ஒஸ்லோ:
2026 உலகக்கிண்ண கால்பந்து தொடரில், காலிறுதிப்போட்டி வரை முன்னேறி, இங்கிலாந்து அணியுடன் மோதிய நோர்வே அணி நாடு திரும்பம் நிலையில், நோர்வே மக்கள் அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை அளிக்கத் தயாராகிவருகின்றனர்.
உலகக்கிண்ணத்தின் இறுதி எட்டு அணிகளில் நோர்வே அணியும் இடம்பிடித்தமையானது, நோர்வே கால்பந்து வரலாற்றில் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக பிரேசிலை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறிய வெற்றி, நோர்வே ரசிகர்களின் நினைவில் நீண்ட காலம் நிற்கும் தருணமாக பார்க்கப்படுகிறது.
ஒஸ்லோ நகரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தெருக்களில் கூடிவந்து அணியை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.
நோர்வே அணி, காலிறுதியில் இங்கிலாந்து அணியை வெல்ல முடியவில்லை என்றாலும், 98 ஆம் ஆண்டுக்குப்பின், உலகக்கோப்பைக்கான போட்டிகளுக்கு தகுதி பெற்று, காலிறுதிவரை முன்னேறி, நாட்டின் பெருமையை உயர்த்தியவர்களாகவும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உருவாக்கியவர்களாகவும் பாராட்டப்படுகின்றனர்.
அணியின் ஒற்றுமை, போராட்ட மனப்பான்மை மற்றும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட “வைக்கிங் படகோட்டும்” கொண்டாட்டம் உலகளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்த உலகக்கிண்ணப் பயணம், நோர்வே கால்பந்தின் புதிய யுகத்தின் தொடக்கமாக பலரால் பார்க்கப்படுகிறது. அடுத்ததாக நடைபெறவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கிண்ண போட்டிகளில் நோர்வே இன்னும் வலுவான அணியாக உருவெடுக்கலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இதேநேரம், நோர்வே கடுமையாக போராடிய அணியாக மதிப்பளிக்கப்பட்டு, இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக “Reuters” குறிப்பிட்டுள்ளது.
சில ஊடகங்கள் போட்டியில் நடந்த நடுவர் மற்றும் VAR தீர்ப்புகள் குறித்த சர்ச்சைகளையும் விவாதித்தன. குறிப்பாக நோர்வே அணியின் நிராகரிக்கப்பட்ட “கோல்” தொடர்பான விவாதங்கள் பேசப்பட்டதாக “The Guardian” குறிப்பிடுகிறது






