நிலச்சரிவு மீட்ப்புப்பணிகள் இடைநிறுத்தம்! காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் வெளியானது!!

You are currently viewing நிலச்சரிவு மீட்ப்புப்பணிகள் இடைநிறுத்தம்! காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் வெளியானது!!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னான தொடர் மீட்ப்புப்பணிகள் இரவு பகலாக தொடர்ந்துவந்த நிலையில், மீட்புப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சற்றுமுன்னர் காவல்துறை அறிவித்துள்ளது.

பனிப்பொழிவு ஆரம்பித்திருப்பதாலும், இருள்சூழ்ந்த நிலை காணப்படுவதாலும், மிகவும் வழுக்கும் தன்மை கொண்ட சதுப்புநிலத்தில் மீட்ப்புப்பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கலாமென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், நாளை காலையில் மீண்டும் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கவலை தெரிவித்திருக்கும் அப்பிரதேச நகரபிதா, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மிகுதி 9 போரையும் உயிரோடு மீட்கமுடியுமென்ற நம்பிக்கை மீட்புப்பணியாளர்களிடம் இருந்தாலும், காணாமல் போனவர்களுடைய குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்களிடையே நம்பிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளுக்கிடையில் யாரவது சிக்கியிருக்கலாமென்ற சந்தேகத்தில் இடிபாடுகளிடையே சோதனைக்காக அனுப்பப்பட்ட மோப்ப நாய்களாலும், மீட்புப்பணியாளர்களாலும் இதுவரை யாரையும் உயிரோடு கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காணாமல் போனவர்களில் சிலருடைய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நிலச்சரிவு மீட்ப்புப்பணிகள் இடைநிறுத்தம்! காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் வெளியானது!! 1
காணாமல் போனவர்கள்: இடமிருந்து வலமாக, “Marius Brustad (29)”, “Lisbeth Neraas (54)”, “Bjørn – Ivar Jansen (40)”, கர்ப்பிணியான “Charlot Grymyr Jansen (31)”, குழந்தை “Alma (02)”, “Irene Ruud Gundersen (69)”, “Rasa lasinskiene (49)”
பகிர்ந்துகொள்ள