நோர்வேயில் வேகமாக பரவும் “கொரோனா”! பரிந்துரைகளை மேலும் இறுக்குவதற்கு நடவடிக்கை!!

You are currently viewing நோர்வேயில் வேகமாக பரவும் “கொரோனா”! பரிந்துரைகளை மேலும் இறுக்குவதற்கு நடவடிக்கை!!

நோர்வேயில் மிக வேகமாக “கொரோனா” வைரசு பரவிவரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 704 புதிய தொற்றாளர்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 101 பேர், தலைநகர் ஒஸ்லோவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தின் பின்னதாக நாடளாவிய ரீதியில் அவதானிக்கப்பட்ட அதியுச்ச தொற்றாளர்களின் தொகை இதுவென கூறப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மாகாண, மாநகர, நகரசபை நிர்வாகங்கள் அவசர சந்திப்புக்களை நடாத்தியுள்ளதோடு, பரவலை கட்டுப்படுத்தும் அவசர வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் ஒஸ்லோவில் நடைமுறையிலுள்ள இறுக்கமான பரிந்துரைகளை நாட்டின் ஏனைய இடங்களுக்கும் விரிவாக்குவதற்கு அந்தந்த இடங்களின் நிர்வாகங்கள் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் ஒஸ்லோ தவிர்ந்த பெருநகரங்களான, Trondheim, Bergen, Tromsø உள்ளிட்ட இடங்களிலும் பரவல் அதிகமாகி வருவதால்,

  1. வீடுகளில் இருந்தபடியே அலுவலக பணிகளை கவனித்தல்.
  2. பாடசாலை பிள்ளைகள் வீடுகளில் இருந்தபடியே இணையவழியூடாக கற்கைகளை தொடருதல்.
  3. பொதுப்போக்குவரத்துக்களை பயன்படுத்துபவர்கள், 1 மீட்டர் இடைவெளியை பேணமுடியாதவிடத்து, முகக்கவசத்தை கட்டாயமாக அணிவது.
  4. உணவகங்களுக்கும், மதுபானச்சாலைகளுக்கும் செல்லும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பதிவேட்டில் பதிவு செய்தல்.
  5. தனியார் வீடுகளில் அதிகபட்சமாக 10 விருந்தினர்களை மட்டுமே அனுமதித்தல்.

போன்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, மேற்படி நகரங்களின் நிர்வாகங்கள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள