மன்னார் சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் மன்னார் சிறீலங்கா காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
மன்னார் சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (04) இரவு பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளமை குறித்து குறித்த வீட்டின் உரிமையாளர் வியாழக்கிழமை (5) மன்னார் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன் போது குறித்த வீட்டில் தாலிக்கொடி, சங்கிலி , காப்பு உள்ளடங்களாக 15 பவுன் தங்க நகைகளும்,4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளதாக மன்னார் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.






