புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நான்கு மாணவர்களும் தோணியில் தாமரை மலர்களைப் பறிக்கச் சென்ற வேளை, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐந்து மாணவர்கள் நேற்றையதினம் படகு ஒன்றில் பூக்கள் பறிப்பதற்காக சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கியதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் நீரில் மூழ்கிய மாணவர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் ஏனைய மாணவர்கள் வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த மூவர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குறித்த பிரதேசத்தை சேர்ந்த பாடசாலையொன்றின் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டாரநாயக்கபுர தேசியப் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயின்று வந்த சலிச கவிஷான், சேதன விஷ்மித, திலேன் மிஹிரங்க மற்றும் தேஷான் புத்திக ஆகிய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.






