நிறவெறிக்கு தப்பாத நோர்வே இளவரசி! நோர்வேயிலும் நிறவெறி இருப்பதாக கவலை!!

நிறவெறிக்கு தப்பாத நோர்வே இளவரசி! நோர்வேயிலும் நிறவெறி இருப்பதாக கவலை!!

இன / நிறவெறி நோர்வேயிலும் அவதானிக்கப்படுவதாக நோர்வேயின் அரசகுடும்பத்து முதல் வாரிசான இளவரசி “Märtha Louise” வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மறைந்த எழுத்தாளரானான “Ari Behn” அவர்களை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்திருந்த இளவரசி, பின்னர் 2017 ஆம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்திருந்தார். விவாகரத்தின் பின் இளவரசி, அமெரிக்காவை சேர்ந்த “ஆவிகளுடன் பேசக்கூடியவர்” என கருதப்படும் “Durek Verrett” என்பவருடன் இணைந்து வாழத்தொடங்கினார். இதன் பின்னரான மன உளைச்சல்களினால் இளவரசியின் முன்னாள் கணவரான “Ari Behn” 2019 ஆண்டு, டிசம்பர் 25 ஆம் நாள் தற்கொலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கறுப்பின பின்னணியை கொண்டவரான “Durek Verrett” உடனான இணைவு வாழ்க்கையில் இன / நிறவெறியை தானும் அவதானித்து வருவதாக இளவரசி தெரிவித்துள்ளார்.

வெள்ளையினத்தவர்களாக இருப்பவர்கள், கறுப்பினத்தவர்களை எவ்வாறெல்லாம் சமூகத்தில் புறக்கணித்து வருகிறார்கள் என்பது, நோர்வேயின் இளவரசி என்ற அந்தஸ்தையும் மீறி தன்னால் உணர முடிவதாக தெரிவித்திருக்கும் இளவரசி “Märtha Louise”, தனது நண்பர்களும், நெருங்கியவர்களும் தனது துணைவரான கறுப்பின பின்னணியை கொண்ட “Durek Verrett” அவர்களை எவ்வாறெல்லாம் தவிர்த்து வருகிறார்கள் என்பதை தன்னால் அவதானிக்கக்கூடியதாகவும், தனது நெருங்கிய நண்பர்கள் தனது துணைவருக்கு மரியாதைக்காகவேனும் கைலாகு கொடுப்பதை தவிர்த்துக்கொள்வதையும் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு வெள்ளையின, அரசகுடும்பத்து பெண்மணியாக, இன / நிறவெறி என்றால் என்ன என்பதை இதுவரை உணர்ந்திருக்கும் வாய்ப்பு தனக்கு வாய்த்திருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள இளவரசி, எனினும் நோர்வேயின் சமூக கட்டமைப்பில் இன / நிறவாதம் என்பது இழைந்தோடுவதை இப்போது தன்னால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரச குடும்பத்து வாரிசாக பிறந்ததால், சமூகக்கட்டைமைப்பு பற்றிய புரிதல் தனக்கு கிடைக்காமல் போயிருக்கலாமென தான் கருதுவதாக தெரிவித்துள்ள இளவரசி, ஒரு சாதாரண பிரஜையாக மாறுவதோடு, சமூக கட்டமைப்பை நன்றாக புரிந்துகொள்வதற்கு தனக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக கருதுவதாகவும், இன / நிற பாகுபாடுகள் சமூகத்தில் வெளிப்படுவதையும், இன / நிற பேதங்களால் உயிரிழப்புக்கள் ஏற்படுபவது போன்ற வெட்கத்துக்குரிய விடயங்களை தன நேரிடையாக காண்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது துணைவரான “Durek Verrett”, தனக்கு ஆபத்தானவராகவே இருப்பர் என பொருள்படக்கூடியவாறு ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள், “Durek Verrett” ஒரு கறுப்பினத்தவராக இருப்பதால் மட்டுமே என்பது தன்னால் உறுதியாக கூற முடியுமெனவும், அவரோடு தான் இணைந்து வாழ்வதால் தனக்கும் அவருக்கும் கொலை அச்சுறுத்தல்கூட விடுக்கப்பட்டுள்ளதாகவு தெரிவித்துள்ள இளவரசி “Märtha Louise”, வாழ்க்கைத்துணையாக அவரை தான் தேர்ந்தெடுத்தமையானது வெட்கக்கேடான செயலென பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை தான் அறிந்திருப்பதாகவும், எனினும், தங்கள் இருவருக்கும் இடையிலான வாழ்வில் சிக்கல்கள் ஏதும் இல்லை என்பதில் தாங்கள் இருவரும் தெளிவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு, நோர்வேயிலும் இன / நிறவாதம் புரையோடிப்போயுள்ளது கவலைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் அரச குடும்பத்தை பொறுத்தவரை, அரச குடும்பத்தில் பெரும்பாலானவர்கள் அரச பரம்பரையல்லாத, சாதாரணமானவர்களையே திருமணம் செய்துகொள்வது வழமையாக இருந்து வருகிறது.

குறிப்பாக, ராணியார் “Sonja”, முடிக்குரிய இளவரசரின் மனைவியான “Mette Marit”, இளவரசியின் முன்னாள் கணவரான “Ari Behn” மற்றும் இன்னாள் துணைவரான “Durek Verrett” போன்றவர்கள் அனைவருமே அரச குடும்ப பின்னணியை கொண்டிராதவர்கள் என்பதும், அரச குடும்பம் என்ற பேதமில்லாமல், சாதாரண குடிமக்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதால், நோர்வேயின் அரச குடும்பம் மக்களிடையே புகழ் பெற்று விளங்குவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments