நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிக்கல்!

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தொடர் சிக்கல்!

நோர்வேயின் கிழக்குப்பகுதியிலுள்ள “Gjerdrum / Ask” பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அப்பகுதியிலிருக்கும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் விடுதிகளில் ஒன்றான “Olavsgård” விடுதியில் தங்கியிருந்த ஒருவருக்கு “கொரோனா” தொற்று இருப்பது அவதானிக்கப்பட்டிருப்பதால், அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் “கொரோனா” பரிசோதனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு திரும்புவதற்கு சுமார் ஒருவருட காலம் வரை செல்லலாமென தெரிவிக்கப்படுகிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடம், ஆபத்து மிகுந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவ்விடத்தில் குடியிருப்புக்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை மற்றும் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டபோது கடைப்பிடித்திருக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பில் இப்போது சர்ச்சைகள் கிளம்பியிருப்பதால் இவை தொடர்பான விசாரணைகள் பல மாதங்களுக்கு இழுபடலாமெனவும், மேலும், குறித்த பகுதியின் உறுதித்தன்மை ஆராயப்படவேண்டி இருப்பதாலும் காலதாமதம் ஏற்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அனர்த்தம் ஏற்பட்டுள்ள இடத்துக்கு அருகாமையிலுள்ள இடங்களிலும் நில வெடிப்புக்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கான, ஒரு வருட காலத்துக்கான வீட்டு வாடகைகளுக்கான தொகையை ஈடுசெய்வதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காக பொருளாதாரத்தையும் வழங்குவதாகவும் காப்புறுதி நிறுவனங்களும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள