நோர்வேயின் புதிய தொழிற்சாலைகள்! மின்கட்டண அதிகரிப்பை எதிர்நோக்கும் மக்கள்!!

நோர்வேயின் புதிய தொழிற்சாலைகள்! மின்கட்டண அதிகரிப்பை எதிர்நோக்கும் மக்கள்!!

நோர்வேயில் புதிதாக ஆரம்பிக்கப்படவிருக்கும் தொழிற்சாலைகள் காரணமாக, சாதாரண பொதுமக்கள் மின்கட்டண உயர்வை சந்திக்க வேண்டி வருமென எதிர்வு கூறப்படுகிறது.

சூழல் மாசடைதல், மற்றும் புவி வெப்பமாதல் உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளிப்பதற்காக, “பெற்றோல் / டீசல்” எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பாவனையை கணிசமாக குறைத்து, மின்சக்தியில் இயங்கும் வாகனகளின் பாவனையை ஊக்குவிக்கும் நடவடடிக்கைகள் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, நோர்வேயில், தலைநகர் “ஒஸ்லோ” உள்ளிட்ட நோர்வேயின் பெருநகரங்களில் இதுவிடயமாக மிகக்கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படும் அதேவேளையில், மின்வாகனங்களின் பாவனை அதிகரித்தும் வருகிறது. எனினும், மின்வாகனங்களுக்கான மின்கலங்களுக்கான கோரல்களும், தேவையும் அதீதமாக இருப்பதால், இம்மின்கலங்களை உற்பத்தி செய்வதில் அதிக நாட்டம் காட்டப்படுகிறது.

மின்வாகனங்களுக்கான மின்கலங்களை உற்பத்தி செய்யும் மூன்று புதிய தொழிற்சாலைகள் நோர்வேயில் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நோர்வேயின் வடமாகாணத்தில் அமைந்திருக்கும் “Mo i Rana” என்னுமிடத்தில் அமையும் முதல் தொழிற்சாலை, அடுத்த ஆண்டளவில் தனது உற்பத்திகளை மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு வழங்கக்கூடியதாக இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.

புதிய நவீனமான தொழிநுட்ப முறைமைகளை கையாண்டும், “மீள்சுழச்சி” முறைமைக்கு உட்படுத்தக்கூடியதுமான மின் தொழிநுட்பத்தை கையாண்டும் தயாரிக்கப்படக்கூடிய இப்புதிய தொழிற்சாலைகளின் மின்வாகனங்களுக்கான மின்கலங்கள், இப்போது ஆபிரிக்க நாடுகளில் தயாராகும் மின்கல தயாரிப்பின்போது வெளிவரும் மாசுக்கட்டுப்பாடுகளை விடவும் மிகக்குறைவான மாசுக்கட்டுப்பாடுகளோடு, அல்லது எதுவிதமான மாசுக்களும் கொடுக்காத “பசுமை மின்கலங்கள்” என அழைக்கப்படக்கூடிய முறையில் தயாராகக்கூடியவை என்பது கவனிக்கத்தக்கது.

பெரும்பாலும் தொழில்முனை நாடு என்ற வரையறைக்குள் அடங்காத நோர்வேயில் அமைக்கப்படவிருக்கும் குறித்த மூன்று மின்கல உற்பத்திச்சாலைகள், நோர்வேயின் நவீன தொழிற்துறை புரட்சி என அடையாளப்படுத்தப்படுமெனவும், அதேவேளையில் ஆயிரக்கணக்கானவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கக்கூடியதாக அமையுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும், இப்புதிய தொழிற்சாலைகள் இயங்கத்தொடங்கும்போது, சாதாரண பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சாதகபாதகங்களும் இப்போது விவாதிக்கப்படும் நிலையில், இத்தொழிற்சாலைகள் தமது இயக்கத்துக்காக அதீதமான மின்பாவனையில் தங்கியிருக்கின்றன என வெளிவரும் செய்திகள் சலசலப்பை கிளம்பியுள்ளன.

காணொளி:

நன்றி: NrK தேசியத்தொலைக்காட்சி, நோர்வே!

பொதுவாக நீர்மின்னியல் உற்பத்தியை முன்னிலைப்படுத்தும் நோர்வே, தனது மின்னுற்பத்தியில் கிடைக்கக்கூடிய மின்சக்தியின் கணிசமான பகுதியை சுவீடன், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதோடு, ஒரு பகுதி மின்சக்தியை சேமித்தும் வைக்கிறது. என்றாலும், நீர்மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும்போது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மின்சக்தியில் விலைமாற்றமோ அல்லது அளவில் மாற்றமோ செய்வதை கடைப்பிடிக்காத போக்கும், மாறாக உள்ளூர் நோர்வே மக்களின் மின்பாவனைக்கான கட்டணங்களை உயர்த்துவதும் பல்லாண்டுகளாக மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்திவரும் பிரச்சனையாக இருக்கிறது.

இந்நிலையில், புதிதாக அமையவிருக்கும் மின்கல உற்பத்திச்சாலைகள் அதீதமான மின்தேவையை எதிர் நோக்கியிருப்பதால், இத்தொழிற்சாலைகள் தடையில்லாமல் இயங்குவதற்கு தேவையான மின்சக்தியை தடையில்லாமல், தொடர்ச்சியாக வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்நிலையில், அதீதமான மின்சக்தி தேவைக்கான கோரல் முன்வைக்கப்படும்போது, சாதாரண மக்களின் மின்பாவனை விலைகளில் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் எதிர்வு கூறப்படுகிறது.

வருடாந்தம் 1.2 இலிருந்து 1.3 TWh அளவிலான மிசக்தியை இத்தொழிற்சாலைகள் பவிக்குமென அளவிடப்பட்டிருக்கும் நிலையில், நோர்வேயின் நீர்மின் உற்பத்தியின் மேலதிக சேமிப்பு பாவனைக்கு எடுக்கப்படக்கூடிய நிலை தோன்றுமெனவும், இதன் காரணமாகவும், இயல்பாகவே எழக்கூடிய அதிக மின்தேவைக்கான கோரல் காரணமாகவும் மின்கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்நிலை தோன்றுமானால், அண்ணளவாக ஆண்டொன்றுக்கு 16.000KWh அளவு மின்சக்தியை பாவிக்கும் சாதாரண குடும்பமொன்று, வருடாந்தம் சுமார் 1.600 நோர்வே குறோணர்களை மேலதிகமாக செலுத்தவேண்டியும் வரலாமெனவும் கணக்கிடப்படுகின்றது.

நோர்வேயை பொறுத்தவரை, சூரிய ஒளியிலிருந்து மின்சக்தியை பெறும் வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதும், காற்றாலைகளின் மூலமான மின் உற்பத்திக்கான பாரிய காற்றாலைகளை அமைப்பதில் மக்களிடையே இருக்கும் பாரிய எதிர்ப்புக்களாலும், நீர்மின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும்போது, விலையேற்றம் தவிர்க்கமுடியாததாகிவிடும் என்பதும் யதார்த்த சூழ்நிலைகளாக இருக்கின்றன.

நோர்வேயின் வடமாகாணத்தின் “Mo i Rana” என்னுமிடத்தில் அமையும் முதல் தொழிற்சாலையை இயக்கவிருக்கும் “Freyr” நிறுவனத்தின் மின்தேவையானது, நோர்வேயின் வடமாகாணத்தின் மின்சேமிப்பின் 40 சதவிகிதமான மின்சக்தியை உறிஞ்சக்கூடியது என கணக்கிடும் ஆய்வாளர்கள், இதன்காரணமாக நோர்வேயின் வடபகுதிக்கான பொதுமக்களின் மின்கட்டணங்களில் உயர்வு ஏற்படுமெனவும் எச்சரிக்கிறார்கள்.

நோர்வேயின் புதிய தொழிற்சாலைகள்! மின்கட்டண அதிகரிப்பை எதிர்நோக்கும் மக்கள்!! 1

பொதுவாக, நோர்வேயில் இருக்கும் உற்பத்திச்சாலைகளுக்கான மின்கட்டணங்கள், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த “Freyr” நிறுவனம் அமையவிருக்கும் தொழில் மையப்பகுதியில் ஏற்கெனவே இருக்கக்கூடிய தொழிற்சாலைகளின் அபரிமிதமான மின்பாவனையோடு, இப்புதிய தொழிற்சாலையின் மின்பாவனையும் இணைந்து கொள்ளும் நிலையில் மின்தேவையின் அதிகரிப்பினால், விலையுயர்வும் அதிகரிக்குமென்ற பொதுவான கருத்து முன்வைக்கப்படும் அதேவேளையில், நோர்வே உற்பத்தி செய்யும் மின்சக்தியின் அளவைவிட, பாவனைக்காக மின்சக்தியின் அளவு அதிகமாக இருக்குமெனவும் எச்சரிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள