நந்திக்கடல்!

நந்திக்கடல்!

நந்திக்கடல் தமிழ்த்தேசத்தின்
இறையாண்மையை
இதயபூமியில்
இறுக்கிப்பிடித்து நின்றது!

கந்தக நெருப்பாற்றில் சுவாசத்தின்
துடிப்பிழந்தபோதும்
சுயநிர்ணய உரிமை
உயிர் போகாது வென்றது!

சிந்திய குருதிக்கடலில்
சுயங்களைக் கடந்த
தூரதரிசனத்தின் எல்லைகள்
தெரிந்தது!

விடுதலையின் இலக்கை விட்டு
விலகாத
நெறிபிறழா சிந்தனையின்
சுடரொளி படர்ந்து விரிந்ததை
பார்க்க முடிந்தது!

ஆம்
நந்திக்கடல் கோட்பாடுகள்
தமிழினத்தின் தார்மீக உரிமையை
விலைபேச முடியாத
அலைகடலின் ஆர்ப்பரிப்பு!

போராடும் இனத்தின் இயங்கு சக்கரத்தின் அச்சாணி!
கரடுமுரடான பாதைகளை தகர்த்தெறியும் தடையகற்றி!

உலகமே திரண்டெழுந்து
உயிர்களை தின்றபோதும்
ஆகாயம் கடல் தரையென
இராட்சத தீப்பிழம்புகள்
முள்ளிவாய்காலில்
மூண்டெழுந்தபோதும்
தீரர்களின் பிடரிநிமிர்திய தீரம்
தீராத தாகத்தில் திமிறியெழுந்தது!

அரைகுறைத்தீர்வில்
சிறுகச்சிறுக அழிந்துபோவதை விட
நிரை நிரையாக உரிமைக்காக போராடி மடிவதே மேலென
போர்க்கொடி தூக்கியவர் புலிவீரர்!

யார்வந்து ராஐதந்திரம் பேசினாலும்
ஊர் கூடிச்சொல்வோம்
நந்திக்கடல் கோட்பாடே
எங்கள் சந்ததிக்கான தீர்வென்று!
சொந்தநிலமே எங்கள்
சுதந்திரத்திற்கான வாழ்வென்று!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள