தமிழீழ மருத்துவர் சத்தியாவுக்கு அகவை 50!

தமிழீழ மருத்துவர் சத்தியாவுக்கு அகவை 50!

சீரோடும் பெரும் சிறப்புகளோடும் நாம் வாழ்ந்த காரைநகரில் திரு.கதிரவேலு
திருமதி வசந்தி தம்பதிகளின் தலைமகனாக 11 – 02 – 1971ஆம் ஆண்டு அவதரித்தார்.

காந்தத்தைப் போல கவர்ந்திழுக்கும் கண்களையும் அழகிய வதனமும் வெள்ளை நிறமும் கொண்ட குண்டான அந்தக் குழந்தையை ஊரில் எல்லோரும் “மாம்பழம்” என்றே அழைத்தனர்.

காரைநகரில் ஆரம்பக் கல்வியைக் கற்று ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் யாழ்மாவட்ட மட்டத்தில் அதி கூடிய புள்ளிகள் பெற்று யாழ் இந்துக் கல்லூரியில் க/பொ/த உயர்தரம் வரை கல்வி கற்ற பரீட்சையிலும் நல்ல பெறுபேறுகளை தனதாக்கியவர்.

மருத்துவ பீடத்துக்கான தெரிவுக்கு சிறிதளவு புள்ளிகளே குறைவடைந்து பல்வைத்தியம் கற்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை உதறிவிட்டு தாயக விடுதலையினையே தன் வாழ்வின் குறிக்கோளாக்கி விடுதலை நோக்கிய பாதையில் பயணிக்கும் நோக்கில் போராளிகளோடு தொடர்பினை ஏற்படுத்தினார்.

தமிழீழ மருத்துவர் சத்தியாவுக்கு அகவை 50! 1

காரைநகரில் பெருந்தளம் இட்டு மக்களை அச்சமூட்டிய கடற்படையின் அடாவடித்தனம் கண்டு யாழ் நகரின் பிறவுண் வீதியில் உள்ள ஒரு வீட்டில் தாய் தந்தையருடன் வசித்த இளைஞர் சத்தியாவின் செவிப்பறையில் மெல்ல மெல்ல போர்ப்பறை கேட்கத் தொடங்கியது.

1990 ஆம் ஆண்டு கோட்டையில் இருந்த ஶ்ரீலங்கா இராணுவம் தொடர் எறிகணைத் தாக்குதல்கள் மூலம் யாழ் நகரையே நிர்க்கதிக்கு உள்ளாக்கியது.

கோட்டையிலிருந்த இராணுவத்தினர் யாழ் நகரில் மக்கள் நிறைந்து வழியும் நேரங்களில் உயரமான காப்பரண்கள் மற்றும் காவல் கோபுரங்களிலிருந்து நேரடியாகவும் தொலை நோக்கிகள் மூலமும் பார்த்துவிட்டே தாக்கிய சம்பவங்கள் வாலிப வயதின் மிடுக்குடன் இருந்த சத்தியாவை வெகுவாக பாதித்தது.

வடமாகாணம் முழுவதற்குமான பிரதான வைத்தியசாலை வளாகத்தினை
வேண்டுமென்றே இயங்கவிடாமல் இடையறாமல் தாக்கினர்.

வைத்தியசாலை கூட முழுவதுமாக இடம்பெயர்ந்து வேறு இடத்தில் இயங்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி தனது கோரப்பற்களை சிங்கள அரசு தமிழர்கள் மீது பதித்தது.

இந்த நிலையில் யாழ் மண்ணிலும் தமிழர் தாயகம் எங்கும் கேட்ட அப்பாவி மக்களின் அவலங்களை நேரே பார்த்தும் கூக்குரல்களை குரல்களை கேட்டும் கொதித்தார்.

1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் தென்கரையோர ஊரான மணியந்தோட்டத்தில் அக்காலத்தில் அமைந்திருந்த பாசறையில் ஆயுதப் பயிற்சியைப் பெற்றார்.

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் அரசியல் பணியில் ஈடுபட்டார்.

மக்கள் மத்தியில் அரசியல் பணியில் ஈடுபடும் போராளிகள் பரிபூரணமான அரசியல் விழிப்புணர்ச்சி உள்ளவர்களாக புடம் போடப்பட வேண்டும் என்பதற்காய் மேலும் கற்றல் நடவடிக்கையில் ஈடுபாடு கொண்டார்.

1991ஆம் ஆண்டுகளில்
மட்டுவிலில் அமைந்திருந்த
“அரசியல்பயிற்சிகல்லூரி”யில் அரசியல் விஞ்ஞானம் கற்றுத் தேர்ந்தவர்.

பயிற்சி கல்லூரியின் நிறைவில் ஒரு பரிபூரண அரசியல் போராளியானார்.

நெஞ்சில் பொங்கியெழும் உணர்வினை அற்புதமாய் வெளிப்படுத்தக் கூடிய திறமை பாடசாலைப் பருவத்திலேயே மருத்துவர் சத்தியாவிடம் இருந்தது.

அரசியல் பயிற்சிக் கல்லூரியில்
சிறந்த பேச்சாற்றலையும் ஆளுகைத்திறனையும் வெளிப்படுத்தினார்.

ஆங்கு நடாத்தப்பட்ட அனைத்து பாடப் பரீட்சைகளிலும் அதிக புள்ளிகள் பெற்றதுடன் அற்புதமான பேச்சாற்றலையும் வெளிப்படுத்தினார்.

அக்காலத்தில் அங்கே விரிவுரைகள் நிகழ்த்திய இன்றும் பெயர் குறிப்பிட முடியாத எங்கள் கல்வியாளர்கள் சத்தியா எனும் போராளியின் அதிதிறன்
கண்டு வியந்தனர்.

விரிவுரை ஆற்றிய விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களும் சத்தியாவை மிக முக்கியமான இடங்களில் கடமைக்கு அனுப்பினர்.

அரசியல் கல்லூரியிலிருந்து மக்கள் பணிக்கு அனுப்ப முன்னர் பாராட்டிப் பல பரிசில்களையும் இவருக்கு வழங்கினர்.

எமது விடுதலை இயக்கத்தின் அப்போதை பிரதித் தலைவர் இவருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றினையும் பரிசளித்திருந்தார்.

தனது அரசியல் பணியை மக்களிடையே ஆரம்பித்த நேரம் உரும்பிராயில் படையினரால் அடித்து நொறுக்கப்பட்டிருந்த தியாகி சிவகுமாரன் அவர்களுடைய திருவுருவச் சிலையை திருத்தினார்.

அஃதே,

இணுவிலில் அமைந்திருந்த அறிவியல் கழகமும் இவர் வலிகாமம் பகுதி மாணவர் அமைப்பின் பொறுப்பாக இருந்த நேரம் தலைவரின் ஆசீர்வாதத்துடன் அமைக்கப்பட்டது ஆகும்.

1993 ஆம் ஆண்டு பூநகரி இராணுவத்தளம் மீதான தாக்குதலில்
களவிநியோக பணிகளில் ஈடுபட்டார்.

அந்த நடவடிக்கையின் பின்னர் தலைமைச் செயலகத்தின் பணிப்பிற்கு அமைய தமிழீழ மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

1995ஆம் சூரியக்கதிர் – 01 நடவடிக்கை மூலம் வலிகாமத்து மக்கள் வண்ணாத்திப்பாலம் ஊடாக முற்றுமுழுதாக வெளியேறிய நேரம் பல நாட்கள் குமுறியபடியே இருந்தார்.

யாழ்ப்பாண மாவட்டம் முற்றுமுழுதாக இராணுவ ஆளுகைக்குள் வீழ்ச்சியடைந்த பின்னரும் வலிகாமம்
பகுதியில் நிலைகொண்டிருந்த சிறுத்தைப் படையணிகளுக்குரிய மருத்துவ பணியினைத் தொடர்ந்தார்.

பகிர்ந்துகொள்ள