தலிபான்களுக்கு ரஷ்யா பாராட்டு; உறவுகளை மேம்படுத்த விருப்பம்!

You are currently viewing தலிபான்களுக்கு ரஷ்யா பாராட்டு; உறவுகளை மேம்படுத்த விருப்பம்!

ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கானியின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இருந்தததை விட தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் தலைநகர் காபூல் பாதுகாப்பாக உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

காபூலைக் கைப்பற்றிய தலிபான்கள், 24 மணி நேரங்களில் முன்னைய ஆட்சியில் இருந்ததை விட பாதுகாப்பாக நகரமாக அதனை மாற்றியுள்ளனர் என ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஷிர்னோ பாராட்டியுள்ளார்.

தலிபான்களுடனான தனது உறவை வலுப்படுத்தும் ரஷ்யாவின் மறைமுகமான முயற்சியை அந்நாட்டின் தூதர் டிமிட்ரி ஷிர்னோவின் இந்தக் கருத்துக்கள் பிரதிபலிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருவரை இருந்துவந்த ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய வேகத்தைக் கண்டு ஏனைய பல நாடுகளைப் போலவே தாமும் ஆச்சரியப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.

மொஸ்கோவின் எக்கோ மாஸ்க்வி வானொலிக்கு கருத்து வெளியிட்ட தூதர் டிமிட்ரி ஷிர்னோ, தலிபான்களின் நடத்தை தன்னை கவர்ந்தது எனக் கூறினார். அவர்களின் அணுகுமுறை சிப்பானது எனவும் அவர் விபரித்தார்.

ஆப்கானிஸ்தான் இப்போது அமைதியாக உள்ளது. காபூல் நகரத்திலும் அமைதி நிலவுகிறது. அஷ்ரப் கானியின் ஆட்சியின் கீழ் இருந்ததை விட தற்போது நிலைமை சிறப்பாக உள்ளது எனவும் டிமிட்ரி ஷிர்னோ கூறினார்.

ஆரம்பத்தில் நிராயுதபாணிகளாகவே தலிபான்கள் தலைநகருக்குள் நுழைந்தனர். அமைதியாக ஆட்சியை ஒப்படைத்து வெளியேறுமாறு அவர்கள் அமெரிக்காவையும் அவர்களில் ஏவலாளர்களாக இருந்த அஷ்ரப் கானி அரசையும் கோரினார்கள்.

எனினும் ஊரடங்கை பிறப்பித்துவிட்டு அஷ்ரப் கானி நாட்டை விட்டுத் தப்பியோடிய பின்னரே தலிபான்களின் ஆயுதப் படைப் பிரிவுகள் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன எனவும் டிமிட்ரி ஷிர்னோ தெரிவித்தார்.

இப்போது காபூலில் உள்ள பெண்களுக்கான பாடசாலைகள் உட்பட அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தலிபான்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் மொஸ்கோ ஈடுபடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சிறப்புப் பிரதிநிதி ஜமீர் கபுலோவ் நேற்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments