளான நாங்கள் விரும்புவதெல்லாம் எப்பொழுதும் போல “தியாக தீபம்” திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்ந்து நிகழவேண்டும். தமிழீழம் எங்கள் தமிழர்களின் பூர்வகுடி மண். தமிழீழ மண்ணை ஆண்டு வாழ்ந்தவர்கள் எங்கள் தமிழீழ மக்களும் மன்னர்களும். இறுதி யுத்தத்தில் ஒன்றே முக்கால் லட்சம் தமிழர் உயிர்களை இனப்படுகொலை செய்ததற்குப் பிறகும் எங்கள் தமிழீழ மக்களின் உரிமைகளை தொடர்ந்து பறித்து, கலை கலாச்சார பண்பாட்டு சிதைவுகள் நடத்தப்படுவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மேற்கண்ட அனைத்தையும் சரி செய்து கொள்ள வேண்டுமென அறத்தோடு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்.

வ.கௌதமன்
தமிழ்ப் பேரரசு கட்சி,
பொதுச்செயலாளர்,
“சோழன் குடில்”
25.09.2020

பகிர்ந்துகொள்ள