தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து மணியை நீக்கிவிட்டோம் – கஜேந்தரகுமார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து மணியை நீக்கிவிட்டோம் – கஜேந்தரகுமார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

யாழிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,

“மணிவண்ணன் கட்சியின் கொள்கையை மீறியதுடன், கட்சியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டார். அதனால் அவர் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனை நாம் கடிதம் மூலம் அறிவித்தோம். அதற்கு அவர் எழுத்து மூலமாக பதில் அனுப்பி இருந்தார். அதனை நாம் மத்திய குழுவில் ஆராய்ந்து அவரின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் கருத்தில் கொண்டு அவரை நாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளோம். அது தொடர்பில் அவருக்கு அறிவித்துள்ளோம்.

இரண்டு கிழமைக்குள் அவர் பதில் அனுப்ப வேண்டும். உறுப்புரிமையை நீக்கப்பட்டதற்கு நிரந்தமாராக நீக்காது இருக்க அவர் பதில் அனுப்ப வேண்டும். அதன்பின்னர் இரண்டு கிழமைக்குள் பொதுகுழு அமைத்து விசாரணை முன்னெடுக்கப்படும். அந்த விசாரணையின் பின்னர் கட்சியின் உறுப்புரிமையில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா? இல்லையா ? என தீர்மானிப்போம்.

இந்த கால கட்டத்தில் பொதுமக்களுக்கு அறியத்தருவது யாதெனில், இன்று முதல் கட்சியின் செயற்பாட்டில் மணிவண்ணன் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டாது. கட்சியின் பெயர் அல்லது சின்னத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளோம். அவர் கட்சியின் பெயரில் செயற்பட்டால் அது கட்சி ரீதியானது அல்ல. அது கட்சியை மீறியது என அறிய தருகின்றோம்.

ஒழுங்காற்று விசாரணைகள் முடிந்த பின்னர் மேலதிக தகவல்களை அறிவிப்போம். உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்பதனை மக்களுக்கும், எமது ஆதரவாளர்களுக்கும் அறிவிக்கின்றோம். மணிவண்ணனின் கருத்துக்களோ செயற்பாடுகளோ கட்சியின் செயற்பாடாக இனிவரும் காலங்களில் அமையாது.

மணிவண்ணன் தொடர்பில் நாம் இவ்வளவு காலமும் அமைதி காத்தமையினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.இனிவரும் காலங்களில் மணிவண்ணன் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர், தேசிய அமைப்பாளர் என ஊடகங்களில் பிரசுரிக்காதீர்கள்.

ஊடகவியலாளர்கள் செய்திகளில் பிரசுரிக்காமல் விட்டால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பாடாது. மக்களுக்கு உண்மைகளை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது” – என்றார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments