தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பொன்னகவை நாள்!

You are currently viewing தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பொன்னகவை நாள்!

பொன்னகவையில் எழுச்சிகொள்ளும் பேரியக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா இனவாத அரசு மேற்கொண்ட, அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்து எழுச்சிகொண்ட தமிழினம் விடுதலை வேண்டிப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டது. அப்போராட்டம், விடுதலை நோக்கி படிமுறை வளர்ச்சிகண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் பேரியக்கமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. அப்பேரியக்கம் அகவை ஐம்பதை நிறைவு செய்யும் பொன்னகவை ஆண்டில், தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனை வழியில், உலகத்தமிழினம் பேரெழுச்சி கொண்டு உறுதியோடு விடுதலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் என்பது வெறும் நாள்காட்டிக் கணக்கல்ல அது ஒரு தேசிய இனம் தன் மொழி, நிலம், அடையாளம், உரிமை ஆகியவற்றின் அழிப்பிற்கு எதிராகத் தன்னுடலையே கவசமாக மாற்றிக்கொண்ட வரலாற்றுத் திருப்பம். ஈழ நிலத்தில் கருக்கொண்ட உரிமைக்கான இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகளாக அமைப்புருவாக்கம் பெற்று இன்றுடன் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன.

வேரின் தொன்மையும் வெளியார் ஆதிக்கமும்

ஈழநிலம் என்பது கடல் அலையோடு உரையாடும் நெய்தலும் மருதமும் குறிஞ்சியும் முல்லையும் கொண்ட,வளம் நிறைந்த  எமது தாயகம். தொன்மைக் காலந்தொட்டே இறைமையுள்ள பெருநிலமாக, தமிழ்ப்பேரரசாகத் தன்னாட்சியோடு நிமிர்ந்து நின்ற எமது தேசம், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் எனத் தொடர்ச்சியாக வந்த அன்னியரின்  ஆக்கிரமிப்புக்களால், எமது மண் தன்னாட்சியுரிமையை இழந்திருந்தது. எனினும், எமது பண்பாட்டு வேர்கள் பாறைகளைக் குடைந்து தம் உயிர்ப்பைத் தக்கவைத்திருந்தன.

அதிகாரக் கைமாற்றமும் உரிமைக் கழுவேற்றமும்

1948 இல் பிரித்தானியர் வெளியேறியபோது, எமது பறிக்கப்பட்ட இறைமை மீளளிக்கப்படவில்லை. மாறாக, அதிகாரத்தின் கடிவாளம் ஒட்டுமொத்தமாகச் சிங்கள இனவாதத்தின்  கைகளில் கையளிக்கப்பட்டது.சிங்கள ஒற்றையாட்சி என்னும் ஆக்கிரமிப்பு இனவாத அரசு, தமிழரின் மொழி, நிலம், பொருளியல் ஆகியவற்றின் மீது பாரிய தாக்கங்களைச் செலுத்தத்தொடங்கியது. மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பறிப்பு, தனிச்சிங்களச் சட்டம், கல்வியில் தரப்படுத்தல் என ஒவ்வொரு சிங்கள அரச நகர்வும் எமது இருப்பின்  வேர்களைத் துண்டிக்கும் கோடரிகளாகவே இறங்கின. சிங்கள அரச இனவாதம் தன் கோரப்பற்களைக் காட்டி, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் எம் தாயக நிலத்தினைப் பறித்துதெடுக்கத்தொடங்கியது. இதற்கெதிராக உரிமைகோரி அறவழியில் முழங்கிய குரல்வளைகள் யாவும் சிங்கள அரச வன்முறையின் இரும்புக்கரங்களால் நெரிக்கப்பட்டன. தமிழ் மக்களின் இந்த அறவழிப்போராட்டங்கள் சிங்கள அரச வன்முறைகளால் குருதியில் மூழ்கடிக்கப்பட்டன.

அறத்தின் மரணமும் ஆயுதத்தின் பிறப்பும்

தமிழினம் மீது சிங்கள இனவாத அரசு மேற்கொண்ட அனைத்து அடக்குமுறைகளிற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட  அறவழிப்போராட்டங்களும் பொய்த்துப்போய், சிங்கள அரசு ஆயுதவழியில் முடக்க முற்பட்டபோது வரலாறு தமிழினம் மீது ஆயுதவழிப்போராட்டத்தினைத் திணித்தது. அப்போராட்டம், 1972 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ‘’புதிய தமிழ்ப் புலிகள்’’ என்னும் அமைப்பாகக் கருக்கொண்டது.  பதினேழு அகவையே நிரம்பிய  தமிழீழத தேசியத்தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெஞ்சில் மூண்ட தீ, விடுதலைத்தாகத்துடன் சிதறுண்டிருந்த இளைஞர்களை ஒன்றிணைத்து, இரும்பையொத்த கட்டுப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பே, தமிழினத்தின் விடுதலைப்பேரொளியாக அமைந்தது.  இப்பேரொளியானது, உக்கிப்போன மரபுகளையும் வளைந்த முதுகுகளையும் நிமிர்த்த நிலத்தில் விழுந்த முதல் புரட்சி விதையாகும். ஆட்சியாளர்களின் நயவஞ்சகம் பனிப்பாறை போல் குளிர்ந்து எம் உரிமைகளை உறைத்துச் சாகடித்தபோது, அடக்குமுறைக்கு எதிரான இயற்கையின் மாபெரும் எதிர்வினையாக, புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பானது, தன் மனஉறுதி கொண்ட கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தியது. அதுவே 1976 மே 5 இல் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்னும் பேரியக்கமாகப் பரிணாமம் கண்டது. ஒரு தேசிய இனத்தின் தற்காப்புக் கவசமாக அந்த இயக்கம் தாயக நிலமெங்கும் படர்ந்தது.

பேரியக்கத்தின் வளர்ச்சியும் தன்னாட்சி அரசும்

தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சியானது , வெறும் ஒரு இராணுவரீதியான வளர்ச்சியல்ல, ஒரு நடைமுறை அரசின் உருவாக்கம். ஒற்றையாட்சி என்னும் பாறாங்கல் தமிழர்களின் கழுத்தை நெரித்தபோது, மூச்சுத் திணறிய இனம் தன் குருதியால் அந்தப் பாறையைக் குடையத் தொடங்கியது. தரைப்படை, கடற்படை, வான்படை எனப் பரிணமித்த அந்தப் பேரியக்கம் புலனாய்வுத்துறை, காவற்துறை, நீதித்துறை, படைத்துறை, நிதித்துறையெனும் பொருளியல் கட்டமைப்பு மற்றும் தமிழீழ வைப்பகம் என ஒரு தேசத்துக்கான அனைத்து உறுப்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. அத்தோடு, தமிழ்மக்கள் மீது சுமையாக இருந்த அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறியும் உயரிய விழுமியங்களைக்கொண்ட இறுக்கமான பேரமைப்பாக வளர்ச்சிகண்டது. மக்களின் வாழ்வியலுக்கான உட்கட்டமைப்புகள் மிகநேர்த்தியான முறையில் அடித்தளமிடப்பட்டது. பெண்ணியம் சார்ந்த அடிமைநிலைகள்; உடைக்கப்பட்டு, உரிமைகள் மதிக்கப்பட்டதோடு, மக்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழும் பொற்காலமாக அக்காலம் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலக வல்லரசுகளின் வியூகங்களை எதிர்கொண்டு, தமிழர்களின் நிலத்தை மீட்டுத் தன்னாட்சி செலுத்திய பொற்காலம் அது. குருதியும் வியர்வையும் பெருக்கெடுத்த களங்களில், ஈழத்தின் புதல்வர்கள் தம் உயிரை விதையாகத் தூவி நிலத்தை உழுதார்கள். இயந்திரத்தனமற்ற, உயிர்ப்புள்ள ஓர் அரசை ஈழநிலம் கண்டது. அது தமிழினத்தின் பேரவாக்களை அடிநாதமாகக் கொண்டும்; தமிழீழ நிகழரசாகவும் திகழ்ந்தது.சிங்கள இனவாத அரசின் மனபலத்தாலோ படைபலத்தாலோ என்றுமே தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகளிற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், சர்வதேச நாடுகளிடம் தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பான பொய்யான பரப்புரைகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டிருந்தது. அதன்விளைவாகச் சர்வதேச நாடுகளின் பாரிய ஆயுதம் மற்றும் தொழிநுட்ப உதவியினைப் பெற்று, எமது மக்கள் மீது இனவழிப்புப் போரை நடாத்தி, தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து, இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலைகளைச் செய்ததோடு, அவர்களை வாழிடங்களைவிட்டு இடம்பெயரச்செய்து, முள்ளிவாய்க்காலில் மாபெரும் பேரவலத்தை, சர்வதேச நாடுகளின் ஆதரவோடு சிங்கள அரசு ஏற்படுத்தியிருந்தது.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல!

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதே தவிர, தமிழ்மக்களின் விடுதலை வேணவா அனைத்து வழிகளிலும் எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டே வருகிறது. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது சிந்தனை வழிநின்று, மாவீரர்கள் காட்டிய பாதையில், தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம். தமிழீழ விடுதலைப் புலிகளெனும் பேரியக்கத்தின் பொன்னகவை ஆண்டில், தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்கொள்ளும் தடைகளை உடைத்து, சவால்களை எதிர்கொண்டு, துரோகங்களைக்கடந்து ஓரணியாகப் பயணிப்போமென இந்நாளில் உறுதியெடுத்துக்கொள்வோமாக!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம், 

தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பொன்னகவை நாள்! 1

 

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பொன்னகவை நாள்! 2

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply