நோர்வேயில் இரகசிய சவூதி முகவர்கள்! சுதாகரித்த நோர்வே அரசு!!

நோர்வேயில் இரகசிய சவூதி முகவர்கள்! சுதாகரித்த நோர்வே அரசு!!
The Kingdom Tower is seen in central Riyadh - Saudia Arabia, December 14, 2003. REUTERS/Peter Macdiarmid

சவூதி அரேபியாவின் இளவரசர் “Mohammed bin Salman” இன் அரசால் நோர்வேக்குள் அனுப்பப்பட்ட, சந்தேகத்துக்கிடமான சவூதி முகவர்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்களை, நோர்வே ஊடகமான “Dagbladet” நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சவூதி அரேபியாவின் இளவரசர் “Mohammed bin Salman” இன் அரசால் நோர்வேயின் வெளியுறவுத்துறைக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டதாகவும், அதில், சவூதி அரேபிய அரசின் சார்பில் 10 பேர் உத்தியோகபூர்வ விஜயமொன்றுக்காக நோர்வேக்கு அனுப்பப்படவிருப்பதாகவும், குறித்த இந்த 10 பேரையும் ராஜதந்திரிகளாக அங்கீகரித்து, ராஜதந்திரிகளுக்கான அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்கும்படியும் வேண்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயிலுள்ள சவூதி தூதரகத்தில் பாதுகாப்புக்கடமைகளில் குறித்த 10 பேரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என சவூதி தரப்பிலிருந்து நோர்வே வெளியுறவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அத்தனை பேருக்கும் ராஜதந்திரிகளுக்கான உரிமைகளை வழங்கும்படி சவூதி அரசு கேட்டுக்கொண்டமை சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தது.

நோர்வேயிலுள்ள சவூதி அரேபிய தூதரகம்

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களோடு, நோர்வேயிலுள்ள சவூதி தூதரகத்தில் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடக்கூடிய மேற்படி 10 பேருக்கும், ராஜதந்திரிகளுக்கான உரிமைகள் வழங்கப்படுமிடத்து, அவர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும் என்பதும் கூர்ந்து அவதானிக்கத்தக்கது.

மேற்படி முன்னுக்குப்பின் முரணான விடயங்கள் குறித்து விழித்துக்கொண்ட நோர்வே வெளியுறவுத்துறை, நோர்வே காவல்துறையின் பாதுகாப்பு ஆலோசனைப்பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து, இரகசியமான விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையின் பாதுகாப்பு ஆலோசனைப்பிரிவு, சவூதி அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும், நோர்வேயில் வாழ்ந்து வருபவருமான, பலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட ஊடகவியலாளர் “Iyad el-Baghdadi” அவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவிடயமாக நோர்வேயிலுள்ள சவூதி தூதரகத்துடன் தொடர்புகொண்ட நோர்வே ஊடகமான “Dagbladet” நாளிதழ், மேற்படி விடயம் பற்றி வினவியபோது, சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையொன்றை சவூதி தூதரகம் பதிலாக மேற்படி நாளிதழுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவ்வறிக்கையில், சவூதி அரசுமீது அவதூறுகளை சுமத்துவதற்காக போலியான தகவல்களின் அடிப்படையில் அனைத்து குற்றச்சாட்டுக்களும் புனையப்படுவதாக குறிப்பிடப்படுவதாகவும் மேற்படி நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.

நோர்வே வெளியுறவுத்துறை, மேற்படி 10 சவூதியர்கள் தொடர்பில் சந்தேகப்படுவதற்கு பல்வேறு காரணிகள் இருந்ததாக குறிப்பிடும் “Dagbladet” நாளிதழ், பின்வரும் விடயங்கள் இவ்விடயத்தில் பிரதான சந்தேகப்புள்ளிகளாக இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது.

  1. சவூதி தரப்பில் குறிப்பிடப்பட்ட, தூதரக பாதுகாப்பு பணியாளர்களின் தொகை அனுமதிக்கப்பட்டதிலும் பார்க்க அதிகமாக இருந்தது. வருடாந்தம் நோர்வேக்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளின் விபரங்களை பட்டியலிடும் நோர்வே வெளியுறவுத்துறை, 2018 ஆம் ஆண்டின் இப்பட்டியலில், சவூதியின் சார்பில் மிக அதிகமானவர்கள் இருந்ததை நோர்வே வெளியுறவுத்துறை அவதானித்திருந்தது.
  2. ஏற்கெனவே நோர்வேயிலுள்ள சவூதி தூதரகத்தின் அதிகாரிகள், ராஜதந்திரிகள் என்போர், நோர்வேயால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருந்த நிலையிலும், மேற்குறிப்பிட்ட 10 பாதுகாவலர்களுக்கும் ராஜதந்திர தகைமைகளை வழங்குமாறு சவூதி அரசு கேட்டுக்கொண்டிருந்தமை மேலும் சந்தேகத்தை வலுவாக்கியிருந்தது. தூதரகங்கள் பாதுகாவலர்கள் என்று அடையாளப்படுத்தப்படுவோர்க்கு ராஜதந்திரிகளுக்கான தகைமை வழங்கப்படுவது வழமையல்ல. தவிரவும், ராஜதந்திர தகைமை பெறுபவர்களுக்கு விசேடமான “D” வகை அனுமதி வழங்கப்படுவதால், ராஜதந்திர விதிமுறைகளின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தகைமைகள் காரணமாக, ராஜதந்திர தகைமையுள்ளவர்கள் தண்டனைக்குரிய குற்றச்செயலேதும் புரிந்தாலும், அவர்களை அந்தந்த நாடுகளின் காவல்துறை கைதுசெய்ய முடியாது என்பது பிரதானமானது.
  3. நோர்வேயிலுள்ள சவூதி தூதரகத்தின் பாதுகாப்பு மேம்பாடுகளின் நிலைமை, புதிதாக 10 பாதுகாவல் அதிகாரிகளின் தேவையை பிரதிபலிப்பதாக இல்லை என நோர்வே வெளியுறவுத்துறை கருதியது.
  4. துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்ட, சவூதியை பூர்வீகமாக கொண்டிருந்தவரும், சவூதியை அரசின் செயற்படுகளை மிகக்கடுமையாக விமர்சித்து வந்தவருமான சவூதிய ஊடகவியலாளர் “Jamal Khashoggi”, படுகொலையோடு, துருக்கியின் சவூதி தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதை, பல மறுப்புக்களுக்கு பின்னர் இப்போது சவூதிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மேற்குறிப்பிட்ட 10 சவூதியர்களில் ஒருவருக்கு 2018 நடுப்பகுதியில் நோர்வேயில் ராஜதந்திர தகைமைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், தற்போதுவரை அந்நபர், சவூதிய தூதரகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக உள்ளதாகவும் தெரிவிக்கும் “Dagbladet” நாளிதழ், எனினும், பாதுகாப்பு அதிகாரிகளாக பதிவு செய்யப்படுபவர்களுக்கு ராஜதந்திர தகமை வழங்கப்படுவது சட்டமுரணானதா எனவும் கேள்வியெழுப்பப்படுவதாக சொல்கிறது.

சவூதிய அரசின் நடவடிக்கைகளை மிகக்கடுமையாக விமர்சிக்கும், நோர்வேயில் வசிக்கும் பாலஸ்தீனிய ஊடகவியலாளரான “Iyad el-Baghdadi” இற்கும், துருக்கியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் “Jamal Khashoggi” இற்கு நேர்ந்த அபாயம் நேரலாமென கணித்த நோர்வே காவல்துறையின் பாதுகாப்பு ஆலோசனைபிரிவு, அவரை எச்சரித்துள்ளதையடுத்து, மேற்பட்டு நாளிதழ் அவரை நேரில் சந்தித்துள்ளதாக நாளிதழ் குறிப்பிடுகின்றது.

43 வயதாகும் மேற்படி பாலஸ்தீனிய ஊடகவியலாளரின் பாதுகாப்புக்கு ஒஸ்லோ காவல்துறை பொறுப்பு வகிக்கிறது எனவும், காவல்துறையின் அறிவுறுத்தல்களின்படி, தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிவருவதாக குறிப்பிடும் குறித்த பாலஸ்தீனிய ஊடகவியலாளர், துருக்கிய சவூதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சவூதிய எதிர்ப்பாளரான ஊடகவியலாளர் “Jamal Khashoggi” தனக்கு நெருக்கமான நண்பரென்றும், “Jamal Khashoggi” 2018 ஆம் ஆண்டில் ஒஸ்லோ வந்தபோது அவரை தான் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டிலிருந்து தனக்கும், படுகொலை செய்யப்பட்ட சவூதிய ஊடகவியலாளருக்கும் தொடர்புகள் இருந்ததாகவும், இருவரும் இணைந்து பல வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதாகவும் இருவருக்குமிடையில் ஒத்துக்கொள்ளப்பட்டதாகவும், தாங்கள் இருவரும் ஒஸ்லோவின் பிரபல விடுதியில் சந்தித்துக்கொண்டபோது, தமக்கிடையிலான உரையாடல்களை சவூதிய தூதரகத்தின் உளவாளிகள் அவதானித்திருக்கலாமெனவும் தான் உறுதியாக கூற முடியுமெனவும் இவர் தெரிவித்துள்ளார்.

துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் “Jamal Khashoggi”

அமெரிக்க பெரும் செல்வந்தரும், “Amazon” நிறுவனரும், துருக்கியில் சவூதிய தூதரகத்தில் கொல்லப்பட்ட சவூதிய ஊடகவியலாளர் “Jamal Khashoggi” செய்தியாளராக பணியாற்றிய “Washington Post” நாளிதழின் உரிமையாளருமான “Jeff Bezos” இன் கைத்தொலைபேசி ஊடறுக்கப்பட்ட விடயத்தில், சவூதிய இளவரசரும், தற்போதைய அரசத்தலைவருமான “Mohammed bin Salman” இன் ஈடுபாடுகள் தொடர்பிலான விபரங்களை வெளிக்கொணரும் முயற்சியில் பிரதான பங்காற்றிவரும் குறித்த பாலஸ்தீனிய ஊடகவியலாளருக்கு, நோர்வேயில் ஆபத்துக்கள் ஏற்படலாமென அமெரிக்க “CIA” அமைப்பு, நோர்வேயின் காவல்துறை பாதுகாப்பு ஆலோசனைப்பிரிவுக்கு தகவல் வழங்கியிருந்ததாகவும் தன அறிந்துள்ளதாக தெரிவிக்கும் பாலஸ்தீனிய ஊடகவியலாளர், 2019 ஆம் ஆண்டில் ஒருமுறை தனது கைத்தொலைபேசி ஊடறுக்கப்பட்டதை நினைவுகூருவதோடு, தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் தனது பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது எனவும் அஞ்சுவதாகவும் நாளிதழ் தெரிவிக்கிறது.

பாலஸ்தீனிய ஊடகவியலாளரின் பணிகள் தொடர்பிலான விடயங்களை உண்மையானவையென அங்கீகரித்திருக்கும், “சட்டவிரோதமாக நடத்தப்படும் படுகொலைகள்” தொடர்பில் அறிக்கையிடும், ஐக்கியநாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரும், மனிதவுரிமையாளருமான “Agnes Callamard” என்ற அம்மையாரே, அமெரிக்க செல்வந்தரான “Jeff Bezos” இன் கைத்தொலைபேசிக்கு, சவூதிய இளவரசரின் தனிப்பட்ட கைத்தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட குறுந்தகவல் மூலமே “Jeff Bezos” இன் கைத்தொலைபேசி ஊடறுக்கப்பட்டதென இவ்வருட ஆரம்பத்தில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

அமெரிக்க செல்வந்தரும், “Amazon” நிறுவனரும், “Washington Post” ஊடகத்தின் உரிமையாளருமான “Jeff Bezos”

சர்ச்சைக்குரிய இவ்விடயம் தொடர்பில் நோர்வேயின் “Dagbladet” நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தவறுகளேதும் இல்லையென, நோர்வே வெளியுறவுத்துறையம் நோர்வே காவல்துறையின் பாதுகாப்பு ஆலோசனைப்பிரிவும் தெரிவித்துள்ளதும், இதுவிடயம் தொடர்பாக பேசுவதற்கான அழைப்பை சவூதியின் வெளியுறவுத்துறைக்கு நோர்வேயின் நாளிதழ் விடுத்திருந்தாலும் சவூதிய அரசு பதிலேதும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்:

https://www.dagbladet.no/nyheter/sendte-ti-mystiske-menn-til-norge/73149739

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments