தரமில்லாத இலத்திரனியல் சாதனங்கள்! பொது மக்களே, அவதானம்!!

You are currently viewing தரமில்லாத இலத்திரனியல் சாதனங்கள்! பொது மக்களே, அவதானம்!!

நோர்வேயில் அதிகளவில் தரமில்லாத இலத்திரனியல் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணைய வர்த்தகம் முனைப்பு பெற்றதன்பின், வர்த்தக நிலையங்களுக்கு நேரடியாகவே சென்று இலத்திரனியல் பொருட்களை வாங்குவதிலும் பார்க்க, “இணைய வர்த்தகத்தில் / Web Shop” இல் கணிசமான மலிவுவிலையில் இப்பொருட்கள் கிடைப்பதால் பாவனையாளர்கள் அதிகமாக இணையங்களில் கொள்வனவு செய்துவருகின்றனர்.

குறிப்பாக, இணையங்களில் கொள்வனவு செய்யும்போது, விலை குறைவாக இருப்பதோடு, நேரவிரயம் தடுக்கப்படுகிறது. அத்தோடு, பொருட்கள் பெரும்பாலும் வீடுகளுக்கே நேரடியாக விநியோகமாவதும் மக்களுக்கு இலகுவானதாக இருக்கிறது.

நோர்வேயை பொறுத்தவரை இவ்வாறான பாவனைப்பொருட்கள், அனுமதிக்கப்பட்ட வரைமுறைக்குள் தரமானதாக இருக்கவேண்டுமென்பதும், ஐரோப்பிய ஒன்றிய வரைமுறைகளுக்கு அமைவாக (CE இலச்சினை) இருக்கவேண்டுமென்பதும் நோர்வேயின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டவிதிகளின் கீழ் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும், அதிகரித்துவரும் இணையவர்த்தகத்தில், நோர்வேயில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இணையவர்த்தக நிறுவனங்கள் தம்மை காட்டிக்கொண்டாலும், அவை விற்பனை செய்யும் இலத்திரனியல் சாதனங்கள் ஐரோப்பாவுக்கு வெளியில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், தரம் குறைவாக இருப்பதாகவும் நோர்வேயின் சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்த்துள்ளது.

இவ்வாறான தரக்குறைவான, அல்லது நோர்வே / ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கமைய தயாரிக்கப்படாத இலத்திரனியல் சாதனங்கள் ஆபத்தை உண்டாக்கக்கூடியவை என்பதோடு, இவற்றில் மின்னொழுக்கு ஏற்பட்டு பாரிய சேதங்கள் ஏற்படும்போது, அல்லது வேறுவிதமான சேதங்கள் ஏற்படும்போது, இப்பொருட்களுக்கான உத்தரவாத பாதுகாப்பு இல்லாமல் போவதோடு, அனைத்து பொறுப்புக்களும் பாவனையாளரையே சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தரமில்லாத பாவனைப்பொருட்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பொருட்களில் அரைவாசிக்கும் அதிகமான பொருட்கள் “CE இலச்சினை” பொறிக்கப்படாமல் அல்லது, அதி ஆபத்தான, சூழலுக்கு மாசை விளைவிக்கக்கூடிய மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நோர்வேயின் சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்த்துள்ளது.

மேலும், ஐரோப்பாவுக்கு வெளியில் தயாரிக்கப்படும் இலத்திரனியல் சாதனங்கள், ஐரோப்பாவில் பாவனையிலிருக்கும் மின்னழுத்த அளவை தங்குவதிலிருந்து வேறுபட்டிருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால், மின்னொழுக்கு ஏற்பட்டு தீவிபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

ஆகவே, இதுவிடயத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்தோடு இருக்கவேண்டும் என்பதோடு, இணையத்தில் தாங்கள் கொள்வனவு செய்யும் இலத்திரனியல் மற்றும் மின்சாதனங்களின் தரம் பற்றி மிகவும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பகிர்ந்துகொள்ள