நிலச்சரிவு அபாயத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதி!

You are currently viewing நிலச்சரிவு அபாயத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதி!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் போது, மயிரிழையில் உயிர்தப்பிய தம்பதியினர் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

61 வயது நிரம்பிய “Ole-Kristian Viken” என்பவரும், அவரது மனைவியும் தமது மகிழூந்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற பாதையில் வெடிப்பு ஏற்பட்டதோடு, பாதையும் நிலமட்டத்திலிருந்து கீழிறங்கியபோது சடுதியாக மகிழூந்தை நிறுத்தியதால் அவர்கள் இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்டதும், காவல்துறை அவர்களை எச்சரிக்கை செய்ததாகவும், தமது அயல்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிந்து கொண்ட நிலையில், நிலச்சரிவின் காரணமாக தமது வீட்டில் மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் ஏற்கெனவே தடைப்பட்டிருந்ததால் தமது மலைவாசத்தலத்துக்கு செல்வதற்காக தமது மகிழூந்தில், தாம் வழமையாக செல்லும் பாதையினூடாக சென்றதாகவும் தெரிவித்துள்ள இத்தம்பதியினர், பாதையால் மகிழூந்தை செலுத்தி சென்றபோது பாதை எப்போதும்போல சாதாரணமாகவே இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

மேட்டுப்பகுதியொன்றில் அவர்களது மகிழூந்து ஏறியபோது, அவ்விடத்திலிருந்த வீடொன்று அவ்விடத்தில் இல்லாததை தாம் அவதானித்ததாகவும், தெருவிளக்குகளின் ஒளியிலும், அங்கு கொட்டியிருந்த பனிப்பொழிவினாலும் மிக வெளிச்சமாக இருந்த பாதை திடீரென காரிருளாக இருந்ததையும் அவதானித்தாலும், மேற்கொண்டு மகிழூந்தை செலுத்தி சென்றபோது பாதை உடைந்து நிலத்தினுள் அமிழ்ந்துபோனதை உணர்ந்துகொண்டு, உடனடியாக வேகத்தடுப்பை இயக்கியதால், மகிழூந்து பாதை உடைவின் விளிம்பில் நின்றதாகவும், மகிழூந்தின் முன் இரு சக்கரங்களும், உடைந்த பாதையின் விளிம்பில், பள்ளமான பகுதியில் தொங்கிக்கொண்டிருந்ததாகவும் அத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மயிரிழையில் உயிர்தப்பிய அவர்கள் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையெனவும் தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள