தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொது வெளியில் தெரிவித்த கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்,

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அத்தனை இயக்கங்களும் தமது உயிர்களை துச்சமென மதித்து போராட்டக் களம் புகுந்திருந்தனர்.கால மாற்றங்களுக்கேற்ப ஆயுத இயக்கங்கள் ஆயுதப் போராட்ட வழியிலான தமது பயணங்களை மாற்றியமைத்து கொண்டன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரையில் விடுதலைக்கான ஒரே வழியாக ஆயுதப் போராட்டத்தையே முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இது வரலாறாக இருக்க ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று ஜனநாயக வழி வந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் 2001ஆம் ஆண்டு தமிழின விடுதலைக்கான அரசியல் ரீதியான நகர்வினை ஆரம்பித்திருந்தன.

கடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்கள் கரம் கோர்த்து ஒன்றாக செயற்பட்டனர். சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களால் ஆயுதப்போராட்டத்திற்கு வந்த இயக்கங்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பழைய கசப்பான சம்பவங்களை கிளறி விரிசல்களை ஏற்படுத்த பார்க்கின்றார்.

இவ்வாறிருக்க விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனோநிலையையும் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் சுமந்திரன் போர்ச்சூழல், நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னரே அரசியலில் பிரவேசித்தார்.

ஆகவே, விடுதலைப் போராட்டத்தில் வித்தாகியவர்களின் அர்ப்பணிப்பை இவர் உணர்ந்திருப்பதற்கு எந்த விதமாக வாய்ப்புக்களும் இல்லை. விடுதலை புலிகளுக்கு எதிரான தனது தனிப்பட்ட கருத்தியலை பொது வெளியில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த விடுதலை இயக்கங்களையும் அகௌரவப்படுத்தியுள்ளார்.

அது மட்டுமன்றி கடந்த கால கசப்பான விடயங்களை மீட்டு உயிர்த் தியாகங்களைச் செய்த விடுதலை இயக்க நபர்களை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் சாதாரண பிரஜைகளாக சமூகத்தில் வாழும் அனைத்து போராளிகளுக்கும் மனக் கவலையை உருவாக்கியுள்ளார்.

ஆயுத விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கு அருகதையற்ற இவர் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புக்களின் கரங்களை பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

ஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் செயற்பாடுகளை அக்கட்சியின் கத்துக்குட்டியாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தனது தனிப்பட்ட சிந்தனையில் விடுதலைப் புலிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்கள் அரசியலில் சுய இலாபத்தை ஈட்டுவதற்காக ஒட்டுமொத்த விடுதலை மறவர்கள் மீதும் சேறு பூசும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமந்திரனைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்களும் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களையும் மிகமோசமான வார்த்தை பிரயோகங்களால் விமர்சித்தது மட்டுமன்றி கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை யென்பதை பகிரங்கமாக தெரிவித்து வந்திருக்கின்றார்.

ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கொடுரமானவர்கள் பயங்கரவாதிகள் என்று விமர்சித்துக்கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர்களது தியாகங்களை கொச்சைப் படுத்துபவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடைய போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொது மக்கள் இவர்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments