நோர்வேயில் தொடரும் நிலச்சரிவு! மேலும் 5 வீடுகள் சரிவு!!

You are currently viewing நோர்வேயில் தொடரும் நிலச்சரிவு! மேலும் 5 வீடுகள் சரிவு!!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்ந்து வருவதாகவும், மேலும் பல வீடுகளை பிளவடைந்த நிலத்துக்குள் காவு கொல்லப்படலாமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலையில் மேலும் 5 வீடுகளை நிலம் காவு கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 வரை உயர்ந்துள்ளதாகவும், ஒரு குழந்தை உட்பட 10 பேர் பற்றிய விபரம் இன்னமும் தெரியவில்லையெனவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடத்தில் சேதமடைந்த வீடுகளில் இடிபாடுகளுக்கிடையில் மக்கள் சிக்கியிருக்கலாமென்ற சந்தேகத்தில் தேடுதல்களை நடத்திய மீட்புக்குழுவினரால் யாரையும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கும் காவல்துறை, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் “மனித வெப்பத்தை கண்டறியும் கருவிகள்” கொண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நடந்த அனர்த்தம் தொடர்பில் கவலை தெரிவித்திருக்கும் நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையார், இந்நிலச்சரிவு ஒரு பெரும் பேரனார்த்தம் என கூறியுள்ளார். நோர்வே மன்னரான மாட்சிமை தங்கிய “Harald” அவர்களும் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, அனர்த்த பகுதியில் மீட்ப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அணிகளுக்கு உதவிகரமாக இருக்கும்பொருட்டு சுவீடனிலிருந்து நிபுணர்கள் குழு வந்திறங்கியுள்ளதோடு, டென்மார்க்கும் தேவையான துறைசார் உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, முழு இரவும் தேடுதல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவிக்கும் காவல்துறை, நில மட்டத்திலிருந்து பல மீட்டர்கள் ஆழத்துக்கு கீழிறங்கியிருக்கும் நிலப்பரப்புக்குள் மீட்ப்புப்பணி வீரர்களோடு மோப்ப நாய்களையும் கீழிறக்குவதற்கான பணிகள் நடைபெறுவதாக அறிவித்துள்ளது.

இவ்விடத்தில் வீடுகள் அமைப்பதில் பணியாற்றிய “Odd Sæther” என்பவர் தெரிவிக்கையில், இவ்விடத்தில் வீடுகளை அமைக்கும்போது, நிலச்சரிவு தொடர்பாக ஆராய்ந்து சொல்லக்கூடிய புவியியல் ஆய்வாளர்களின் ஆலோசனைகளை பெற்றே வீடுகள் அமைக்கப்பட்டதாகவும், அனர்த்தம் நடந்திருப்பது தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் தொடரும் நிலச்சரிவு! மேலும் 5 வீடுகள் சரிவு!! 1
வீதியின் நடுவில் ஏற்பட்ட விரிசல்…

பல்லாண்டு காலங்களுக்கு முன்பாக கடல் பகுதியாக இருந்த, அனர்த்தம் நிகழ்ந்த பகுதி, காலப்போக்கில் நிரவப்பட்டு, சதுப்பு நிலமாகவும், களிமண் பிரதேசமாகவும் இருந்த நிலையில், அவ்விடத்தில் குடிமனைகளை அமைப்பதற்க்கேற்ற விதத்தில் உறுதியான மேற்பரப்பு அமைக்கப்பட்டு அதில் வீடுகள் கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த இடத்தில் நிலச்சரிவொன்றுக்கான அபாயம் இருப்பதாக 2004 ஆம் ஆண்டில் ஒருமுறை சுட்டிக்காட்டப்பட்டதாகவும், 2013 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது நிலச்சரிவுக்கான அபாயம் மிகக்குறைந்தளவிலேயே இருப்பதாகவும், எனினும் நிலச்சரிவொன்று ஏற்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்குமெனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனர்த்தம் ஏற்பட்ட பகுதியில் வசிக்கும், வீட்டை இழந்த பெண்ணொருவர் தெரிவிக்கும்போது, அவ்விடத்தில் நிலச்சரிவொன்றுக்கான அபாயம் உள்ளதாக அங்கு குடியிருந்தவர்க்ளுக்கு ஏற்க்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்றும், எனினும் இந்தளவுக்கு அழிவை ஏற்படுத்தும் அனர்த்தமாக இருக்குமென தான் நம்பியிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் சுமார் 60.000 குடியிருப்பாளர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சதுப்பு நிலங்கள் மற்றும் களிமண் நிலங்கள் தொடர்பில் பாண்டித்தியம் பெற்ற, புவியியல் நிபுணரான ” Inger-Lise Solberg” தெரிவிக்கையில், சாதாரணமாக நிலச்சரிவுகள் ஏற்படும்போது, அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னதான அறிகுறிகளை வைத்து சுதாகரித்துக்கொள்ள முடியும் என்றாலும், சதுப்பு நிலங்கள் மற்றும் களிமண் பிரதேசங்களில் நிலச்சரிவு ஏற்படும்போது அவை மிக விரைவாக ஏற்படுவதால், முன்கூட்டிய அறிகுறிகளை கண்டறிவது கடினமானதென தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி:

https://news.tamilmurasam.com/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%81/
பகிர்ந்துகொள்ள