தைப்பொங்கல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு உறுதி எடுப்போம்!

You are currently viewing தைப்பொங்கல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு உறுதி எடுப்போம்!

மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித இயற்கை சமூகக் காரணங்களினால் இடம் பெயர்ந்து காடும் காடு சார்ந்த பகுதியாகிய முல்லை நிலத்திற்குச் சென்றது.

பின்னர் அங்கிருந்து வயலும் வயல் சூழ்ந்த பகுதியாகிய மருத நிலத்தை அடைந்தது.இறுதியாகிய கடலும் கடல் சார்ந்த இடமாகிய நெய்தல் நிலத்தை சேர்ந்தது. குறிஞ்சியும் முல்லையும் ,வெப்பமிகுதியினால் தன் நிலை பாலை எனவொரு வடிவம் பெற்றன. எனவே, தமிழர் நில இயல்புகளைக் கூறுமிடத்துப் பொதுவாக ஐவகை நிலங்கள் எனக் கூறுவதே பெரும்பாலும் வழக்கிலுள்ளது . ஒவ்வொரு நிலத்திலும் உள்ள மரங்கள் ,விலங்குகள் ,பறவைகள் முதலியவை வேறு வேறானவை . மலர்களும் ,நீர் கிடைக்கும் தன்மைகளும் கூட வேறுபட்டவை. ஒரு நிலத்தில் கிடைக்கும் உணவும் இன்னொரு நிலத்தில் கிடைக்கும் உணவும் வேறுபாடுடையவை. எனவே தொழில்களும் நிலத்திற்கு நிலம் வேறுபட்டன.பழங்காலத்தில் நிலப் பாகுபாடு இருந்தது உண்மைதான் . ஆனால் சாதிப் பாகுபாடு இருக்கவில்லை .

அந்ந அந்த நிலங்களிலே வாழ்ந்து மக்களுக்கு அளப்பரிய சேவை செய்து வழிகாட்டிய நிலத்தலைவர்களே பின் நாட்களில் நிலத் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர்.பண்டைய தமிழர்களிடையே எளிமையான இயற்கையோடு அமைந்த வாழ்வு முறையும் நன்றி உணர்வும் மரியாதை உணர்வும் வீரப் பாரம்பரியமும் இருந்தன.பழந்தமிழர் இயற்கைப் பொருள்களை வழிபட்டனர்.குல முன்னோர்களையும் போரிலே வீரச்சாவடைந்த வீரர்களையும் வழிபட்டனர் .

தொன்மக் காலத்தில் ஒரு பெண்ணை மணம் செய்து கொள்பவன் அவளை முழுமையாகப் பேண வேண்டிய பொறுப்பில் இருந்தான். ஆபத்தை எதிர்நோக்கும் நிலை அக்காலத்தில் மிகுதியாக இருந்தது. பயங்கர காட்டு மிருகங்களிடமிருந்து தனது மனைவியையும் பிள்ளைகளையும் காக்கவேண்டிய கடமைப்பாடு ஒரு ஆணுக்கு இருந்தது. உடல் வலுவும் மனத் துணிவும் இருந்தால்தான் தானும் தனது குடும்பமும் வாழலாம் என்ற சூழலில் உடல் வலிமையைச் சோதிப்பது பண்டைய திருமண முறைகளுள் ஒன்றாகும். முல்லை நிலத்தில் ,நிரை மேயப்பவனுக்கு ஆநிரை அடக்கல் இன்றியமையாத தேவையாகும் .திருமணம் கொள்ளும் பெண்டிரும் காளையை அடக்கும் இளையனையே விரும்பினர்.

காளையைக் கண்டு அஞ்சுபவன் எக்காலத்தும் ஆய்ச்சி ஒருத்தியைப் பெற முடியாது என்ற கருத்து வலிமையாகவே காட்டப்பட்டது. எனவே ஆய்ச்சியர் திருமணத்திற்கு ஏறுதழுவுதல் ஓர் இன்றியமையாத செயலாக கருதப்பட்டது. இன்று தைப்பொங்கல் நாளன்று மஞ்சு விரட்டு என்ற பெயரில் ஏறுதழுவுதல் நடைபெறுகின்றது.அதுவுமன்றி ,எப்பொழுதும் போர்ச் சூழலில் வாழ்ந்தமையினால் ,எதிரியிடம் இருந்து தாய் மண்ணைக் காப்பது முதற் கடமை என்று கருதப்பட்ட காலத்தில் ,போருக்கு அஞ்சாத வீரனே உயர்ந்தவனாகக் கருதப்பட்டான்.

கூதிர்காலத்திலே [ ஐப்பசி,கார்த்தி] தாங்கள் பூந்தட்டிலே இட்டு வைத்த பிச்சிமலர்கள் விரிதலைக் கண்டு, அந்திப் பொழுது வந்ததென அறிந்து அணிவிளக்கேற்றி நெல்லையும் மலரையும் தூவி,இல்லுறை தெய்வத்தை [ குல முன்னோர்களை] வணங்கினர். அது போலவே நள்ளிருள் நாறி என்ற மலர் மலர்தலால் நடுயாமம் வந்ததென அறிந்தனர். கன்றுகளை மேய்க்கும் இடைச்சிறுவர்கள் வேங்கைமரம் மலரும் அழகினைப் பார்த்து அம்மரத்தின் மேல் ஏறாமல் அடியில் நின்றபடி செய்த இன்ப ஆரவாரம் வானம் அளாவிய மலையின் குகைகளில் எதிர் ஒலித்ததாகப் பழைய சங்ககாலப் பாடலொன்று ( குறுந்தொகை 241)கூறுவது இயற்கை அழகில் ஒன்றிய தமிழரின் மனநிலைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாம்.திருமணமும் அந்த அந்த நிலத்திற்குச் சிறப்பாக உள்ள பெருமரங்கள் பூக்கும் முழுமதி நாட்களில் தான் நடைபெற்றன. முல்லை நில மக்களின் திருமணம் வேங்கை மலர் பூக்கும் முழுமதி நாளிலும் ,நெய்தல் நில மக்களின் திருமணம் புன்னை மரம் மலரும் முழுமதி நாளிலும் நடைபெற்றன.

தமிழர் விழாக்களும் இயற்கையோடு ஒன்றியவைகளாகத் தான் உள்ளன.நெல் பயிரிடுங்காலமாகிய ஆடி மாதத்தில் முதலாம் திகதி பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நான் சிறுவனாக இருந்த பொழுது ஆடிப்பிறப்பு பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.எங்களுக்கு அன்று பாடசாலை விடுமுறைநாள் .அந்த நாளுக்கு முதல் நாள் பாடசாலையிலே ஆடிப்பிறப்பை எப்படிக் கொண்டாட வேண்டும் எனத் தலைமை ஆசிரியர் பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் விளக்கவுரை வழங்குவார். எமது பாடநூலிலே “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” என்ற ஒரு பாட்டே இருந்தது. இன்று இவ்விழா அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை . எனது காலத்திலே வழக்கொழிந்த ஒரு பண்டைய விழாவாக இவ்வாடிப்பிறப்பு உள்ளது.அதுபோலவே காரத்திகை மாதம் கூதிர்கால ( ஐப்பசி,கார்த்திகை) முடிவாக நிற்கிறது. அடைமழையில் சூரிய ஒளி காணாமல் வாடி ஒடுங்கிக் கிடந்த மக்கள்,நன்றாக உலவித் தங்கள் வாட்டத்தை நீக்கிக் கொள்ளக் கதிரவன் ஒளியைக் காண விரும்பி மலை மீது விளக்கிட்டு மகிழ்வதைக் கார்த்திகை விளக்கு குறிக்கின்றது .இது பற்றிப் பல சங்கப்பாடல்கள் கூறுகின்றன. இது போன்று இயற்கையோடு இணைந்த ஒரு விழாவே தைப்பொங்கல் விழாவாகும். தமிழர் திருநாள். உழவர் பெருநாள் எனப் பெரும் மகிழ்வுடன் அழைக்கப்படும் தைப்பொங்கல் விழாவே தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர்களினால் சங்ககாலம் முதல் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டது.

இச் சூழ்நிலையில் “உழவர் பெருநாள் “ என்பதை விளக்குவது பொருத்தமானதாக இருக்கும் என எண்ணுகின்றேன். ஆதிச் சமுதாய அமைப்பாக உலகெங்கும் இனக் குழுக்கள் ( tribes) நிலவின. அனைத்து இனக் குழு மக்களினதும் வாழ்க்கையில் பழைய கற்காலத்தில் புராதன விவசாயம் கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களும், அதன் பின்பு காடுகள் எரித்துப் பயிர் செய்யும் ஏரால் உழும் முறையும் ஏற்பட்டது. முதல் கொழு மரத்தாலானது.அன்று எமது முன்னோர்களாகிய அனைத்து தமிழர்களும் உழவர்களே, அதனையொட்டி, இரும்பு அறிமுகமாகியதன் பின்பு மிகப் பெரிய விவசாயப் புரட்சியே உண்டாகியது.இரும்புக் கொழு பழக்கமானதன் பின்பு பெரிய அளவிளான காடுகள் அழிக்கப்பட்டு முன்பிலும் பல மடங்கு உணவு உற்பத்தி செய்யப்பட்டது. மேலதிக உணவு உற்பத்தி ( surplus production) விவசாயத்தைத் தொழிலாக கொள்ளாத பல மக்கள் சமூகங்களை உருவாக்கியது.

தனித்தன்மை வாய்ந்த கைவினைஞர்களான குயவர்,கல்தச்சர், தச்சர் போன்றவர்கள் உருவாகினர். இச்சந்தர்ப்பத்தில் தான் முதல் வேலைப் பிரிவினையே உருவாகியது.இவ்வேலைப் பிரிவுக்கு முன்பே தமிழர்களால் உழவர் பெருநாள் என அழைக்கப்பட்ட தைப்பொங்கல் விழா இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகின்றது.

நமது புத்தாண்டாகத் தைப்பொங்கல் விழாவோ கொண்டாடப்பட்டதென்பதற்கு “தை பிறந்தால் வழி பிறக்கும்”என இயன்றளவும் வழங்கிவரும் பழமொழியே சான்றாகும். ஆடி முதல் மார்கழி வரையில் நெல்வயலிலே வேலை செய்யும் காலம். உழவர்கள் மழையின் உதவியால் கழனியில் இரவும் பகலும் இடைவிடாமல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியிறுதியில் வீட்டுக்குக் கொண்டுவருவார்கள்.

அதனைச் சுற்றமும் நட்பும் சூழ, மனைவி மக்களுடன் தம் வீட்டில் நிறைந்த மகிழ்ச்சியுடன் இவ் விழாவை நடத்துகின்றனர். மழை வளந்தருவது ஞாயிறு , உழவர்களுக்கு பயிரிடப்பயன்படுவன மாடுகள். எனவே தமிழர் தனது பாரம்பரிய முறைப்படி ஞாயிறை ( சூரியனை) ப் பொங்கலன்றும், மாடுகளை மாட்டுப் பொங்கலன்றும் வழிபடுகின்றனர். தைப்பொங்கல் தான் தமிழரின் புத்தாண்டு என்பதற்கு அவ்விழா நடைபெறும் முறையே சான்றாகும் . அன்று யாவும் புதியனவாகவே இருக்கும்.

புத்தாடையணிந்து ,புதிய பானைகளில் புதிய நெல்லைக் குற்றியெடுத்த அரிசியைப் பொங்குவார்கள். புதிய பானைகளுக்குப் புதிய மஞ்சளைப் புதிய நூலிற்காப்பாக அணிவார்கள். புதிய கரும்பையும் புதிய வள்ளிக்கிழங்கையும் புதிய பூசனிக்காயையும் கோலமிட்டுச் செம்மண் தீட்டிய தம் இல்லத்தில் விளக்கேற்றிவைத்துக் கதிரவனை வழிபட்டுப் பொங்கலிடத் தொடங்குவர். புதிய கணக்குகளைத் தொடங்குவது அனைத்தும் தமிழ்ப்புத்தாண்டான தை முதல் தேதியே நடைபெற்றன. மாட்டுப் பொங்கலன்று மாடுகளை நன்றாகத் தேய்த்துக் குளிப்பட்டி ஓட்டிவந்து அழகுறப் புனைந்து மாலையில் எருதுகளை வண்டிகளிற் பூட்டி ஓட்டிக் கொண்டு ஊர்வலம் வருவார்கள். அன்று மாடுகளை வேலை வாங்கமாட்டார்கள்.

சித்திரை மாதம் முதலாம் திகதியைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது தமிழரின் இயல்பான இயற்கையோடு அமைந்த வாழ்விற்கோ, அறிவுக்கோ சற்றுக்கூடப் பொருத்தமாகப் படவில்லை .

தமிழ் ஆண்டுகள் எனச் சொல்லப்படும் அறுபது ஆண்டுகள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதுடன் அதன் பெயர் அனைத்தும் வடமொழியிலேயே உள்ளன. அதுவுமன்றி அவ்வறுபது ஆண்டுகள் உண்டான முறையும் பகுத்தறிவுக்கு ஒத்ததாக இல்லை. தமிழர் சமுதாய வாழ்வு ஆரிய மயமாக்கலினால் சீர்குலைக்கப்பட்ட காலத்தில் எமது புத்தாண்டும் இயல்புக்குப் பொருந்தாத வகையில் மாற்றப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளாக நாம் அந்நியப் பண்பாட்டுக்கு ,வாழ்வு முறைக்கு அடிமையாக இருந்தது போதும் தமிழர்கள் இனிமேல் அரசியல் விடுதலையுடன் , அந்நியப் பண்பாட்டிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.அதன் முதற்படியாகச் சித்திரைப் பொங்கலைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுதலை விடுத்து, எமது வழிவழி முறையிலான தைப்பொங்கல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு உறுதி எடுப்போமாக !

– வேணுகோபால் மாஸ்டர்

4 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments