தாயே தமிழே வல்லமை தாவென வணங்குகின்றோம்!

You are currently viewing தாயே தமிழே வல்லமை தாவென வணங்குகின்றோம்!

தமிழே உன்னை
காதலிக்கிறேன்
காலம் முழுவதும்
உன் புன்னகையில்
என் பூவிதழ்
திறக்கிறேன்!

நீ வந்து மயிலிறகால்
மனம் வருடுகிறாய்!

எனை மறந்து எங்கெங்கோ
இறக்கை கட்டி பறக்கிறேன்
மழைச்சாரலாய் இதயத்தில்
நுழைகிறாய்!

மெல்லிதழ் அவிழ்க்கும்
மலர் இதழ்களாய்
மௌனத்தை கலைந்து
உயிர் வழியே
பயணிக்கிறாய்!

பறவைகளின் ஒலியிசையில்
வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகு கட்டிய சிந்தனையில்
எண்ணங்கள் வான்பரப்பில்
இங்கிதமாய் பறக்கிறன!

வலிகள் ஊதிப்பெருத்த
வையகத்தில்
காயங்களின் ஆற்றுதலாய்
நியாயங்களை தேடும்
கால்களின் காலணியாய்
பாதம் தடவிப் போகின்றாய்!

காதலை மட்டும் உமிழ்ந்து பருகும்
காமக் கதைகள் மத்தியில்
வாழ்வின் உயிர்ப்பிற்காய்
சமூகக் கண்ணாடியாய்
அழுக்கு அகற்றும்
கிணற்று மீன்களாய்
தேன் தமிழால்
உலகப்பரப்பின் கடல்மடியை
கடக்கிறாய்!

உன் உயிர்ப்பிற்காய்
உயிர் அள்ளித்தந்த
வள்ளலார் வாழ்ந்த
மண்ணிற்கு
அணிகலன் சூடி
ஆரத்தழுவுகிறாய்!

உயிராய் மெய்யாய்
உயிர்மெய்யாய்
உலகத்தின் மூத்த மொழியாய்
சிலிர்த்து நிற்கும்
சிங்காரத்தமிழாய்
அழிக்கத்துடிக்கும்
ஊழிகளின் அபாயத்திலிருந்து
அடைக்கோழியாய்
மடைபோட்டு
விடுதலைக்காய்
புடம் போடுகிறாய்!

ஆனாலும்
உன் மொழிக்குரியவனே
ஆலயத்திலும்
மகவுக்கு பெயர் சூட்டுவதிலும்
அடுத்தவன் மொழியில்
சிறைபட்டுக்கிடக்கிறான்!

தாய் மொழிநாளில்
அந்நிய நோய் பிணி தீர
நெஞ்சார வாழ்த்துகின்றோம்!

தனிமனித
பிற மொழியடிமை மாற
தமிழ் மொழி தலை நிமிர
வழிதவறிப்போகாத
வல்லமை தாவென
வணங்குகின்றோம்!
தாயே தமிழே
நீயே எம் முதல்மொழியேன
விளிக்கின்றோம்!

✍தூயவன்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments