திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்திற்குள் புகுந்த புத்தசாசன அமைச்சு!

You are currently viewing திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்திற்குள் புகுந்த புத்தசாசன அமைச்சு!

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு என கலாச்சார ரீதியாக எந்தவொரு தனி அடையாளமும் இருக்கக்கூடாது என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எண்ணமே யாழ். திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் நம்பிக்கைப்பொறுப்புச் சபைக்குள் புத்தசாசன அமைச்சு உள்வாங்கப்பட்டமைக்கு பிரதான காரணம் என அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்ட போது, அது யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்படும் என்ற உறுதிமொழியின் பிரகாரமே அமைக்கப்பட்டது. பின்னர் அதன் பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருப்பதாக மாநகர சபை தெரிவித்த நிலையில், இந்தியத் தூதரகம் தலையீடு செய்து சில காலங்களுக்கு அதனைப் பராமரித்து வந்தது.

கடந்த கால பாதுகாப்பு அமைச்சின் முயற்சி முறியடிப்பு

தொடர்ந்து பேசிய அவர், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்தக் கலாச்சார மண்டபத்தின் பராமரிப்புச் செலவுகளைப் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்று, அதனைத் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டுவரக் கோரியதாகக் குறிப்பிட்டார். எனினும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இந்தியத் தூதரகத்திற்கு விடுத்த அழுத்தத்தின் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டதாக அவர் நினைவு கூர்ந்தார்.

புத்தசாசன அமைச்சின் உள்ளீர்ப்பு குறித்து பாரிய சந்தேகம்

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தின் நம்பிக்கைப்பொறுப்புச் சபைக்குள் புத்தசாசன அமைச்சை உள்வாங்கியமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

“வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் கலாச்சார மற்றும் மத அடையாளங்களை அழிப்பதற்கும் திரிவுபடுத்துவதற்கும் பிரதான காரணியாக விளங்கும் புத்தசாசன அமைச்சை இந்தச் சபைக்குள் உள்வாங்கியமை திட்டமிட்ட தமிழின அழிப்பாகும். இந்த அமைச்சின் கீழ் வரும் தொல்பொருள் திணைக்களம், தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட முறையில் பௌத்த மத ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக, இராணுவத்தின் துணையுடன் தையிட்டியில் தனியார் காணிக்குள் பௌத்த விகாரையை அமைத்தது மட்டுமல்லாமல், இன்று வரை அதனை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இந்த அமைச்சே மேற்கொண்டு வருகிறது.”

“நாங்கள் பௌத்த சமயத்திற்கு எதிரானவர்கள் அல்ல”

தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கோ அல்லது பௌத்த சமயத்துக்கோ எதிரானவர்கள் அல்லர் என்பதைத் தெளிவுபடுத்திய அவர், திட்டமிட்ட சிங்கள மற்றும் பௌத்தமயமாக்கல்களை மட்டுமே எதிர்ப்பதாகக் கூறினார். சிங்கள மக்கள் வடக்கில் வசிக்கத் தகுதியற்றவர்கள் எனத் தாம் கூறவில்லை என்றும், தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாகப் பிடித்துக் குடியேறுவதையே எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தெற்கில் ஆட்சி மாறினாலும் கொள்கை மாறாது

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்பவர்களைத் தெற்கு ‘இனவாதிகள்’ என முத்திரை குத்துவதே வரலாறு எனக் குறிப்பிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெற்கில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றாலும் அவர்களின் பௌத்த சிங்களக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்பதைத் தமிழ் மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

ஜே.வி.பி.யாக (JVP) கடந்த காலத் தமிழின அழிப்பில் பங்கெடுத்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், கடந்த கால அரசாங்கங்களை விட மோசமான முறையில் செயற்பட்டு வருவதாக அவர் சாடினார்.

எனவே, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்தசாசன அமைச்சு உள்ளீர்க்கப்பட்டமை, தமிழ் மக்களுக்கெனத் தனியான கலாச்சார அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடே என்பதால், தமிழ் மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply