நிலச்சரிவு அனர்த்த இடத்துக்கு நேரில் சென்ற நோர்வே அரச குடும்பம்!

நிலச்சரிவு அனர்த்த இடத்துக்கு நேரில் சென்ற நோர்வே அரச குடும்பம்!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வருகை தந்த நோர்வே அரச குடும்பத்தினர், அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்து கொண்டனர்.

நோர்வே மன்னர் அதி மாட்சிமை தங்கிய “Harald”, அரசியார் “Sonja” மற்றும் முடிக்குரிய இளவரசர் “Håkon” ஆகியோர் இன்று மதியம் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்ததோடு, மீட்ப்புப்பணிகள் தொடர்பிலான நிலைமைகள் தொடர்பில் மீட்புக்குழுவினரோடு கலந்துரையாடியுள்ளதோடு, அவ்விடத்திலுள்ள தேவாலயத்துக்கு சென்று ஆற்றுப்படுத்தல் ஆராதனைகளில் கலந்து கொண்டுள்ளனர்.

பின்னதாக, அனர்த்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கும் நேரில் சென்று, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு அனர்த்த இடத்துக்கு நேரில் சென்ற நோர்வே அரச குடும்பம்! 1
இடமிருந்து வலமாக: முடிக்குரிய இளவரசர் “Håkon”, அதி மாட்சிமை தங்கிய மன்னர் “Harald” மற்றும் அரசியார் “Sonja” ஆகியோருக்கு மீட்ட்புப்பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டபோது…

அரச குடும்பங்களை கொண்டிருக்கும் ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது, நோர்வேயின் அரச குடும்பமானது, நோர்வே மக்களோடு நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளமை சிறப்பானதாகும். விசேடமான பாதுகாப்புக்கள் ஏதுமின்றி, மக்கள் மத்தியில், மக்களோடு மக்களாக சாதாரணமாக பழகக்கூடியவர்களாகவும் நோர்வே அரசகுடும்பம் இருந்துவருவதால், இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது அரச குடும்பத்தின் ஈடுபாடு வழமையானது.

குறிப்பாக, இக்கட்டான சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் தார்மீக ஆதரவோடு ஒத்துழைப்பாக இருப்பதும், அனுதாப உணர்வுகளை வெளிக்காட்டுவதும் நோர்வே சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி மேம்பாடு:

15:25 – 03.01.2021

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நோர்வே மன்னரும், அரசியாரும் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, மீட்புப்பணியாளர்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய மன்னரும், அரசியாரும் மனமுடைந்த நிலையில், மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டிருந்தனர்.

தனது மோசமான உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், ஊன்றுகோலுடன் வந்திருந்த மன்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லையென சொல்லி தடுமாறியதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள